Show all

முஸ்லிம் சமூக இளைஞர்களிடம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீதான தாக்கம்

முஸ்லிம் சமூக இளைஞர்களிடம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீதான தாக்கத்தைக் கண்காணித்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முஸ்லிம் மதத் தலைவர்களிடம் நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

 

இதுதொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

 

சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ அல்லது அந்த அமைப்புகளுக்கு ஆள்சேர்க்கும் பணியை மேற்கொள்வோரின் மூலமாகவோ பயங்கரவாத அமைப்புகள் இந்திய இளைஞர்களுக்கு பணத்தாசை காட்டி மூளைச் சலவை செய்கின்றன.

 

இதனால் கடந்த காலங்களில் இளைஞர்களிடையே அந்த அமைப்புகளின் தாக்கம் அதிகரித்ததன் விளைவாக, இதுவரை 23 இந்தியர்கள் ஐ.எஸ். அமைப்புகளில் இணைந்துள்ளனர்.

     மேலும் இணையம் மூலம் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருக்கும் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை உளவு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன.

 

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பயங்கரவாத அமைப்புகளின் இந்தச் செயல்களை இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் குடும்ப கலாசாரம் கொண்டு சமாளிக்கும் திறனை நாம் பெற்றுள்ளோம்.

 

அதேவேளையில், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஐ.எஸ். அமைப்புகள் இந்தியாவில் பிரபலமடைவது அதிகபட்சம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்து தரப்பிலும் இருந்து பயங்கரவாத அமைப்புகள் குறித்து கண்காணிப்பு அவசியம்.

 

எனவே மதத் தலைவர்களாகிய நீங்கள், முஸ்லிம் இளைஞர்களிடையே ஐ.எஸ். அமைப்புகள் குறித்த தாக்கத்தை கண்காணித்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, தடம்மாறும் இளைஞர்களுக்குத் தக்க அறிவுரை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

 

ஐ.எஸ். விவகாரம் குறித்து முஸ்லிம் மதகுருக்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியது இதுவே முதல்முறையாகும்.

 

முன்னதாக, மத்திய உளவு அமைப்புகள், புலனாய்வு அமைப்புகள், 13 மாநிலங்களின் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஐ.எஸ். அமைப்பின் மீதுள்ள இளைஞர்களின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

தென்னிந்திய இளைஞர்கள் அதிக அளவில் ஐ.எஸ். அமைப்புகளில் இணைவது குறித்து நடுவண் அரசு கவலைத் தெரிவித்துள்ளது.

 

எனவே கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை அந்த அமைப்புகளின் வலையில் சிக்காமல் இருக்க அந்த மாநில முஸ்லிம் மதத் தலைவர்களை நடுவண் அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைவில் சந்திப்பார் என தெரிகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.