Show all

ரூபாய்தாள் திரும்பப் பெறுதல்: ஏழைகளின் துயரங்களைத் தீர்க்க கூடுதல் கவனம் தேவை

ரூபாய்தாள் திரும்பப் பெறுதல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் துயரங்களைக் குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

     தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் ஆகியோருடன் காணொலிக் காட்சி வழியாக பிரணாப் முகர்ஜி, வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

     அதிக மதிப்புடைய ரூபாய்தாள் திரும்பப் பெறுதல் நடவடிக்கையால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது தவிர்க்க முடியாதது.

     இந்த நடவடிக்கையின் நோக்கம் நிறைவேற நீண்ட காலம் ஆனாலும் ஆகலாம். அதுவரை ஏழைகளால் பொறுமை காக்க முடியுமா? என்று தெரியவில்லை. அவர்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

     ஏழைகளை தொழில்முனைவோராக்கும் மத்திய அரசின் அணுகுமுறையைப் பாராட்டுகிறேன். ஏழைகளின் துயர் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான், பசி, வேலையின்மை, சுரண்டல் ஆகியவை இல்லாத இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் அவர்களும் பங்கெடுக்க முடியும்.

     அண்மையில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்புகள் ஏழைகள் எதிர்கொண்டுள்ள துயரங்களைக் குறைக்க உதவும்.

இந்த ஆண்டில் 7 மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அவற்றில் உத்தரப் பிரதேசம், கோவா உள்பட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கான நாள் அறிவிக்கப்பட்டுவிட்டது.

     சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்படும் நமது தேர்தல் முறை உலகிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

     மக்களின் மனப்பான்மை, நம்பிக்கை, மதிப்புகள் ஆகியவை தேர்தல்களில் பிரதிபலிக்கின்றன. தேர்தல் காலங்களில் யார் பெரியவர் என்பதில் போட்டி, வாக்கு வங்கி அரசியல் ஆகியவை சமூகத்தில் மேலும் பல பிரச்னைகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துவிடும்.

     தேர்தல் சமயங்களில் இனவாத பிரச்னைகள் தலை தூக்கத் தொடங்கும். அப்போது மாறுபட்ட சமூகத்தினரிடையே ஒற்றுமை நிலவ வேண்டும்.

     இதுபோன்று சமூகத்தில் எழும் பல்வேறு சவால்களை சட்டத்தின் மூலம் கையாள வேண்டும்.

     மாநில மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் எழும் பதற்றங்களைத் தணிக்கவும் நீங்கள் (ஆளுநர்கள்) முக்கியப் பங்காற்ற வேண்டும்.

     பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் சகிப்புத்தன்மை, பொறுமை, மாறுபட்ட கருத்துகளுக்கு மரியாதை அளித்தல் ஆகியவை இருக்க வேண்டியது அவசியம். அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.

     ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதில்தான் இந்தியாவின் வலிமை அடங்கியுள்ளது. பல்வேறு மொழிகள், வேறுபட்ட கலாசாரங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றில்தான் இந்தியாவின் தனித்துவம் அடங்கி இருக்கிறது.

     மாறுபட்ட கருத்துகள் குறித்து விவாதிக்கலாம். அவற்றை ஏற்காமலும் இருக்கலாம். ஆனால், அத்தகைய கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் தவிரித்துவிட முடியாது.

இதுபோன்ற அடிப்படை பண்பாடு, நாகரீகத்தை மாநில மக்களுக்கு நீங்கள் எடுத்துரைக்க வேண்டும்.

     மாநிலங்களில் கலை, கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும்.

     உலகில் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கின்ற போதிலும் நமது தேசத்தின் பொருளாதார நிலை வலிமையாக உள்ளது.

     கடந்த 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் போதிய அளவு மழை பெய்யாததால் கிராமப்புறங்கள் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டில் பெய்த பருவமழையால் வேளாண் உற்பத்தியும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பும் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் பிரணாப் முகர்ஜி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.