Show all

மோடி அரசின் புளுகு மூட்டை அவிழ்ந்தது! தமிழகத்து சால்ரா கூட்டம் மூட்டை முடிச்சுகளோடு ஓட்டம்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட மனு செய்துள்ளது மோடி அரசு. இதன் மூலம், காவிரி விவகாரத்தின் சூட்டை குறைத்து, அப்படியே நீர்த்துப்போக செய்ய மோடி அரசு முயலுகிறது 

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த ஒரு திட்டத்தை 6 கிழமைகளுக்குள் உருவாக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே அதை அமைக்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் உச்ச அறங்கூற்றுமன்ற தீர்ப்பின் சாராம்சம் என்பது அறங்கூற்று மன்ற நடவடிக்கைகளின் அடிப்படை தெரிந்தவர்களுக்குக் கூட புரிவதுதான். ஆனால், மோடி அரசோ, திட்டம் என்றால் என்ன பொருள் என்று உச்ச அறங்கூற்றுமன்றத்தில் இன்று விளக்கம் கேட்டுள்ளது. அதாவது, 6 கிழமை கெடு முடிந்த பிறகுதான் இந்த விசயத்தில் கூட விளக்கம் கேட்கிறது மோடி அரசு. முடிந்த அளவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட வேண்டும் என்பதே முதன்மையான நோக்கம். 

இது ஒருபக்கம் என்றால், அபத்தமான மற்றொரு கருத்தை தனது மனுவில் நடுவண் அரசு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் - கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக நடுவண் அரசு கூறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழகத்தில் ஏன் கலவரம் வரப்போகிறது என்பது யாருக்கும் புரியாத புதிர். கர்நாடகாவில் கலவரம் வரும் என்பதால் 3 மாதகாலம் அவகாசம் கேட்பது நடுவண், கர்நாடக அரசுகளின் தோல்விதானே தவிர, சம்மந்தம் இல்லாத தமிழகம் அதனால் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? 

அறங்கூற்றுமன்ற உத்தரவை நடுவண் அரசே செயல்படுத்தவில்லை எனும்போது, சாமானியர்கள் எப்படி அரசின் சட்ட திட்டங்களை மதிப்பார்கள். தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை மீறிய சாமானியரை பைக்கில் விரட்டி சென்று எட்டி உதைத்து கீழே தள்ளி, ஒரு பெண் சாவுக்கு காரணமாக இருந்த கடமைமிகு காவலர்களை கொண்ட இந்த மண்ணிலா, அறங்கூற்றுமன்ற உத்தரவை மத்திய அரசே மீறுகிறது? 

சசிகலா ஏன் சிறை விடுப்பை முடித்துக் கொண்டு உடனடியாக சிறைக்குச் செல்ல வேண்டும். என்றெல்லாம்; கேள்வி எழாதா?

காவிரி விவகாரம் தற்போது நீறுபூத்த நெருப்பாக உள்ளது. இதனால், 3 மாத காலம் தள்ளிப்போட்டு, இந்த நெருப்பை அணைக்க முயல்கிறது மோடி அரசு. தமிழகத்தை ஏமாற்றுவது என்று முடிவெடுத்துவிட்டது மோடி அரசு. உச்ச அறங்கூற்றுமன்றம் அறிவித்த சில நாட்களிலேயே காவிரி மேலாண்மை வாரியத்தை நடுவண் அரசு அமைத்திருக்கலாம். இப்போது தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில், அதை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்க்க மோடி அரசு திட்டம் போட்டு காய் நகர்த்திவிட்டது பச்சையாகவே அம்பலப்பட்டுவிட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உச்ச அறங்கூற்றுமன்ற தீர்ப்பு கட்டுப்படாது என தலைமை தேர்தல் ஆணையரே அறிவித்துவிட்டதால், அதை காரணம் காட்ட முடியாமல் நைசாக சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தப்புகிறது மோடி அரசு. எனவே 100 விழுக்காடு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை மோடி அரசு தவிர்க்க முயல்வது தௌ;ளத்தெளிவாகிவிட்டது.

இன்னொரு கருத்தும் அடிபடுகிறது. தமிழக அரசியல்வாதிகள் பலர் மணல் குவாரியை பிழைப்பாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு காவிரி வறண்டால் தான் ஆதாயம் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே மோடி இவ்வளவு துணிச்சலாக காய் நகர்த்துகிறார் என்றும் சொல்லப் படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,743.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.