Show all

மோடி மீது ராகுல் காட்டம்! ரபேல் விவகாரத்தை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் கதை கந்தல்தான்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் விவகாரத்தை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி என்று நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விவகாரத்தில் மோடியின் நடவடிக்கையினை ராகுல் விமர்சித்துள்ளார். 

அண்மைக்காலமாக, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறைஇயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. நிலைமை மோசமாக ஆவதை உணர்ந்த நடுவண் அரசு செவ்வாய் நள்ளிரவு எடுத்த முடிவின் படி அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது 

இந்நிலையில் ரபேல் விவகாரத்தை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி என்று நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விவகாரத்தில் மோடியின் நடவடிக்கையினை ராகுல் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய கீச்சுப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநரான அலோக் வர்மா ரபேல் ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கியிருந்தார். அவர் தற்போது வலுக்கட்டாயமாக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். தலைமை அமைச்சரின்  செயல் மிகவும் தெளிவானது. ரபேல் ஊழல் தொடர்பாக யார் விசாரிக்க முயன்றாலும் அவர்கள் நீக்கப்படுவார்கள்; துடைத்தெறியப்படுவார்கள். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார். 

இலஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள். இலஞ்சம் கொடுத்தேன் விட்டு விட்டார்கள். என்பது இந்திய அதிகாரிகள் குறித்ததான அழகான கவிதை. அதிகாரிகள் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆட்சியாளர்தான் சரியில்லை என்று சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளப் பார்க்கிறார் ராகுல். அதிகாரிகளை ஒழுங்கு படுத்த சட்ட நிருவாகத்தில் ஒரு தலைகீழ் மாற்றம் தேவைப்படும். இப்போதைக்கு ஆட்சிமாற்றமாவது நிகழ்ந்தால் நாட்டுக்கு நல்லது தானே. ராகுலையே நம்பி வைப்போம்.    

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,951.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.