Show all

அருண்ஜெட்லியின் புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டியது உலக வங்கி! வரி விகிதம் இந்தியாவில்தான் அதிகம்

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சரக்கு-சேவை வரி விதிப்பு நடைமுறையில் உள்ள 115 நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் அதிகபட்ச வரியாக விதிக்கும் நாடுகளில் இரண்டாவதாக உள்ளது என்று உலக வங்கி தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது. 

நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மோசமான நிதி நிலைமை போன்றவற்றிற்கு ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் விருப்பம் போல வரிவிதிப்பு முறையை செயல்படுத்துவதுதான் காரணம், மற்ற நாடுகளைப் பாருங்கள், அந்த நாடுகள் எல்லாம் சரக்கு-சேவை வரிவிதிப்பு முறையை செயல்படுத்துவதால்தான் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளன என்று சப்பைக் கட்டு காரணத்தை சொல்லி வந்தனர். அதற்கு ஒரே தீர்வு என்பது வாட் வரிவிதிப்பு முறையை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக சரக்கு-சேவை வரி வரிவிதிப்பு முறையை செயல்படுத்தினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் விலைவாசி குறையும் என்று கருத்;துப்பரப்புதல் செய்யப்பட்டது. சரக்கு-சேவை வரி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, ஒரே நாடு ஒரே வரிவிதிப்பு முறை என்ற முறையில் வரி விகித 15 விழுக்காடாகவோ அல்லது 18 விழுக்hடாகவோதான் இருக்கும் என்றும் அனைத்து விதமான பொருட்களும், சேவைத் துறைகளும் சரக்கு-சேவை வரிவிதிப்பு வரம்பிற்குள் கொண்டுவரப்படும் என்று சத்தியம் செய்யாத குறையாக நம்மை நம்ப வைத்தனர். 

நம் நாடு பொருளாதார வளர்ச்சியடைந்தால்தான் நாமும் வளர்ச்சியடைவோம், நம்முடைய வாழ்க்கைத்தரமும் உயரும், விலைவாசி குறையும் என்ற நம்பிக்கையில், சரி என்று சரக்கு-சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதற்கு தலையசைத்தோம். ஆனால், சரக்கு-சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படும்போது வரிவிகித கட்டமைப்பானது 0விழுக்காடு, 5விழுக்காடு, 12விழுக்காடு, 18விழுக்காடு மற்றும் 28விழுக்காடு என ஐந்து கட்டமைப்பாக அமல்படுத்தப்பட்டது. 

இதில், தங்க நகைகளுக்கு மட்டும் விதிவிலக்காக 3 விழுக்காடும், விலைமதிப்பற்ற கற்களுக்கு 0.25 விழுக்காடும் சரக்கு-சேவை வரி விதிக்கப்பட்டது. அதுபோலவே, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், ஏற்றுமதிக்கும் சரக்கு-சேவை வரிவிதிப்பில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டது. ஆனால், அதே சமயத்தில் கள்ளத்தனமாக நடுவண், மாநில அரசுகளுக்கு பெருமளவில் வருவாயை ஈட்டித்தரும் மதுபானம், பெட்ரோல், டீசல், ரியல் எஸ்டேட், ஆயத்தீர்வை மற்றும் மின்சாரம் போன்றவற்றை சரக்கு-சேவை வரி வரம்பிற்குள் சேர்க்காமல் தவிர்த்துவிட்டார்கள். 

பெட்ரோலியப் பொருட்கள், மதுபானம் ஆகியவற்றை சரக்கு-சேவை வரிவரம்பிற்குள் கொண்டுவந்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதால், இவற்றை சரக்கு-சேவை வரி வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்று வர்த்தகர்களும் தொழில்துறையினரும் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். 

நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், உட்சபட்ச வரியான 28 விழுக்காட்டைக் குறைக்கவும், 12 விழுக்காட்டையும் 28 விழுக்காட்டையும் ஒன்றிணைக்கவும் கூடிய விரையில் ஆவண செய்வதாக உறுதி மட்டும் அளித்துக் கொண்டே இருப்பார். ஆனால், ஒவ்வொரு முறையும் சரக்கு-சேவை குழு கூட்டம் முடிந்தவுடன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அடுத்த மாதம் நடைபெறும் சரக்கு-சேவை குழு கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று ஒவ்வொரு முறையும் தட்டிக் கழித்து வருகிறார். நம் நாட்டில் தான் சரக்கு-சேவை வரிவிழுக்காடு அதிகம் என்று அனைத்து தரப்பினரும் ஆதங்கப்படுகின்றனர். 

நம்முடைய ஆதங்கத்திற்கு வலு சேர்ப்பதுபோல, தற்போது உலக வங்கியும், இந்தியாவில் தான் சரக்கு-சேவை வரிகள் அதிகமாக உள்ளன என்று தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. 

உலக வங்கி, ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் தன்னுடைய ஆண்டறிக்கையில், சரக்கு-சேவை வரிவிதிப்பு முறையைப் பற்றி குறிப்பிடும்போது, தற்போது உலக நாடுகளில் 115 நாடுகள் சரக்கு-சேவை விரிவிதிப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் 49 நாடுகள் ஒற்றை வரிவிதிப்பு முறையை கையாண்டுவருகின்றன. 28 நாடுகள் இரட்டை வரி கட்டமைப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன. 

இந்தியா, பாகிஸ்தான், இத்தாலி, லக்க்ஷம்பர்க் மற்றும் கானா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே நான்கு முதல் ஐந்து விதிமான வரிகட்டமைப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

மற்ற நாடுகளில் எல்லாம் சரக்கு-சேவை வரிவிதிப்பு கட்டமைப்பில் எந்தவிதமான சிக்கல்களும் எழுவதில்லை.

இந்த வகையில் ஆராய்ந்து பார்த்தால், உலகில் அதிகபட்ச சரக்கு-சேவை வரி விதிப்பு கட்டமைப்பை அமல்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று உலக வங்கி தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,729.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.