Show all

சிறிசேனாவில் அடவடி முடிந்தபாடில்லை! சீனா பின்னணி, உலகநாடுகள் ஒப்புக்குச்சப்பாணி எதிர்ப்பு, இந்தியா மௌனம்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜபக்சேவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார். சிறிசேனாவின் இந்த துணிச்சல் அடாவடிக்குக் காரணம் சினாவின் பின்னணி, உலகநாடுகள் ஒப்புக்குச்சப்பாணி எதிர்ப்பு, இந்தியா மௌனம் என்பதாகச் சொல்லப் படுகிறது.

ராஜபக்சேவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மான வெற்றியையும், அதிபர் சிறிசேனா ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஏந்த சட்ட அடிப்படையும் இல்லாமல், சீனாவின் வற்புறுத்தல் காரணமாக, ரணில் விக்ரமசிங்கேவை தலைமை அமைச்சர் பதவியில்; இருந்து நீக்கிவிட்டு புதிய தலைமை அமைச்சராக ராஜபக்சேவை நியமித்தார் சிறிசேனா.

ஆனால் ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து பாராளுமன்றம் கலைக்கப் படுவதாகவும், தேர்தல் நடத்தப்படும் என்றும் அதிபர் சிறிசேனா அறிவித்தார். ஆனால் அதற்கு இலங்கை உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தடை பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதன் கிழமை ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக பேரவைத்தலைவர் கரு.ஜெயசூரியா அறிவித்து நிறைவேற்றினார். அதை ராஜபக்சே ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்காமல் ரகளையில் ஈடுபட்டனர். பேரவைத்தலைவரை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினார்கள்.

ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அதிபர் சிறிசேனாவும் ஏற்கவில்லை. இதனால் தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கேவா? அல்லது ராஜபக்சேவா? என்ற குழப்பம் நீடித்தது.

இதற்கிடையே பாராளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிபர் சிறிசேனா சம்மதித்தார். இதையடுத்து நேற்று பாராளுமன்றம் கூடியது. அப்போதும் ராஜபக்சேவின் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். மிளகாய் பொடி தூவியும், நாற்காலிகளை வீசியும் ரகளையில் ஈடுபட்டனர்.

ஆனாலும் கடும் அமளிக்கு இடையே அவையை நடத்திய பேரவைத்தலைவர் கரு.ஜெயசூரியா, ராஜபக்சே அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பாக நடத்தினார். இதில் 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக பேரவைத்தலைவர் அறிவித்தார்.

இதற்கிடையே 2-வது நம்பிக்கையில்லா தீர்மான வெற்றியையும் அதிபர் சிறிசேனா ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த லட்சுமண்யபா அபய் வர்தனே கூறும்போது, 'அதிபர் சிறிசேனா 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்கவில்லை. அதை அவர் நிராகரித்து உள்ளார்' என்றார். ஆனால் இது தொடர்பாக சிறிசேனா அலுவலகத்தில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, 'எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. எங்களது அரசை நாங்கள் அமைப்போம். சட்டப்படி நாங்கள் செயல்படுவோம்' என்றார்.

இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,974.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.