Show all

இந்தியாவிற்காக பலியான இராணுவ வீரர்களில் இருவர் தமிழத்தைச் சேர்ந்தவர்கள்! கார்குடி, சவலாப்பேரியில் மக்கள் கண்ணீர் அஞ்சலி

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் பயங்கரவாத தற்கொலை படையினரால் கொல்லப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடல், அவரது சொந்த ஊரான அரியலூரின் கார்குடிக்கும், சுப்ரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியின் சவலாப்பேரிக்கும் கொண்டு வரப்பட்டது. அங்கு, கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

வியாழக்கிழமை அன்று, ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட சொகுசுந்தை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியதில் 40 நடுவண் ஆயுதக் காவல் படை வீரர்கள் வீரமணம் அடைந்தனர். அவர்களில், தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரும் அடங்குவர். அவர்களது உடல், காஷ்மீரில் உள்ள நடுவண் ஆயுதக் காவல் படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, நடுவண் அமைச்சர்கள், ராணுவ படையணித் தலைவர், காங்கிரஸ் தலைவர் ராகுல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

இன்று, வீரர்களின் உடல் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிவசந்திரன் உடல் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு, சிவச்சந்திரன் உடல் திருச்சி விமான நிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. முதலில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். சிவசந்திரன் உடலை பார்த்து அவர்களுடைய சகோதரர்கள் உட்பட நான்கு பேர், உறவினர்கள் கதறி அழுதனர். அமைச்சர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அங்கிருந்து, சிவசந்திரன் உடல் அரியலூருக்கு எடுத்து செல்லப்பட்டது. வழியில் ஏராளமான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சுமார் 4 மணியளவில், அவரது உடல் கார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு, குடும்பத்தினர், உறவினர் கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரசு மரியாதையுடன் சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் உயர் அதிகாரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

நடுவண் ஆயுதக் காவல் படை வீரர் சுப்ரமணியன் உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து வாகனம் மூலம், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அமைச்சர், அதிகாரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவில் தியாகத்திற்கு தமிழர்கள் விழுக்காட்டு அடிப்படையில் உரிய பங்கை ஆற்றுவதில் சளைத்தவர்கள் இல்லை. அவர்களின் இழப்பை ஈடு செய்ய: தியாகத்திற்கு மட்டும் விழுக்காட்டு அடிப்படையில் தமிழகத்தின் பங்கை பெறும் அதே வேளையில், அனைத்துத் துறைகளிலும் உரிய விழுக்காட்டை நடுவண் அரசில் ஆளுகிறவர்கள் தமிழத்திற்கு  வழங்க முயல வேண்டும் ; முதன்மையாக தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் பலியான இவர்கள் குடும்பத்தினருக்கு மிக உயர்ந்த இழப்பீட்டை நடுவண் அரசு வழங்க வேண்டும்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.