Show all

அ.தி.மு.க.வினர் என்பதால் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறமாட்டேன்

3மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து அ.தி.மு.க.வினர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், மரண தண்டனை கூடாது என்ற தி.மு.க.வின் கருத்தில் இருந்து மாறமாட்டேன் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

     கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டது பல ஆண்டுகளுக்கு முன்பு என்பதால், அதுபற்றிய விளக்கத்தைச் சற்று விரிவாக நினைவுபடுத்துவது அவசியமென்று கருதுகிறேன். கொடைக்கானலில் அரச வரையறை செய்திருக்கும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளை மீறி 7 மாடிகள் கொண்ட, பிளசண்ட் ஸ்டே ஓட்டலுக்கு சட்ட விரோதமாக அனுமதி அளித்தது தொடர்பாக, கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் இன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு நடைபெற்று 2-2-2000 அன்று வழக்கை விசாரித்த இரண்டாவது தனி நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துகொள்ள அனுமதி அளிக்கும் வகையில் 3-3-2000 வரை தீர்ப்பின் அமலாக்கத்தை நிறுத்தியும் வைத்தார்.

இந்தத் தீர்ப்பு கூறப்பட்டவுடன், நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கூடியிருந்த அ.தி.மு.க.வினர் அங்கேயே வன்முறையில் இறங்கினர். அந்த வழியாக வந்த பஸ்களை அடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த கடைகள் மீது கல்வீசித் தாக்கியதோடு கடைகளைச் சூறையாடினர்.

 

அப்போது கோவை வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 2 பஸ்களில் கிருஷ்ணகிரி அருகே உள்ள பையூர் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்துவிட்டு கோவைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த பஸ்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி மாணவிகள் உள்ளேயே வைத்து உயிரோடு கொளுத்தப்பட்ட காரணத்தால் 3 மாணவிகள், நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி, விருத்தாசலத்தைச் சேர்ந்த காயத்ரி, சென்னையைச் சேர்ந்த ஹேமலதா ஆகியோர் எரிந்து சாம்பலானார்கள்.

 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த முனியப்பன், ரவீந்திரன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகிய 3 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதே ஆண்டில் உத்தரவிட்டது.

 

அந்த உத்தரவிற்கு தடை விதிக்கக்கோரி குற்றவாளிகள் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தும், தூக்குத்தண்டனையை உறுதி செய்தும் 2010-ல் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் சார்பில் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டதோடு, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரி குற்றவாளிகள் சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஏற்கனவே இவர்களின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ள பட்சத்தில் தண்டனையைக் குறைத்தால் அது குற்றவாளிகளுக்கு இரட்டை சலுகைகள் வழங்கியது போல் ஆகிவிடுமே என்று கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் குற்றவாளிகளின் சீராய்வு மனுவினை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார்கள்.

மரண தண்டனையே கூடாது என்பது தான் தி.மு.க.வின் கருத்து என்பதை நான் பலமுறை கூறியிருக்கிறேன். எனவே அ.தி.மு.க.வினர் மீதுள்ள தண்டனை என்பதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நான் கூறமாட்டேன். அது யாராக இருந்தாலும் மரண தண்டனை கூடாது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 

    

 

 

     

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.