Show all

போராட்டக்காரர்கள் கீழ்மைத்தனமாய் நடந்து கொண்டார்கள்! திருப்திதேசாய் மிகுந்த வருத்தம்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு அடுத்த முறை யாருக்கும் சொல்லாமல், கொரில்லா தந்திரங்களுடன் வருவேன் என்று பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் ஆவேசமாகத் தெரிவித்தார்.

சபரிமலையில் சென்று பார்வை செய்ய முயலும் பெண்களுக்கு காவல் துறையினர் உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை என்றும் கொச்சி விமானநிலையத்தில், வன்முறைக் கும்பல் இருந்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

சுமார் 14 மணிநேரமாகத் திருப்தி தேசாய் வெளியே வர முடியாமல் விமான நிலையத்திலேயே முடங்கினார். நேரம் செல்ல செல்லப் போராட்டக்காரர்கள் எண்ணிக்கை கூடியதால், பெரும் பதட்டமான சூழல் நிலவியது.

சபரிமலை செல்லாமல் திரும்பிய திருப்தி தேசாய்;, புனே விமான நிலையத்தில் இறங்கியவுடன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாங்கள் கொச்சி விமானநிலையத்தை அடைந்தவுடன் போராட்டக்காரர்கள் தகாத வார்த்தைகளால் பேசி, எங்களை திரும்பிப் போகக்கூறி மிரட்டல் விடுத்தனர். எதுவேண்டுமானாலும் நடக்கலாம் எனக்கூறி காவல்துறையினர் எங்களைத் திரும்பிச்செல்ல கேட்டுக்கொண்டனர். எங்களால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அதனால், நாங்கள் திரும்பிச் செல்ல முடிவு செய்தோம். அடுத்த முறை நாங்கள் வரும்போது உரிய பாதுகாப்புகளை செய்து தருகிறோம் என்று காவல் துறையினர் எங்களிடம் தெரிவித்தனர். இந்த முறை நாங்கள் தகவல் தெரிவித்து விட்டு சபரிமலைக்குச் செல்ல முயன்றோம். ஆனால், அடுத்த முறை கொரில்லா தந்திரங்களுடன், சொல்லாமல் சபரிமலைக்குச் செல்வோம்

கொச்சி விமானநிலையத்தில் இருந்து சபரிமலைக்கு எங்களை அழைத்துச் செல்ல இரு வாடகைக்கார்கள் வந்திருந்தன. ஆனால், போராட்டக்கார்கள் ஓட்டுநர்களுக்கு மிரட்டல் விடுத்து திரும்பிச் செல்ல வைத்தனர். இதனால், கார் ஓட்டுநர்கள் எங்களை அழைத்துச்செல்ல முடியாது எனத் தெரிவித்தனர்.

சபரிமலைக்குத் பார்வை செய்ய வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கேரள அரசும், காவல்துறையினரும் துளியும் கவனம் எடுத்துக் கொள்ளவில்லை. கொச்சி விமானநிலையத்தில் கீழ்மைச் செயல்பாடுகளைக் காண முடிந்தது.

போராட்டக்காரர்கள் கீழ்மை (ரவுடி)த்தனமாகவும், வன்முறை சிந்தனையுடனும் நடந்து கொண்டனர், அவர்கள் அவ்வாறு நடந்திருக்கக் கூடாது. மோசமான வார்த்தைகளால் திட்டி, எங்களை மிரட்டினார்கள்.

எங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென்றால், போராட்டக்காரர்கள் நிலக்கல்லில் தெரிவிக்கலாம். ஆனால், நிலக்கல்லுக்கு வந்துவிட்டால், சாமி பார்வை செய்துவிடுவோம் என அச்சப்பட்டு எங்களை விமானநிலையத்திலேயே தடுத்துவிட்டனர். இவ்வாறு திருப்தி தேசாய் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,974.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.