Show all

பிரதமர் நரேந்திரமோடியை ரங்கசாமி சந்தித்தார்

புதுவையில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தது. பருவமழையுடன் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்தது.

தொடர் கன மழையினால் புதுவையில் 4 பேர் உயிரிழந்தனர். 7 ஆயிரம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டன. தாழ்வான பகுதிகளில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வௌ;ளம் புகுந்தது. சுமார் ஆயிரம் குடிசை வீடுகள் சேதமடைந்தன.

புதுவையில் உள்ள பெரும்பாலான சாலைகள் மழை நீரால் பலத்த சேதமடைந்தன. விவசாய, கட்டிட, கூலி தொழிலாளிகள் வேலையிழந்து தவிப்பிற்கு ஆளாகினர். மழை சேதத்திற்கு நிவாரணமாக முதல்கட்டமாக ரூ.182 கோடியே 45 லட்சம் வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் பாதிப்புகளும், சேதமும் அதிகமானது. எனவே கூடுதலாக ரூ.200 கோடி மழை நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதினார். இத்தகைய சூழலில் சிலநாட்களுக்கு முன்பு மத்திய அரசு ரூ.50 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்கியது.

மழையால் பாதிக்கப்பட்ட புதுவை, காரைக்காலில் உள்ள அனைத்து குடும்ப அடையாள அட்டைகளுக்கும் தலா ரூ.4 ஆயிரம், பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம், விவசாய பயிர்கள், ஆடு, மாடு, கோழிகளை இழந்தவர்களுக்கு என்று ரூ.150 கோடிக்கு நிவாரணங்களை ரங்கசாமி அறிவித்திருந்தார். முதல்கட்டமாக ரேஷன் கார்டுகளுக்கு மழை நிவாரணம் இன்று முதல் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூடுதலாக மழை நிவாரணம் வழங்கவேண்டும் என்று பிரதமரை வலியுறுத்துவதற்காக முதல்அமைச்சர் ரங்கசாமி நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் பாலன் சட்டமன்ற உறுப்பனரும் சென்றார்.

நேற்று பகல் 12 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை ரங்கசாமி சந்தித்தார். அப்போது கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கிக்கூறி கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தானே புயலின் போது நடுவண் அரசு தர வேண்டிய ரூ. 70 கோடி நிலுவைத் தொகையைத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் வளர்ச்சி திட்டங்களுக்கும் கூடுதலாக நிதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பின்போது ராதாகிருஷ்ணன் பாராளுமன்ற உறுப்பினர் பாலன் சட்டமன்ற உறுப்பனர் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக முதல்அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோரையும் சந்தித்து பேசினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.