Show all

வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு, அல்லது பதியும் வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் முறைகேடு! அகிலேஷ் யாதவ் புகார்

நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு அல்லது பா.ஜனதாவுக்கு வாக்குகள் விழுவதுபோல் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேச மாநிலம் சாய்பாயில் நேற்று வாக்களித்த பிறகு, தேர்தல் ஆணையம் மீதான தனது குற்றச்சாட்டை 
சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
இந்தியா முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறாக உள்ளன. அல்லது யாருக்கு வாக்களித்தாலும் பா.ஜனதாவுக்கு ஓட்டு விழுவதுபோல் உள்ளன. தேர்தல் அலுவலர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை. உத்தர பிரதேசத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
இது ரூ.50 ஆயிரம் கோடி செலவில் நடத்தப்படும் தேர்தல் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள குற்றவியல் அலட்சியம். 
என்று அவர் பதிவில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி பிரதிநிதிகள் லக்னோவில் தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஸ்வரை சந்தித்து எந்திரங்கள் கோளாறு, பாஜக அமைச்சர் பணம் கொடுத்தது ஆகியவை குறித்து புகார் தெரிவித்தனர்.
இதுபற்றி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி திவாரி கூறும்போது, 'சமாஜ்வாடி கட்சியினர் மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா தனது மகள் சங்கமித்ரா மவுரியாவுக்கு சாதகமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு குறித்தும் புகார் கொடுத்துள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து இதுதொடர்பாக விரிவான அறிக்கை கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் படும்' என்றார். 
தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக வாக்கு பதிவு எந்திரம் குறித்து, ஏனோதானோவென்று குற்றஞ்சாட்டி விட்டு, நாளை பாஜக மீண்டும் பதவியேற்கும் வாய்ப்பு ஏற்படும் போது, ஒப்புக்கு லபோ திபோ என்று குதித்து விட்டு, அடுத்த தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று, தங்களுக்கு வரவிருக்கிற அரசியல் ஆதாயங்கள் குறித்தான கணக்கில் இறங்கி விடுவார்கள் எல்லா அரசியல்வாதிகளும். நாட்டின் எந்தக் குற்றங்குறைகளாலும் மக்கள்தாம் தொடர்பாதிப்புகளைச் சுமப்பார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,132.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.