Show all

இதுவல்லவா நடுவுநிலைமை! பெண் ஊழியர்களே வேண்டாம் என நடுவர்கள் கோரிக்கையாம்

தலைமை அறங்கூற்றுவர் மீதான பாலியல் புகாரை அடுத்து, அலுவலகங்களில் ஆண்களை பணியமர்த்துமாறு உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வானளாவ உயர்ந்த ஒரு கவிஞன் மீது பாலியல் புகார் கிளப்பப்பட்ட போது, நாம் செய்வதறியாது திகைத்து நின்றோம். இருவேறு பாலினர் மீதான ஏற்றதாழ்வு முன்னெடுத்து விடப்படக் கூடாது என்று கவனமாக இருந்தோம். இது நிகழ்ந்தது கலைத்துறையில். ஒரு சாரார் மீது குற்றத்தை முழுமையாக்கி, மாற்று சாரார் துறையிலிருந்தே அப்பறப் படுத்தும் முயற்சி குறித்தெல்லாம் கருத்து எழவேயில்லை. அந்தப் பிரச்சனையில் அவர்கள் இருவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பார்வையாளர்களாகவே இருந்தோம். தவறு நடந்தது அல்லது நடக்கவில்லை. ஆனால் கலைத்துறையில் பாலியல் ஏற்றதாழ்வு இல்லை என்பதை தெளிவாக நம்மால் உணர முடிந்தது. மகிழ்ச்சி! 

இன்றைக்கு உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகோய் மீது, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். 

இது அடிப்படை ஆதாரமற்ற பொய் எனக் கூறிய ரஞ்சன் கோகோய், (மனம் நொந்து குமுறிய அந்த மானக்கவிஞன் போலல்லாது) தன்னை மட்டும் நியாயப் படுத்தும் முயற்சியைத் தாண்டி, அறங்கூற்றுத்துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி தனக்குப் பின்னால் ஒட்டு மொத்த அறங்கூற்றுத் துறையையும் சேர்த்துக் கொண்டார். 

இந்த இடத்தில்! பாலியல் ஏற்றதாழ்வு இங்கேயில்லை என்கிற அந்தக் கலைத்துறையின் கம்பீரம்: நடுநிலைத்துறை- நியாயத்துறை- சமத்துவத்துறை- சட்டத்துறை லேசாக ஆட்டம் கண்டது என்றே சொல்ல வேண்டும்.

இந்த இடத்தில்! கிளம்பியிருக்கிற பாலியல் சமத்துவம், மற்றும் உரிமைக்கு எதிரான அடுத்த அதிர்ச்சி:

'தலைமை அறங்கூற்றுவர் மீதான பாலியல் புகாரை அடுத்து, தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களை மாற்ற வேண்டும் என்று அறங்கூற்றுவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகோயை அறங்கூற்றுவர்கள் சந்தித்து 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

வாதியும், பிரதிவாதியும் சமமாக நடத்தப்பட வேண்டிய அறங்கூற்றுத்துறையில், குற்றச்சாட்டுக்கு உரிய பிரதிவாதியை தனிமைப் படுத்தி உண்மை நிலையறிய விசாரணை மேற்கொள்ள வேண்டிய அறங்கூற்றுத்துறையில்-  பிரதிவாதிக்குப் பின்னால் ஒட்டு மொத்த அறங்கூற்றுத் துறையும் வக்காலத்து வாங்கிக் கொண்டு களம் காண்பது பாமரனின் கண்ணில் பயத்தை உருவாக்கும் துறையாகத் தெரிகிறது அறங்கூற்றுத்துறை. 

இதற்கு முன்னாலே அறங்கூற்றுவர் கர்ணனின் குற்றசாட்டின் பேரிலிலும் இதேமாதிரியான பாகுபாடுகளே முன்னெடுக்கப் பட்டன. பலிகடாவாக்கப் பட்டார் கர்ணன். 

'அம்மா! அண்ணன் அடிச்சிட்டான்' தாயின் தண்டனை நிறைவேற்றம். அண்ணனுக்கு இரண்டு அடிகள். குற்றம் செய்யாமல் தாய் கொடுத்த தண்டனையை சீரனித்துக் கொள்ள முடியவில்லை.

தந்தை வந்ததும் தொடர்கிறது மேல்முறையீடு. தம்பியின் பொய்க்குற்றச்சாட்டு அம்பலமாகிறது. அண்ணனைத் தாய் அரவணைக்கிறாள். பரிசுப் பொருள்களோடு தந்தையின் சமாதானம். இது தமிழ்க் குடும்ப ஐயாயிர ஆண்டுகால பழமையின் வெளிப்பாடு. 

குற்றம் கண்டறிதலும், குற்றம் களைதலும், இவ்வாறானதாகவல்லவா இருக்க வேண்டும்.

 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,132.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.