Show all

ஸ்கீம்! தலைப்பில் குழம்புவதாக நடித்து, உச்சஅறங்கூற்று மன்றத்தையும் குழம்ப வைத்து வென்றது நடுவண் அரசு

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி விவகாரத்தில் மேலும் முன்று கிழமைகளுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் கால அவகாசத்தை கொடுத்திருக்கிறது. கர்நாடக தேர்தலுக்கு நான்கு கிழமை இருக்கிறது. உச்சஅறங்கூற்றுமன்றம் கொடுத்த அவகாசம் தாண்டி மேலும் ஒருகிழமை சமாளித்தால் போதும் கர்நாடகா தேர்தல் முடிவு தெரிந்து விடும். அப்புறம் கர்நாடகா வெற்றியைத் தந்தால் நிரந்தரமாக தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது. ஒருவேளை கர்நாடகா பாஜகவைத் தோற்கடித்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடாகவை ஒருகை பார்த்து விட வேண்டியதுதான் என்கிற நினைப்பில் நடுவண் அரசு உள்ளதாக தமிழக பாஜக தொண்டரடிப் பொடிகள் நம்பிக்கையாக இருக்கின்றன. 

தமிழக ஆளும் அதிமுக வட்டாரமும் அதைதான் நம்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கர்நாடகாவில் பாஜக தோற்கடிக்கப் படவேண்டுமே! 

பாஜக நடுவண் அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் அல்லது அமைக்கக் கூடாது என்கிற உறுதியான முடிவு எதுவும் கிடையாது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருந்து தமிழகத்தைக் குழப்பி, உச்ச அறங்கூற்றுமன்றத்தையும் குழப்பி காலந்தாழ்த்த வேண்டும் என்பது மட்டுந்தான் நோக்கம். 

பாஜக கர்நாடகாவில் வென்றால், நாம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பெரிய விலைகொடுக்க வேண்டியிருக்கும். அதாவது, மாணவர்கள், பெண்கள் குழந்தைகள் சகிதமாக சல்லிக்கட்டுக்கு நின்றதுபோல் உறுதியாக நிற்க வேண்டியிருக்கும்! கட்சிப் போராட்டங்கள் எல்லாம் எடுபடாது. ஆனால் கர்நாடகத்தில் பாஜக தோற்றுப் போகுமானால் குறைந்த அளவு போராட்;ட முயற்சியில், கட்சிகள் போராட்டங்களே போதும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விடலாம். உச்சஅறங்கூற்றுமன்றம் விதித்த 6 கிழமை கெடுமுடிந்த பின் நடுவண் அரசு மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டிருக்கிறது. நடுவண் அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து தமிழக அரசு அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகளை உச்சஅறங்கூற்றுமன்றம் இன்று விசாரித்தது. அப்போது நடுவண் அரசு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவில் அளித்த கால அவகாசத்தில் வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின், மேலும் மூன்று கிழமைக்குள்;;;;;; காவிரி நதி நீர் பங்கீட்டுக்கான வரைவுத் திட்டத்தைத் பதிகை செய்யவும், பின் அது பற்றி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் கருத்தைப் பெறவும் உத்தரவிட்டுள்ளது. நடுவண் அரசு தனது கடமையிலிருந்து நழுவ முடியாது என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், தஞ்சையில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசை உச்சஅறங்கூற்றுமன்றம் வெளிப்படையாகவே கண்டித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், மூன்று கிழமை வரை அவகாசம் வழங்கியிருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் நடுவண் பாஜக அரசு கடைசி நேரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று அவகாசம் கேட்டதுதான் என்றார்.

ஆக ஸ்கீம் என்ற தலைப்பில் தான் குழம்புவதாக நடித்;து, உச்சஅறங்கூற்று மன்றத்தையும் குழம்ப வைத்து வென்றது நடுவண் அரசு என்பது மட்டும் உண்மை.

நாம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, எது நடந்தாலும் கொஞ்சமும் சூடு குறையாமல் போராட்ட நிலையிலேயே இருப்பது நமக்கான வெற்றியை பெற்றுத்தரும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,752.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.