Show all

காவிரியில் தண்ணீரைத் திறந்து விட மறுத்து சித்தராமையா பிடிவாதம்.

காவிரி வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை பற்றி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில்; தமிழக அரசு புதிய இடைக்கால மனு தாக்கல் செய்தது. காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தமிழகத்துக்கு சேரவேண்டிய 45.327 டி.எம்.சி. தண்ணீரையும், தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி 11-02-2015-க்குள் தமிழகத்துக்கு சேர்ந்திருக்க வேண்டிய உரிய அளவு தண்ணீரையும் தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , காவிரி வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை பற்றி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டது. தீபாவளி விடுமுறைக்கு பிறகு தமிழக அரசின் மனு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து 2007 பிப்ரவரி 5-ந்தேதி காவிரி நதிநீர் தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்பு 2013 பிப்ரவரி 19-ந்தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதிக்குள் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 45.327 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும்.

ஆனால் தீர்ப்பாயத்தின் உத்தரவை எந்தவகையிலும் மதிக்காமல் கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட மறுக்கிறது. இதனால் தமிழகத்தில் ஏறத்தாழ 15 லட்சம் ஏக்கர் பகுதிகளில் உள்ள 40 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது எனவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகமுதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக அறிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி, மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகமுதல்வர் சித்தராமையா,

கர்நாடகத்தில் வறட்சி இல்லாமல் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்திருந்தால், அதனைத் தமிழகத்திற்கு கொடுப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கர்நாடகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. இங்கு குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பிறகு எவ்வாறு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியும்.

கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையிலேயே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் இனியும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. காவிரியில் இருந்து கர்நாடகம் கொடுக்க வேண்டிய 48 டி.எம்.சி. தண்ணீரை கேட்டு தமிழக அரசு நடுவண் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதனை நாங்கள் சட்டப்படி சந்திப்போம். என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.