Show all

பாவம் அந்த ஏழுபேர்கள்! எதை நொந்து கொள்வது? ரஜினிகாந்த் அறியாமையையா? நடுவண் அரசின் அசட்டையையா?

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் போட்டு நடுவண் அரசுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்டது. அந்த மனுவை நடுவண் அரசு குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பவே இல்லை என்ற உண்மை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுவிடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த 7 பேரின் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம் 7 பேரின் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த 7 பேர் என்று கேட்டிருக்கிறார். ராஜீவ் கொலை குற்றவழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரைவிடுதலை செய்யக் கோரும் தீர்மானத்தை நடுவண் அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லையே? அது பற்றிய உங்களது கருத்து என்று கேட்டதற்கு- 
நான் இப்போது தான் வருகிறேன் எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்கிறார் ரஜினிகாந்த்
மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னர் மீண்டும் இது பற்றி இன்னொரு செய்தியாளர் கேட்டார். அதான் தெரியாதுன்னு சொன்னேனே என்று கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு கோபத்தை காட்டினார் ரஜினி. 

ஏழு பேர் விடுதலைக்கான தீர்மானத்தை நடுவண் அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததுதான் இங்கே நமக்கான முதன்மைச் சிக்கல். அதெல்லாம் ரஜினிக்கு தெரியாது என்பது ஒரு விசயமேயில்லை. நாம் நடுவண் அரசன் பொறுப்பற்ற தனத்தை தண்டிப்பதற்கான முயற்சியை விட்டு விட்டு ரஜினி மீது திசை திருப்பப் பட்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. அரசியலுக்கே வராத ரஜினியை மாய்ந்து மாய்ந்து அரசியலுக்கு அழைப்பதும், அவரிடம் அரசியல் குறித்த கேள்வியைக் கேட்டு, அவருக்கு அரசியல் தெரியவில்லை என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருப்பதும் கூட தமிழர்களை போலியை நோக்கி திசை திரும்பும் சதித்திட்டங்களில் ஒன்றே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,970. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.