Show all

தமிழர் தலைகவிழ்க்க எடப்பாடி அணி! தெலுங்கர் தலைநிமிர சந்திரபாபு நாயுடு

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கடந்த சில நாட்களாக ஆந்திரப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்துவந்த கடும் அமளி, போராட்டத்தையடுத்து, அந்த மாநிலத்துக்கு ரூ.1,269 கோடியை நடுவண் அரசு ஒதுக்கியுள்ளது.

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு தகுதி கோரியும், சிறப்பு நிதி ஒதுக்கீடு கோரியும் ஆளும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மோடியிடம் கோரிக்கை வைத்தது.

மேலும், இந்தக் கோரிக்கைகளை முதன்;மயாக வைத்து நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜகவுடன், தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தது.

ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு தகுதி கிடைக்கவில்லை, புதிய தலைநகர் அமராவதிக்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு இல்லை,

இந்த முறை நடுவண் வரவு-செலவில் ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு இருக்கும், போலாவரம் அணைத் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு இருக்கும் என ஆந்திர மாநில அரசு மிகவும் எதிர்பார்த்தது. ஆனால், வரவு-செலவில் எந்த திட்டமும் அறிவிக்கவில்லை.

இதனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுமா? என பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கூட்டணியில் தொடர்வோம் என சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

ஆனால், வரவு-செலவு கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடும், தகுதியும் கோரி கடும் அமளியிலும், நாடாளுமன்றம் முன்பு போராட்டமும் நடத்தினர்.

நடுவண் அரசின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரு கட்சி நடுவண் அரசுக்கே குடைச்சல் கொடுக்கும் அளவு போராட்டம் நடத்தியது. இதனால், நாடாளுமன்றத்தின் பணிகளும் பல நேரங்களில் பாதிக்கப்பட்டன.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நடுவண் அரசை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவுக்குள் ஆந்திரா இல்லையா என்று கேள்வி எழுப்பினார். ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலம் முழுவதும் முழுக் கடையடைப்பு போராட்டமும் நடந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆந்திரா மாநிலத்தில் மக்களின் எதிர்ப்பு, பாராளுமன்ற உறுப்பினர்கள் அமளி ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்த மோடி அரசு, ரூ.1,269 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த தொகையில், ரூ.417.44 கோடி போலாவரம் பன்நோக்கு திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நீர்வளத்துறை இணை ஆணையர் ஆர்.பி.எஸ். வர்மா கூறுகையில், ‘போலாவாரம் பன்முக திட்டத்தை தேசிய திட்டமாக அரசு அறிவித்தபின் நடுவண் அரசு இதுவரை ரூ.4, 239கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் இப்போது ஒதுக்கீடு செய்த ரூ.417 கோடியும் அடக்கம் எனத் தெரிவித்தார்.

மேலும், 14-வது நிதிக்கொள்கையின் பரிந்துரையின்படி, ஆந்திர மாநிலத்துக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.369.16 கோடியும், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கான மானியமாக ரூ.253.74 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, அங்கன்வாடி சேவை திட்டத்துக்கு சத்துணவு திட்டத்துக்கு ரூ.196.92 கோடியும், மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்காக ரூ.31.76 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ஆந்திர மாநில மக்களும், எதிர்க்கட்சிகளும், ஆளும்தெலுங்கு தேசம் கட்சியும் நடத்தி வந்த போராட்டத்துக்கு நடுவண் அரசு பணிந்து விட்டது.

‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற தமிழர் உணர்ச்சிப் பெருக்கை மோடி காலடியில் பன்னீர்- எடப்பாடி அணி புதைத்து விட்ட நிலையில்,

அண்ணா காலத்து திமுக போல உணர்ச்சி பிழம்பாய் எழுந்து விட்ட நமது ‘உடன் பிறப்புகளாம் தெலுங்கர் தலை நிமிரச் செய்த சந்திரபாபு நாயுடுவுக்கு வணக்கங்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,694

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.