Show all

அணுமின் நிலையத்தில் அணு கசிவு ஏற்பட்டிருப்பதால் அங்கு அவசரநிலை அறிவிப்பு

குஜராத்தில் கக்ராபர் என்ற இடத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் அணு கசிவு ஏற்பட்டிருப்பதால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் உள்ளிட்ட யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் கக்ராபரில் அணு மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அணு உலையில் இன்று திடீரென்று கனநீர் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனால்  அணு கதிர்வீச்சு பரவியதாக கூறப்படுகிறது.  இதனால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  மின் நிலையத்தின் உற்பத்தி உடனடியாக  நிறுத்தப்பட்டது. அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வீடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டது. அப்பகுதியில் உடனடியாக சோதனை நடத்தப்பட்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டது என்றாலும்  அணு கதிர்வீச்சு எதுவும் தொழிற்சாலைக்கு வெளியே பரவவில்லை என்று உறுதி அளித்தனர்.

இது குறித்து தேசிய அணுசக்தி கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறுகையில், கக்ராபர் அணு உலை உடனடியாக பாதுகாப்புடன்  மூடப்பட்டது. அணு கதிர்வீச்சு எதுவும் பரவவில்லை. எந்த தொழிலாளிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் அவசரநிலை அறிவிப்பை நாங்கள் வெளியிட்டோம் என்றனர். அணுசக்தி கமிஷன் தலைவர் டாக்டர் சேகர்பாசு கூறுகையில், அணு உலை படிப்படியாக குளிரடைந்து வருகிறது. தற்போது பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

கனநீர் கசிவால் அணு உலையின் குளிரூட்டும் பகுதி சற்று நேரம் பாதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.