Show all

கண்டிக்கத்தக்க பொறுப்பற்ற நிகழ்வு! மத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை பறிபோனது

மத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை பறிபோன சம்பவம் சோகத்தையும், பரபரப்பபையும் ஏற்படுத்தியுள்ளது.

01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கண் மருத்துவமனையில் ‘தேசிய பார்வையின்மை தடுப்பு திட்டம்’ என்ற நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் 14 பேருக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு மறுநாளே 14 பேரில் 11 பேர் தங்களது கண் பார்வையினை இழந்துள்ளனர். 

இதையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஒரு மாதத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு கவனஅறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்துமாறு முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது கீச்சுப் பதிவில் கூறியிருப்பதாவது:

11 பேர் கண் பார்வை இழந்ததாக அஞ்சப்படும் சம்பவம் மிகவும் போகூழ் வசமானது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஏற்கனவே இதுபோன்ற தவறை செய்துள்ள நிலையில் மீண்டும் அந்த மருத்துவமனை இயங்க எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது? என்று விசாரணை நடத்தப்படுகிறது.

விசாரணைக்கு பிறகு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீதும், மருத்துவமனை நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதிஉதவியும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்தப் பொறுப்பற்ற நிகழ்வுக்கு கண்டனத்தைப் பதிவு செய்வதோடு, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதியுதவி ரூ.50 ஆயிரம் என்பது மிக அற்பமானது, குறைந்த பட்சம் 5லட்சமாவது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,248.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.