Show all

நாவலந்தேய நாடாளுமன்ற தேர்தல் தமிழ்த்தொடராண்டு:5126 (2024)

கூகுள் மொழிபெயர்ப்பில் INDIA (இன்டியா) என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு ஹிந்தி மொழி பெயர்ப்பைக் கேட்டால் பாரத் (भारत) என்று வருகிறது. 

கூகுள் மொழிபெயர்ப்பில் INDIA (இன்டியா) என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு தமிழ் மொழிபெயர்ப்பைக் கேட்டால் வெறுமனே ஆங்கிலத்தின் தமிழ் ஒலிபெயர்ப்பாக இந்தியா என்று வருகிறது. 

இந்தியாவின் தமிழ்ப்பெயர் நாவலந்தேயம். தமிழில் நாவலந்தேயம் என்றே வரவேண்டும். அதற்கு கூகுள் மொழிபெயர்ப்புத் தளம் ஆவன செய்ய வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

இன்று: 04,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5125.  

6,சித்திரை,5126 தொடங்கி (ஏப்ரல் 19 முதல்) நாவலந்தேய நாடாளுமன்ற தேர்தல் தமிழ்த்தொடராண்டு:5126 ஏழு கட்டவாக்குப்பதிவுகளில் நடத்தப்படுகிறது.

நாவலந்தேயத்தின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்த்தொடராண்டு:5126 (2024) ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் சித்திரை ஆறில் (ஏப்ரல் 19) தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை வைகாசி இருபத்தியிரண்டில் (ஜூன் 4) நடைபெறும்.

சித்திரை ஆறில் (ஏப்ரல் 19) தொடங்கி வைகாசி பத்தொன்பது  (ஜூன் 1) வரை மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக சித்திரை ஆறில் (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதுமே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

சித்திரை ஆறில் (ஏப்ரல் 19) நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மீதமுள்ள இடங்களுக்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இரண்டாம் கட்டம் சித்திரை பதின்மூன்று (ஏப்ரல் 26) அன்றும், மூன்றாம் கட்டம் சித்திரை இருபத்திநான்கு (மே 7) அன்றும், நான்காம் கட்டம் சித்திரை முப்பது (மே 13) அன்றும் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு வைகாசி ஏழு (மே 20) அன்றும், ஆறாம் கட்டம் வைகாசி பனிரெண்டு (மே 25) அன்றும், இறுதியாக ஏழாம் கட்ட வாக்குப் பதிவு வைகாசி பத்தொன்பது (ஜூன் 1) அன்றும் நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை வைகாசி இருபத்தியிரண்டில் (ஜூன் 4) அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அட்டவணைப்படி, தமிழ்நாட்டில் சித்திரை ஆறில் (ஏப்ரல் 19) வாக்களிக்கும் மக்கள், தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். வைகாசி இருபத்தியிரண்டில் (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

கர்நாடகா மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு இரண்டாம் கட்டத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஐந்தாம் கட்டத்திலும், நாட்டின் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு ஏழாம் கட்டத்திலும் வாக்குப் பதிவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தொடராண்டு:5126 நாவலந்தேய நாடாளுமன்றத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும், அதில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள், காவலர்கள் என 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரியவருகிறது.

இந்த தேர்தலில் 97 கோடி மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47.15 கோடி. மேலும் 1.82 கோடி வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். 21 முதல் 30 அகவைக்குட்பட்ட வாக்காளர்கள் 19.7 கோடி பேர். மேலும் 82 லட்சம் வாக்காளர்கள் 85 அகவைக்கு மேற்பட்டவர்கள்.

85 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கும் 40 விழுக்காடு குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதிகள் செய்து தரப்படும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்தியாவின் 543 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் மக்களவைத் தேர்தல் மிகப்பெரிய அரசியல் திருவிழாவாக நடந்தேறி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகளும், மகாராஷ்டிராவில் 48, மேற்கு வங்கத்தில் 42, பிகாரில் 40 மற்றும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளன.

இந்தத் தேர்தலில் ஒன்றிய ஆட்சிக்கு முனையும், பாரதிய ஜனதா, காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி என ஆறு கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன.

நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை மட்டும்கொடுத்து வரும் மாநிலக்கட்சிகள் ஐம்பதுக்கு மேலானவை களத்தில் உள்ளன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,921.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.