Show all

தமிழகத்தின் பழஅடையாளமான பலாவே கேரளத்திற்கும் பழஅடையாளமாக தேர்ந்தெடுக்கப் படவுள்ளது

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநில பறவை, விலங்கு, மலர், மீன் என கேரள மாநிலத்திற்கான அடையாளங்கள்  அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்ததாக மாநிலப் பழத்தை கேரள அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.

வரும் புதன் கிழமை ‘பலாப்பழத்தை’ கேரள மாநில பழமாக அங்கீகரித்து முறைப்படி அரசாணையை முதல்வர் பினராயி விஜயன் தலைமயிலான அரசு வெளியிடுகிறது.

மா, பலா, வாழை முக்கனிகள் என்று பழந்தமிழகம் கொண்டாடி இருந்தாலும், ஒன்றுபட்ட இந்தியாவில் தமிழகத்தின் பழ அடையாளம் பலாப்பழம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கனிகளில் ஒன்றான பலா, சுவையிலும், மணத்திலும் அனைவரையும் மயக்கும் தன்மை கொண்டது. கேரளத்தில் மட்டும் லட்சக்கணக்கான பலா மரங்களும், பலவகையான பலாப் பழங்களும் விளைவிக்கப்படுகின்றன 

பலாப்பழகத்துக்கு மாநிலத்தின் அங்கீகாரத்தை வழங்கி, அதனுடைய உற்பத்தியையும், மதிப்புக்கூட்டு பொருட்களின் விற்பனையையும் உயர்த்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநில வேளாண்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநிலத்தின் பழமாக பலாப்பழத்தை அங்கீகரித்து வரும் புதனன்று சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட உள்ளோம். இந்த அறிவிப்பின் நோக்கம், மாநிலத்தில் பலாப்பழகத்தின் விளைச்சலைப் பெருக்கி, அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்துவதாகும்.

பலாப்பழம் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையால், ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் கோடிக்கணக்கான பலாப்பழங்கள், பல்வேறு சுவைகளில், பல்வேறு வகைகளில் விளைவிக்கப்படுகின்றன.

இங்கு விளைவிக்கப்படும் பழம் இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்டதாகும். செயற்கை உரங்கள் எதையும் பெரும்பாலும் மக்கள் போடுவதில்லை. இயற்கை உரங்களில் விளைவிக்கப்படுவதால், கேரள பலாப்பழத்துக்கென தனிச்சுவை இருக்கிறது.

பலாப்பழத்துக்கு மாநில பழம் அங்கீகாரம் வழங்குவதன் மூலம் இனி மக்கள் பலாப்பழம் தொடர்பான உணவுப் பொருட்களை அதிகமாக தயாரிப்பார்கள், விற்பனை செய்வார்கள் என நம்புகிறேன். மக்களிடையே பழாப்பழத்தின் உணவுகளையும், பழாப்பழத்தையும் பிரபலப்படுத்தும் நோக்கில் பழாப்பழத் திருவிழாவை நடத்திவருகிறது. இனிவரும் ஆண்டுகளில் இது மேலும் சிறப்பாக நடத்தப்படும்.

பலாப்பழத்தின் சுவை, தரம் மட்டுமல்ல பலாப் பழங்களை விளைவிக்கும் உழவர் பலா மரத்தை விற்பனை செய்து பலகையாக அறுத்துவிற்பனை செய்தாலும் நல்ல விலை கிடைக்கும் மற்ற மரங்களோடு ஒப்பிடுகையில் பலாப்பழம் அதிகமான உயிர்வளி வெளியிட்டு மனிதர்களை காக்கிறது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அடையாளங்கள்:

1. மொழி- தமிழ்.

2. பண்- தமிழ்த்தாய் வாழ்த்து

3. ஆடல்- நாவலந்தேய நாட்டியம்

4. விளையாட்டு- சடுகுடு (கபடி)

5. விலங்கு- வரையாடு

6. பறவை- மரகதப்புறா

7. மரம்- பனை

8. மலர்- காந்தல்

9. பழம்- பலா

10. முழக்கம்- வாய்மையே வெல்லும்.

11. அரசு சின்னம்- திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,730.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.