Show all

'சின்னமச்சான்' பாடல் புகழ் செந்திலின் 'கரிமுகன்' படம் வெள்ளியன்று திரைக்கு வருகிறது

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைக்காட்சிப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் கதைத்தலைவனாக நடித்துள்ள 'கரிமுகன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியீடு காண உள்ளது. இப்படத்தைச் செல்லத் தங்கையா இயக்கி உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' போட்டியில் வெற்றி பெற்றவர் செந்தில் கணேஷ். இதில் நாட்டுப்புற பாடல்களைப் பாடி ஏராளமான இசை விரும்பிகளின் பாராட்டுகளைப் பெற்றார். செந்தில் கணேஷ் புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாடல் போட்டியின்போது இவர் ராஜலட்சுமியுடன் இணைந்து பாடிய 'சின்ன மச்சான்' பாடல் உலகத் தமிழர்கள் நடுவே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பாடலை 'சார்லி சாப்ளின்-2' படத்தில் பயன் படுத்தி உள்ளனர்.

இப்பாடல் செல்லத் தங்கையா எழுதியதாகும். இவர்தான் செந்தில் கணேசின் சமுதாயக் கல்விக்கான ஆசிரியர் ஆவார். இந்நிலையில் தனது மாணவனை வைத்தே திரைப் படத்தை இயக்கியுள்ளார் செல்ல தங்கையா. அதுமட்டுமல்ல, ஏற்கெனவே செந்திலை வைத்து 'திருடு போகாத மனசு' என்ற படத்தையும் எடுத்து வெளியிட்டுள்ளாராம். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. 

முகம் தெரியாத இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை நாளடைவில் பெரிதாகிறது. இதன் காரணமாக நன்கு அறிமுகமான இரு நபர்களுக்கு இடையே வீண் பிரச்சினை உண்டாகிறது. இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன? அவற்றில் இருந்து சம்பந்தப்பட்ட இருவரும் எப்படி வெளியே வருகின்றனர் என்பதுதான் 'கரிமுகன்' படத்தின் கதையாம்.

பட்டி மன்றத்தில் சக்கைபோடு போட்டு வந்த லியோனியால், திரைத்துறையில் வெற்றி கொள்ள முடியவில்லை. நாட்டுப்புற பாடல்கள் துறையிலிருந்து திரைத்துறைக்கு வரும் செந்திலின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று காலந்தான் விடை சொல்ல வேண்டும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,951.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.