Show all

அநாகரீகத்தின் உச்சம்! கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருந்த ஹர்திக் படேலை, மேடையேறி கன்னத்தில் அறைந்த காட்டுமிராண்டி

குஜராத் மாநிலம், சுரேந்தர் நகரில் தேர்தல் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருந்த ஹர்திக் படேலை, மேடையேறி ஒருவன், திடீரென அவர் கன்னத்தில் அறைந்து தாக்கினான். சற்று நேரத்திற்கு முன் நிகழ்ந்த அரசியல் அநாகரீகத்தின் உச்சம்.
 06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: படேல் சமூகத்தின் முதன்;மைத் தலைவரான ஹர்திக் படேல் கடந்த நான்கு ஆண்டுகளாக படேல்சமூகத்துக்கு இடஓதுக்கீடு கேட்டு குஜராத்தில் பல போராட்டங்களை நடத்தினார், பலர் போராட்டத்தில் உயிரழந்தனர், ஹர்திக் படேலும் சிறையில் தள்ளப்பட்டார். 
இந்நிலையில், கடந்த மாதம் ஹர்திக் படேல் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அந்த கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் கருத்துப்பரப்புதல் செய்து வருகிறார்.
சுரேந்திரநகர் மாவட்டத்தில் இன்று காலை ஹர்திக் படேல் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஹர்திக் படேலுக்கு சால்வை அணிக்கும் வகையில் ஒருவன் மேடை மீது ஏறி வந்தான். அவன் கையில் சால்வை இருந்ததால், ஹர்திக் படேலுக்கு வழங்கப் போகிறான் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.
யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென ஹர்திக் படேலின் கன்னத்தில் பளார் என அவன் அறைந்தான். அதுமட்டுமல்லாமல் ஹர்திக் படேலை தாக்கவும் செய்தான். இதைப் பார்த்த மேடையில் இருந்தவர்கள் அவனைப் பிடித்து இழுத்துச் சென்றனர்.  ஹர்திக் படேலை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதன்பின் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
இந்த தாக்குதல் குறித்து ஹர்திக்படேல் கூறுகையில்,  'பாஜக என்னை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதனால்தான் தொடர்ந்து என் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால், அனைத்துக்கும் அமைதியாக இருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.
அரசியல் நாகரீகம் இல்லாது, மேடையேறி ஹர்திக் படேல் மீது தாக்குதல் நடத்தியவனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் யார் என்பது குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,127.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.