Show all

விடிவேயில்லையா! தொடரும் இன்னொரு பணமதிப்பிழப்பு தந்த சோகம்.

பாஜக அரசின் பணமதிப்பு நீக்கத்தால் ஏமாற்றமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. செல்லாத பணத்தை தூக்கி வீசிவிட்டு, அரங்கத்திற்கு வராமலே புலம்பிவிட்டு அமைதியாகிவிடுகின்றவர்கள் பலர். சிலர் அரங்கத்திற்கு வந்து, ஈராமற்ற நமது நெஞ்சை பரிதவிக்க வைக்கிறார்கள். தற்போது அரங்கத்திற்கு வந்து நம்மை துணுக்குற வைத்திருப்பவர் 70 அகவை மூதாட்டி புவனேஸ்வரி.

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற 70 அகவை மூதாட்டி கையில் மஞ்சள் நிற பையுடன் தள்ளாடியபடி வந்தார். பையில், பண மதிப்பிழப்புக்குப் பிறகு, செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் தாள்கள் கத்தையாக இருந்தன.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்குத்தான், மோடி அரசால் செல்லாததாக்கப் பட்ட ரூபாய்தாள்களுடன் வந்திருந்தார் அந்த மூதாட்டி. 

மூதாட்டியிடம் விசாரித்தபோது, நான், கணவரால் கைவிடப்பட்டேன். எனக்கென்று யாருமில்லை. வாடகை வீட்டில் தங்கி கூலி வேலைக்குச் சென்று சிறுக சிறுக ரூ.12,000 பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். பணம் செல்லாது என மோடி அறிவித்தது பற்றி எனக்குத் தெரியாது.

அதுமட்டுமன்றி, காசநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன். இப்போதெல்லாம் வேலைக்குச் செல்ல முடியவில்லை.

சேர்த்து வைத்த பணத்தை வீட்டு வாடகை, சாப்பாட்டு செலவுக்கு பயன்படுத்த முயன்றேன். யாருமே வாங்கவில்லை. நான், சிரமப்பட்டு உழைத்து சேர்த்த பணம். நான் எதிர்காலத்திற்காக நம்பிக்கையோடு உழைத்து சேமித்த பணம் செல்லாது என்றால் எப்படி? அதை மாற்றி புதிய ரூபாய் தாள்களாகத் தர வேண்டும், என்று பரிதாபமாகக் கூறினார். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலரைச் சந்தித்து கண்ணீர்விட்டு அழுதார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அழைத்து விசாரித்தார். கட்டுப்பாட்டு வங்கி உத்தரவின்படி, பழைய ரூபாய் தாள்களை இனி எக்காரணம் கொண்டும் புதிய ரூபாய் தாள்களாக மாற்றித் தர இயலாது என்று முன்னோடி வங்கி மேலாளர் தெரிவித்தார். இதனால், பழைய ரூபாய் தாள்களுடன் அந்த மூதாட்டி பரிதவித்துவருகிறார்.

உழைப்பு ஆதாயத்திற்கு மாற்றாக, ஒப்பந்தப் பத்திரமாக, அரசால், குடிமக்களுக்கு கையொப்பம் இட்டுத்தரப்படுகிற ஆவணம்தானே ரூபாய்தாள் என்பது. எப்படி அதை செல்லாது என்று அறிவிக்க முடியும்? அது கிழிந்தால் கூட மாற்றித் தருவதுதானே அரசின் கடமை. அப்புறம் சட்டம் எதற்கு? அறங்கூற்றுமன்றம் எதற்கு? ஒன்றுமே புரியவில்லை என்று புலம்புகிறார்கள் இதுபோன்று பாதிக்கிற மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,396.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.