Show all

தேவை பழந்தமிழர் குடவோலை வாக்கு முறை! அல்லது செருமானிய விழுக்காட்டு வாக்குமுறை!! வேண்டாம் இந்திய வணிகத்துவ வாக்குமுறை!!!

இந்திய வணிகத்துவ தேர்தல்; முறை குறிப்பிட்ட சாரருக்குமட்டுமே பயன் அளிப்பதாக மாறி வருகிறது. பண பலம், ஆள் பலம், மாபியா பலம், ஊடக பலம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதாக மாறி வருகிறது. வேண்டாம் இந்திய வணிகத்துவ வாக்குமுறை!!! தேவை செருமானிய விழுக்காட்டு வாக்குமுறை!! அல்லது பழந்தமிழர் குடவோலை வாக்கு முறை!
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேர்தல் முடிவுக்குப் பின்னர், 'எங்களுக்கு இத்தனை விழுக்காட்டு வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், போதுமான இடங்கள் கிடைக்கவில்லை' என்று பல கட்சிகள் புள்ளி விபரங்களை சொல்லி புலம்புவது இன்றைய இந்திய வணிகத்துவ தேர்தல் முறையாக இருக்கிறது. 
ஆம் வணிகத்துவ தேர்தல் முறைதாம். ஏனென்றால் நடப்பு இந்தியத் தேர்தல் முறை, குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பயனளிக்கிற தன்மை கொண்டதாக மாறிவிட்டது. பண பலம், ஆள் பலம், மாபியா பலம், ஊடக பலம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறமுடியும். நீங்கள், 300 கொடுத்தால் அவர், 500 கொடுத்து உங்களை தோற்கடித்துவிடுவார். இதுதான், இன்றைய விசித்திர நிலை. இந்த விசித்திரத்துக்கும், புலம்பலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதற்கு நமது இந்தியத் தேர்தல் முறையை பழந்தமிழர் குடவோலைத் தேர்தல் முறையாக மாற்ற வேண்டும். அல்லது செருமானித்தில் தொடங்கி இலங்கை வரை உலகில் 89 நாடுகள் மாறிவிட்ட விழுக்காட்டு முறை தேர்தலுக்கு இந்தியா மாறியாக வேண்டும்.
பழந்தமிழர் குடவோலை தேர்தல் முறை என்பது என்ன? ஒவ்வொரு வாக்காளரும் அவரவர் விரும்பும் வேட்பாளர் பெயரை முன்மொழிய முடியும். அவர்கள் முன்மொழியும் வேட்பாளர்களில் அதிகமான பேர்கள் முன்மொழிந்த 234 பேர்களை தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்ய வேண்டும். 
இங்கே கட்சியே கிடையாது. அவரவர்கள் தங்களைத் தாங்களே முன்மொழிந்து கொள்ளவும் முடியாது. சமுதாயத்தில் சான்றோராக காணப்படுகிறவரை மட்டுமே மக்கள் தெரிவு செய்தார்கள் அன்றைய பழந்தமிழகத்தில் அரசருக்கு துணை புரியும் ஐம்பெரும்குழு எண்பேராயத்திற்கு உறுப்பினர்களை. 
அதனால் தமிழ் மன்னர்கள் கோயிலும் குளமும் அகலியும் அணையும் கட்டி நிலத்தடி நீர் பெருக்கி, மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்தார்கள்.
 இன்றைய அமைச்சர்கள் சதுப்பு நிலங்களை அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட விற்று விடுகிறார்கள். ஆற்றிலும், குளத்திலும் மணல் திருடும் கொள்ளையர்களாக உலா வருகின்றார்கள். அவர்கள் கட்சிக்கு நன்கொடை கொடுக்க- கட்சி அவர்களைப் பாதுகாக்கிறது.  
சரி தமிழர் வரலாறு எல்லாம் எங்களுக்கு வேண்டாம் விட்டு விடுங்கள். நமது தேர்தல் முறையை, உலகில் 89 நாடுகள் மாறிவிட்ட விழுக்காட்டு அடிப்படை பிரதிநிதித்துவ தேர்தல் முறையாக மாற்றலாமே. 
அப்படி செய்தால் மட்டுமே, ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையான மதிப்பு கிடைக்கும். ஒரு தொகுதியில் அதிக வாக்கு பெற்றவரே வெற்றி பெற்றவர். மேலோட்டமாக பார்த்தால், இதில் தவறு இருப்பதாக தெரியாது. ஆனால், பதிவான வாக்குகளில், 30 விடுக்காட்டு வாக்குகளைப் பெற்று, முதல் இடத்தை பிடிப்பது இப்போது இயல்பாகி விட்டது. அதாவது, வென்றவர், 30 விழுக்காடு வாக்குகள் பெற்றிருப்பார். 70 விழுக்காட்டு பேர்கள் விரும்பாத அவரை, அவருக்கு எதிராக, ஏழு பேர் நின்றதால், அந்த, 70 விழுக்காட்டு வாக்குகள் அவர்களுக்கு ஆளுக்கு, 10 விழுக்காடாக விழுந்திருக்கும். சுருக்கமாக சொல்லப் போனால், 30 விழுக்காட்டு வாக்குக்கு மதிப்பு கொடுத்து அவரை, பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர்  ஆக்குகிறது நமது தேர்தல் முறை. ஆனால், 70 விழுக்காடு வாக்காளர்களின் வாக்குகளுக்கு எந்த மதிப்பும் தரவில்லை.
