Show all

மோடிஅரசு! நீட்தேர்வில் எதை நடத்தியதோ, அதையே பிசிறில்லாமல் காவிரி மேலாண்மை வாரியத்திலும்

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசு, நீட்தேர்வில் எதை நடத்தியதோ, அதையே கொஞ்சமும் பிசிறில்லாமல் காவிரி மேலாண்மை வாரியத்திலும் நடத்தி முடித்து விட்டது நாடகத்தை. தமிழிசை, பொன்.இராமச் சந்திரன், எச்.இராஜா, தமிழக அரசு, மற்ற துண்டு துக்கடா பாத்திரங்களுக்கும் அதே வேடம். சிறப்பாக நடத்தி முடிக்கப் பட்டது நாடகம். 

நாடகத்தின் உச்சகட்டம் இப்படித்தான் அமையும் என்று எல்லோருக்குமே தெரியும். பொது மக்களுக்கும் கூடத்தான் தெரியும் ஆனல் அவர்கள் என்ன செய்ய முடியும். வழி நடத்துகிறவர்கள் தானே ஏதாவது முன்னெடுக்க முடியும். 

முன்னெடுக்கிற இடத்தில் இருப்பவர்கள் யார் யார் என்னென்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத அரசை கண்டித்து தமிழகத்தில் நாளை முதல் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை தெரிவிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதே போன்று தொடர் வண்டிகளை ஓடவிடாமலும், நடுவண் அரசு அலுவலங்களை முடக்கியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று பழ. நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசுக்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தில்: உச்சஅறங்கூற்றுமன்ற ஆணையை அப்பட்டமாக மீறி இருக்கிறது கர்நாடகா அரசு. இதே போன்று தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய நடுவண் அரசும் மறுக்கிறது. எனவே இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாடு எடுத்து சட்டமன்றத்தை மீண்டும் கூட்டி சட்டமன்றத்தில் அனைத்து கட்சியின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தமிழக அரசு அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும். நடுவண் அரசை கண்டித்து தீர்மானம் போட வேண்டும், கடந்த முறை வேண்டுகோள் விடுத்து தான் சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட்டது. காவிரி விவகாரத்தில் நடுவண் அரசுக்கு எதிராக தமிழக கட்சிகள் அனைவரும் ஓரணியில் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்வண்டிகளை ஓட விடக்கூடாது, நடுவண் அரசு அலுவலகங்களை இயங்க விடக்கூடாது என்றும் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்த நடுவண் அரசுக்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல்களை மட்டுமே மனதில் வைத்து நடுவண், மாநில அரசுகள் செயல்படுகின்றன என்றும் மக்கள் நலனைப் பற்றி அரசுகளுக்கு அக்கறையும், பொறுப்பும் இல்லை என்றும் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அறங்கூற்று மன்றம் நடுவண் அரசின் சட்ட அமைப்புதான். அதை நடுவண் அரசுக்கு எதிராக சட்டப் போராட்டத்தின் மூலம் திருப்பலாம் என்பது பகல் கனவுதான். நடுவண் அரசு நினைத்தால் உச்சஅறங்கூற்று மன்ற தீர்ப்பை மாற்றலாம். உச்சஅறங்கூற்று மன்றம் நடுவண் அரசை ஒன்றும் செய்ய முடியாது. நடுவண் அரசு விரும்பாததை கொள்கை முடிவு தலையிட முடியாது என்று ஒதுங்கி கொள்ளும் உச்ச அறங்கூற்றுமன்றம்.  இதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். 

காங்கிரஸ், பாஜக, போன்ற தேசியப் போர்வையைப் போர்த்திக் கொண்டு ஹிந்தி பேசும் மாநிலங்களுக்காகவும், தங்களுக்கான வாக்கு வங்கி மாநிலங்களுக்காக மட்டுமே சாதகமாக செயல் படும் வரை அறங்கூற்று மன்றங்களில் கூட நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

நடுவண் அரசில்அந்தந்த மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களுக்காக நிற்க வேண்டிய கட்டயத்தில் இருக்கிற  மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி நடக்கும் போதுதான் உண்மையான நியாயம் கிடைக்கும்.

2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாமல், நடுவண் காங்கிரஸ் அரசு 6 ஆண்டுகள் இழுத்தடித்தது. 2013ம் ஆண்டு உச்சஅறங்கூற்றுமன்றம் குறிப்பிட்டு உத்தரவிட்ட பிறகும், மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அரசிதழில் வெளியிடுவதோடு நிறுத்திக்கொண்டது நடுவண் அரசு. 

2014 ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2016ம் ஆண்டு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. அதை அமல்படுத்தும் நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த நடுவண் அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகளில் நடுவண் அரசு ஈடுபட்டுள்ளது என்று பதில் அளித்தார். இந்த விசாரணை முடிவில் அறங்கூற்றுவர்கள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4க்குள் அல்லது அதற்கு முன்பாக அமைக்க நடுவண் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வாரியத்தின் உறுப்பினர்களின் பெயர்களை தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்குள் அளிக்க வேண்டும். அதை தொடர்ந்து அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர்கள், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பார்வையிட்டு நிலவர அறிக்கையை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனைத் தொடந்து தமிழகம், கேரளா, புதுவை அரசுகள் தங்கள் பிரதிநிதிகள் பெயரைப் பரிந்துரைத்தன. ஆனால், கர்நாடகமோ காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்க முடியாது. வாரியத்துக்குக் கர்நாடகம் சார்பில் யாரையும் தேர்வு செய்து கொடுக்கமாட்டோம் என்று தனது எதிர்ப்பு நிலையில் உறுதியாக இருந்தது. இந்நிலையில், உச்சஅறங்கூற்றுமன்றத்தை மதிக்காத கர்நாடக அரசைக் கண்டிக்க வேண்டிய நடுவண் அரசு, திடீரென்று தனது நிலைப்பாட்டில் அந்தர்பல்டி அடித்தது. இந்நிலையில், 2016 ம் ஆண்டு அக்டோபர் 3ம் நாள், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாஜக அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, இவ்விசயத்தில் நடுவண் அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் உச்சஅறங்கூற்றுமன்றத்துக்கு இல்லை. ஏற்கெனவே, அமர்வு பிறப்பித்த உத்தரவில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும். உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் வாதாடினார். அதை, உச்சஅறங்கூற்றுமன்ற அமர்வு ஏற்றுக் கொண்டது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,741.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.