Show all

நிர்வாண நாட்டில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்! காவிரி தீர்ப்பில் தமிழகத்திற்கு அதுதான் நிகழ்ந்தது

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொதுவாக இந்தியாவில் தமிழகத்தில் இருந்து வடக்கே செல்ல, செல்ல சட்டம் ஒழுங்கை மதிப்பவர்களும், பின்பற்றுகிறவர்களும், விழுக்காட்டு அளவில் குறைந்து கொண்டே போவார்கள். தமிழகத்தில் 90 விழுக்காட்டில் தொடங்கி தலைநகர் டெல்லியில் 10 விழுககாட்டில் முடியும். 

அதே சமயம், சட்டம் ஒழுங்கை மதிக்காததைப் பற்றிய பேச்சும் புலம்பலும் தமிழகத்தில், 90 விழுக்காட்டு பேர்களிடம் இருக்கும். இந்த விழுக்காடும் வடக்கே செல்ல செல்ல தலைநகர் டெல்லியில் 10 விழுக்காட்டில் முடியும். 

இதை உள்ளங்கை நெல்லிக் கனி போல புரிந்து கொள்ள விரும்பினால், தொடர் வண்டியில் சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு படுக்கை பயணச் சீட்டை பதிவு செய்து டெல்லி வரை பயணம் மேற்கொண்டால் புரிந்து விடும்.

தமிழ்நாட்டு எல்லை முடியும் வரைதான் நீங்கள் பதிவு செய்யப் பட்ட பயணியாக பயணிக்க அனுமதிக்கப் படுவீர்கள். வடக்கே செல்ல செல்ல உங்கள் இருக்கை அடாவடியாக மற்ற பொதுப் பயணிகளோடும் பகிர்ந்து கொள்ளப் படவேண்டியிருக்கிறது என்பதை நேரலையாக அனுபவிக்கலாம்.

தமிழகத்தில் தான், மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வரைக் கூட அறங்கூற்றுமன்றத்தை மதித்து சிறைக்கு அனுப்பும் நேர்மையைக் காண முடியும். 

கருநாடக அரசு காவிரித் தீர்ப்பில் அறங்கூற்று மன்றத்தை மதிக்க வேண்டியதில்லை என்றால், நடுவண் அரசு காவிரித் தீர்ப்பில் அறங்கூற்று மன்றத்தை மதிக்க வேண்டியதில்லை என்றால், நாம் ஒரு முதல்வரை அறங்கூற்று மன்றத்திற்கு காவு கொடுத்தது நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிய பைத்தியக்கார செயல்தானே! 

நமக்கு காவிரியை மீட்டுத் தந்து கொண்டிருந்த வீரப்பன் அவர்களை சட்டத்தின் பெயரால் சட்டத்திற்கு காவு கொடுத்தது நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிய பைத்தியக்கார செயல்தானே! 

அறங்கூற்று மன்றத்தின் தீர்ப்பின் படி இலட்சக் கணக்கானவர்களை தமிழகச் சிறைகளில் குற்றவாளிகள் என்று அடைத்து வைத்து விட்டு அதற்காக தமிழ் மக்களின் வரிப்பணத்தை செலவிட்டுக் கொண்டிருப்பது  நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிய பைத்தியக்கார செயல்தானே! 

சட்ட நிருவாகத்தை மதிக்காத நடுவண் அரசுக்கு பாடம் கற்பிக்க சட்ட அவமதிப்பு வழக்கு மூலம் தண்டனை பெற்றுத்தர வழியிருக்கிறதா என்ன? இல்லவேயில்லை.

அவர்களையும் கோவணம் கட்ட வைக்க வேண்டும் அதுவொன்றே வழி! இன்னும் ஒரு கிழமைக்குள் நடுவண் அரசு சட்டத்தை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விட்டால்- தமிழகம் மட்டும் சட்டத்தை மதிக்க வேண்டிய நாகரிகத்தில் இருக்க வேண்டிய தேவையென்ன என்று கேள்வி யெழுப்பி- அவர்களைப் போன்றே கேடு கெட்டத் தனமானவர்களாக நம்மாலும் இயங்க முடியும் என்று தமிழகத்து அனைத்துச் சிறைச்சாலைகளையும் திறந்து அனைத்து கைதிகளையும் விடுவித்து விட வேண்டியதுதான்! விடுவிக்க வேண்டிய தேவை எழாது. அவர்களும் கோவணம் கட்டுவார்கள்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,742.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.