கடந்த, முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில், திமுக 31 இடங்களில் போட்டியிட்டு, அனைத்திலும் தோற்றது. ஆனால், அந்த கட்சிக்கு, 70 லட்சம் பேர் வாக்களித்து இருந்தனர். இப்படி திமுக பலமுறை தேர்தல்களிலும் வஞ்சிக்கப் பட்டிருக்கிறது. இன்;றைக்கு எடப்பாடி பன்னீர் கூட்டணி அமைத்து மிகச் சிறுபான்;மையினரின் ஆதரவோடு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற அவலத்திற்கு திமுக தொடர்ந்து வஞ்சிக்கப் பட்டதற்கு இந்தியாவில் நடப்பில் இருக்கிற வணிக முறைத் தேர்தலே காரணம். 
கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக பெற்ற வாக்குகள் 17 கோடியே, 16 லட்சத்து, 37 ஆயிரத்து 684. இது மொத்த வாக்குகளில், 31 விழுக்;காடு மட்டுந்தாம். ஆனால், அக்கட்சிக்கு, 282 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது மொத்தமுள்ள, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில், 51.9 விழுக்காடு.
அதே போல் காங்கிரசுக்கு, 10 கோடியே, 69 லட்சத்து, 35 ஆயிரத்து, 311 வாக்குகள் கிடைத்தன. இது, 19.3 விழுக்காடு. ஆனால், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, 44 மட்டுமே. அந்தத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் 20 விழுக்காடு வாக்குகளை பெற்ற, பகுஜன் சமாஜ் கட்சிக்கு, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட கிடைக்கவில்லை.
விழுக்காட்டு அடிப்படை தேர்தல் முறையில், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப, சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இடங்கள் வழங்கப்படுகின்றன. 
பிரதிநிதிகள் பட்டியலை கட்சிகள் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். கட்சிக்கு கிடைக்கும் மொத்த வாக்குகளுக்கு, ஏற்ப ஏற்கனவே கட்சி அளித்துள்ள பெயர் பட்டியல்படி, பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் அறிவிக்கப்படுவார்கள். தனித்து ஆட்சி அமைக்க, பெரும்பான்மை வராவிட்டால், ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம். 
விழுக்காட்டு அடிப்படை தேர்தல் இங்குள்ள பல்வேறு சமூகங்களின் அச்சத்தை அகற்றுவதுடன், நாட்டின் எதிர்கால குழப்பங்களுக்கான தீர்வாகவும் அமையும் என்பது, ஆண்டு நேருவின் கருத்தாக இருந்தது. 
அண்ணா காலத்தில் நடைபெற்ற, திமுக பொதுக்குழுவிலும், மாநாட்டிலும், தேர்தல் அறிக்கையிலும் இந்தியாவுக்கு விழுக்;காட்டு அடிப்படை பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று அண்ணாதுரை வலியுறுத்தினார். 
ஜெயபிரகாஷ் நாராயணனால் நியமிக்கப்பட்ட தார்க்குண்டே குழு ஜெர்மனியில் இருப்பது போன்ற தேர்தல் முறை இந்தியாவுக்கு வேண்டும் என பரிந்துரைத்தது.
தினேஷ் கோஷ்சுவாமி குழு, வோரா கமிட்டி, இந்திரஜித் குப்தா குழு, தேர்தல் சட்ட திருத்தத்தின் மீதான சட்ட ஆணையத்தின், 170வது அறிக்கை, அரசியல் சாசன நடைமுறை மறு ஆய்வுக்கான தேசிய ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்னுரைக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள், நிர்வாக சீர்திருத்த, இரண்டாவது ஆணையம், நடுவண் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் ஆகிய அனைத்தும் விழுக்காட்டு அடிப்படை பிரதிநிதித்துவம் குறித்து நீண்ட ஆய்வை சமர்பித்தன. 
எனினும், எந்த மாற்றமும் நிகழவில்லை. விழுக்காட்டு அடிப்படை பிரதிநிதித்துவ தேர்தல் முறை வந்தால், அனைத்து வாக்குகளும் மதிப்பு பெறும். பணபலம், ரவுடியிசம், சாதி, மதவெறி குறைய வாய்ப்பு ஏற்படும். அவரவர் சாதி ஆதரவின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெறக்கூடும் என்றாலும், மாகாணம் முழுவதும் சிதறிக்கிடக்கிற சாதிகளும், சிறிய சாதிகளும் எளிதில் பிரதிநிதித்துவம் பெற முடியும்.
இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விழுக்காட்டு அடிப்படை பிரதிநிதித்துவ தேர்தல் முறை நடைமுறையில் இருக்கிறது.
இந்தியாவிற்கும் இந்த தேர்தல் முறையே சிறப்பு தரும்! முன்னெடுப்போம்.
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,122. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.