03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5126:

மனித பிறப்பின் அடிப்படை இருத்தலும் வளர்தலும் ஆகும்.

என்னுடைய முதலாவது- நானும் என்னுடைய தமிழும் (தாய்மொழி). இவை இரண்டும் என்தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள். தன் குருதியைப் பாலாக்கி என் உடல் வளர்த்தார். தன் மூச்சுக்காற்றால் எனக்கு தமிழ் தந்தார். நானும் என் தமிழும் எனக்கு என் தாய் தந்த முதல் உடைமைகள். இந்த முதலாவது என் இருத்தல் ஆகும்.

என்னுடைய இரண்டாவது- என் வளர்ச்சியாக என்னோடு இணைந்த என் தலைவி. 

என்னுடைய மூன்றாவது என் பிள்ளைகள்.

என்னுடைய நான்காவது எங்கள் குடும்பம் (வீடு) 

என்னுடைய ஐந்தாவது என்னுடைய கலை.

என்னுடைய ஆறாவது என்னுடைய தொழில்நுட்பம்.

என்னுடைய ஏழாவது என்னுடைய செல்வம்.

என்னுடைய எட்டாவது என்னுடைய புகழ்.

என்னுடைய ஒன்பதாவது என் இருத்தலுக்கும் (எனக்கும் என்மொழிக்கும்) வளர்தலுக்கும் (என் தலைவி, என் பிள்ளைகள், என் குடும்பம் அல்லது வீடு. என்னுடைய கலை, என்னுடைய தொழில் நுட்பம், என்னுடைய செல்வம், என்னுடைய புகழ்) உகந்த நாடு. 

யாதும் ஊரே (நாடு) யாவரும் கேளிர்.

பல ஆயிரம் ஆண்டுகளாக என்னுடைய இருத்தல் அடையாளமோ, வளர்தல் அடையாளமோ மாறத அடிப்படை கொண்டதாகும்.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை, வாழிய நிலனே

என்று ஆற்றங்கரையை தேடிய நாடோடி வாழ்க்கை மேற்கொள்ளாமல், இருந்த நிலத்தை அப்படியே திருத்தி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வாழ்ந்த பெருமைக்குரியவர்கள் தமிழ்முன்னோர்.

தமிழ்மண்ணில் விளையாட்டுத் திரமும் வீரமும் செறிந்தவர்கள் சேரர், சோழர், பாண்டியர் என ஆட்சி நடத்தினர்.

என்னுடைய முந்தைய தேயம் நாவலந்தேயம் என்று அறிய முடிகிறது. அதன் மீது பற்பல அயல் ஆதிக்கங்கள். முதலாவதாக வந்த ஈரேனியன் (ஆரியன்) இதை பாரத நாடாக்க மகாபாரதம் என்கிற பேரிலக்கியம் படைக்கிறான். 

தமிழ்முன்னோர் கப்பல்கட்டி கடற்கரை உள்ள நாடுகளையெல்லாம் தம் வணிகத்தால் அசத்திய போது. அசந்து போன ஐரோப்பியர்கள் நாவலந்தேயத்தை 'ந்தேயா' என்று ஒலித்து அமெரிக்கா வரை தேடி இந்தியாவைக் கோழிக்கோட்டில் கண்டறிந்தனர். 

தமிழ்நாடும் உலகினரும் நாவலந்தேயத்தை இந்தியா என்கின்றனர். இந்திய மண்ணில் மீதி அனைவரும் பாரதம் என்கின்றனர். கட்சிகள்: பாரதிய ரஷ்டிரிய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி. வங்கிகள்: பாரத் ரிசர்வ் பைங், பாரதிய ஸ்டேட் பைங். ரூபாய் தாளில், காசுகளில் பாரத்.

கடந்த ஏழு ஆண்டுகளில், ஒன்பது இலட்சத்து இருபத்தி நான்காயிரம் பணக்கார இந்தியர்கள் இந்திய குடியுரிமையை விட்டு கொடுத்துவிட்டு வேறு நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை விட்டு வெளியேறுகிற மக்கள் பிழைப்புக்காகச் செல்லவில்லை, இதேபோல் பஞ்சம் காரணமாகவோ, போர் காரணமாகவோ செல்லவில்லை. இந்திய குடியுரிமையை விட்டு வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் அனைவரும் அதிகம் படித்தவர்கள், பணக்காரர்கள், வணிகம் மற்றும் தொழில்துறையில் ஓரளவு வளர்ந்தவர்கள். 

இவ்வாறன நிலையில்- இந்தியாவில், அவர்களின் அடுத்த தலைமுறைக்கான கல்வி குறித்தும், தங்களின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும் அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறது- நடப்பு ஒன்றிய ஆட்சியாளர்களின் அரசியல் நிலைபாடு- என்பதாக வல்லுனர்கள் கணிக்கின்றனர்.

நாட்டுப்பற்று ஆட்சியாளர்களுக்கும், ஆட்சிக்கு முயலுகிறவர்களுக்கும் தேவை! 

எந்த நாட்டில் நாட்டுப்பற்று மக்கள் மீது நிர்பந்திக்கப் படுகிறதோ அந்த நாடு மக்களுக்கான நாடாக இல்லை என்று பொருள். ஆட்சியாளர்கள் மக்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்கள் என்று பொருள்.

மக்கள் வரியில்தான் நாடு இயங்குகிறது! 

நாட்டுப்பற்றோடு ஆட்சியாளர்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல் மறு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும்.

மாறாக மறு உற்பத்தி சாராத அதிகாரிகள் சம்பளமாக அதை வீணடிக்கக் கூடாது. அதிகாரிகள் ஊழலின் மறு வடிவம். அதிகாரிகள் என்று ஒற்றை ஆளும் நாட்டுக்குத் தேவையில்லை.

இந்திய விடுதலையின் போது, இந்தியாவின் பணமதிப்பை பிரித்தானியர் ஒரு டாலராக விட்டுச்சென்ற நிலையில், இன்று இந்தியாவின் பணமதிப்பு 0.013 ஆக சரிக்கப்பட்டு கிடக்கிறது. அதாவது அப்போது ஒரு டாலர் மதிப்புள்ள பொருளை இறக்குமதி செய்ய இந்திய ஒரு ரூபாயைக் கொடுத்தால் போதும். ஆனால் இன்றைக்கு ஒரு டாலர் மதிப்புள்ள பொருளை இறக்குமதி செய்ய இந்தியாவின் எண்பது ரூபாயைக் கொடுக்க வேண்டும்.

இந்திய விடுதலையின் போது, பிரித்தானியர், இந்தியாவின் எந்தக் குடிமகனின் மீதும் ஒற்றை காசும் கடன் விட்டுச் சொல்லாத நிலையில், இன்றைக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகன் மீதும் அறுபதாயிரம் ரூபாய் கடன் பற்று வைக்கப்படுகிறது.

இதற்கு மக்களா பொறுப்பு? கடந்த எழுபத்தி நான்கு ஆண்டுகளாக நாட்டுப்பற்று இல்லாமல் நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள்தானே பொறுப்பு.

என் இருத்தலுக்கும் (எனக்கும் என்மொழிக்கும்) வளர்தலுக்கும் (என் தலைவி, என் பிள்ளைகள், என் குடும்பம் அல்லது வீடு. என்னுடைய கலை, என்னுடைய தொழில் நுட்பம், என்னுடைய செல்வம், என்னுடைய புகழ்) உகந்த நாடு எதுவோ, அதுவே என் நாடே. 

யாதும் ஊரே (நாடே) யாவரும் கேளிர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,951.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.