Show all

நீட் தேர்வுக்குச் சென்ற தமிழக மாணவர்கள் தவிப்பு! எர்ணாகுளத்தில் கொட்டித் தீர்க்கும் மழை

22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் நாளை நடத்தப் படுகிறது. இந்தத் தேர்வுக்காகத் தமிழகத்தில் மையங்களைத் தேர்வு செய்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கேரளாவின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய நகரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதனை மாற்ற நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் மறுத்துவிட்ட நிலையில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சில மாணவர்கள் இன்று பகலில் தொடர்வண்டி மற்றும் பேருந்துகள் மூலமாக கேரளாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். சுமார் 8 மணிநேரப் பயணத்துக்குப் பின்னர், கேரளாவின் எர்ணாகுளம் நகரில் இறங்கிய நிலையில், அங்கு சுமார் ஒரு மணி நேரமாகக் கொட்டித் தீர்க்கும் மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் தாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்கிற இடமும் தெரியாமல், புரியாத மொழி பேசும் மாநிலத்தில் தவித்து வருகிறார்கள்.

மழையின் காரணமாக அந்தந்த தேர்வு மையங்களுக்குச் செல்ல முடியாமல் தொடர்வண்டி மற்றும் பேருந்து நிலையங்களிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மாணவ, மாணவியருடன் பெற்றோரும் உடன் சென்றுள்ள நிலையில் அந்தந்த இடங்களிலேயே அவர்கள் காத்திருக்கிறார்கள். 

அத்துடன், ஞாயிற்றுக் கிழமை காலையில் 7.30 முதல் 8.30 மணிக்குள் முதல்அணி மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அணி மாணவர்கள் 8.30 முதல் 9.30 மணிக்குள் தேர்வு அறைக்குள் சென்றுவிட வேண்டும். அதன் பின்னர் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்;பட்டுள்ளது. அதனால் நாளை மழை பெய்து விடக் கூடாதே என்கிற கவலையும் கூடுதலாக தமிழக மாணவர்களிடம் ஒட்டிக் கொண்டுள்ளது.   

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,778.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.