Show all

அடுத்தது, பெண்- அமெரிக்க குடிஅரசுத்தலைவரா! அமெரிக்காவின் சமோயா தீவைச் சேர்ந்த துளசி கப்பார்டின் பெயரும் அடிபடுகிறது

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் குடிஅரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை.
 
இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடேன், இந்திய வம்சாவளி செனட்டர் கமலா ஹாரிஸ், செனட் சபை உறுப்பினர்கள் எலிசபெத் வாரன், கிர்ஸ்டன் கில்லிபிராண்ட் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

இந்த வரிசையில் அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினர், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, அமெரிக்காவுக்கு சொந்தமான சமோயா தீவை சேர்ந்த துளசி கப்பார்டின் அகவை 37 பெயரும் தற்போது இணைந்து இருக்கிறது. இவர், கடந்த தேர்தலில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது 4-வது முறையாக கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

ஜனநாயக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக எழுச்சி பெற்று வரும் துளசி கப்பார்ட், தற்போது நாடாளுமன்றத்தின் முதன்மை குழுக்களான ஆயுத சேவைகள் குழுமம் மற்றும் வெளி விவகாரங்களுக்கான குழுக்களில் அங்கம் வகித்து வருகிறார். இந்தியா-அமெரிக்க உறவுக்கு ஆதரவு, ஈராக் போருக்கு எதிர்ப்பு, சவுதிக்கு ஆயுதங்கள் விற்பனைக்கு எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகளால் ஜனநாயக கட்சியின் பலமிக்க குரலாக துளசி விளங்கி வருகிறார்.

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் குடிஅரசுத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட துளசிக்கு ஆதரவு வலுத்து வருகிறது. எனவே அவர் இந்த தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக் கிழமை நடந்த மாநாடு ஒன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முனைவர் சம்பத் சிவாங்கி, துளசி கப்பார்டை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர், துளசி கப்பார்ட், அமெரிக்காவின் அடுத்த குடிஅரசுத் தலைவராக வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

குடியரசு கட்சியை சேர்ந்தவரும், கடந்த பல குடிஅரசுத் தலைவர் தேர்தல்களுக்கு அந்த கட்சி சார்பில் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு இருந்தவருமான டாக்டர் சம்பத் சிவாங்கி, ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசிக்கு ஆதரவாக பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதைக்கேட்டதும் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். எனினும் பின்னர் பேசிய துளசி கப்பார்ட், சம்பத் சிவாங்கியின் கருத்தை ஆதரிக்கவோ, மறுக்கவோ இல்லை. அதேநேரம் குடிஅரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நன்கொடையாளர்களிடம் துளசி சார்பில் நிதி திரட்டும் வேலைகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் முதல்  பெண் பாராளுமன்ற உறுப்பினரான துளசி கப்பார்டுக்கு இந்திய வம்சாவளியினர் நடுவில் பெரும் ஆதரவு உள்ளது. அங்குள்ள முதன்மையான பல மாகாணங்களில் தேர்தல் வெற்றிக்கு இந்தியர்கள் முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக கட்சி சார்பில் துளசி கப்பார்ட், வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் முதல் 'சமோயா இன' வேட்பாளர் என்ற பெருமையை இவர் பெறுவார். இதைப்போல அவர் குடிஅரசுத் தலைவராகத் தேர்வானால் அமெரிக்காவின் இளமையான மற்றும் முதல் பெண் குடிஅரசுத்தலைவர் என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,970. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.