Show all

மோடி எச்சரிக்கை! அதிகரித்து வரும் மக்கள் தொகையால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும்.

அதிகரித்து வரும் மக்கள் தொகையால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும் என்று இந்தியத் தலைமை அமைச்சர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார் இன்று. ஆனால் கடந்த மாதம்: “ஆண்டுக்கு ஆண்டு தமிழ்இன மக்களின் வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருகிறது என்பதாக, தமிழினத்தை எதிர்நோக்கியுள்ள ஆபத்தாக” நடுவண் அரசு தரும் அறிக்கையில், எச்சரிக்கை செய்யப் பட்டிருந்தது.

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் 73-வது விடுதலைநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. விடுதலை நாளையொட்டி டெல்லி செங்கோட்டையில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி கொடியேற்றி உரையாற்றினார். அப்போது மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை தெரிவித்தார்.

இதுகுறித்து மோடி பேசுகையில் ‘‘மக்கள் தொகை பெருக்கம் ஒரு கட்டுபாடற்ற வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்த மக்கள் தொகை பெருக்கம் நமக்கும், வரவிருக்கும் சந்ததியினருக்கும் எண்ணில் அடங்கா பிரச்சனைகளை உருவாக்கும்.

ஒருவர் தனது குடும்பத்தை சிறியதாக வைத்திருப்பதும் ஒருவகை நாட்டுப்பற்றுக்கான செயல்தான். நாம் மரியாதை கொடுக்க அவர்கள் தகுதியானவர்கள். அதேபோல் பாராட்டுக்குரியவர்கள்.

மக்கள் கல்வி அறிவு மற்றும் ஆரோக்கியமாக இல்லை என்றால், அவர்களுடைய வீடு மற்றும் நாடு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும். மக்கள் கல்வி மற்றும் ஆரோக்கியம் பெற்றால், நாடும் கல்வியுடன் மற்றும் ஆரோக்கியமாக திகழும். இதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை நடுவண் மற்றும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும்” என்று இன்று தெரிவித்தார் மோடி.

ஆனால் கடந்த மாதம் தமிழினத்தை எதிர்நோக்கியுள்ள ஆபத்து! நடுவண் அரசு தரும் அறிக்கையில் எச்சரிக்கை என்று ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

ஆண்டுக்கு ஆண்டு தமிழ்இன மக்களின் வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருகிறதாம். தமிழினத்தை எதிர்நோக்கியுள்ள ஆபத்தாக, நடுவண் அரசு தரும் அறிக்கையில், எச்சரிக்கை செய்யப் பட்டிருக்கிறது. 

அடுத்த பத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்குமான இடைவெளியில் தமிழினத்தை எதிர் நோக்கியுள்ள ஆபத்தை, அறிக்கை மூலம் நடுவண் அரசு தெரியப் படுத்தியுள்ளது. தமிழகத்து மக்கள் தொகையின் வளர்ச்சி சரிவு நிலையில் செல்ல வாய்ப்பு உள்ளதாம். இதனால், தமிழகத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் அதாவது 60 அகவைக்கு மேலானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம். 20 அகவைக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 59 அகவைக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்காக அல்லது அதற்கு மேலும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்பட்டிருக்கும் செய்திதான் சற்று அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் மொத்த கருத்தரித்தல் விழுக்காடு என்பது வேகமாகக் குறைந்து வருவதும், அடுத்த பத்து ஆண்டுகளில் மரணத்தை விட, குழந்தை பிறப்பு மிகவும் குறைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பான்மையும், வீழ்ச்சிக்கு சிறுபான்மையும் மக்கள் தொகை என்பது முதன்மையானதாக கருதப்படுகிறது. மக்கள் தொகையில் இந்தியா உலக அளவில் 2-ஆம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் குறைந்த அளவு வேறுபாடே உள்ள நிலையில், இந்திய முதலிடத்திற்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடுவண் அரசு பொருளாதார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்தான் இந்தச் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தாம், குடும்பக் கட்டுப்பாடு மிகவும் அதிகமாக பிரபலமாகி, தொடக்கத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்று குடும்பக் கட்டுப்பாடு முன்னெடுக்கப் பட்டு தற்போது, நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றவாறான குடும்பக் கட்டுப்பாட்டு மனநிலை வளர்ந்து வருகிறது. இதுவே எதிர்காலத்தில் தமிழினத்திற்கான வீழ்ச்சியாக அமையப் போகிறது. தமிழ்நாட்டிற்கு மக்கள் தொகை அளவில் வழங்கப் பட்டு வருகிற சட்டமன்ற உறுப்பினர் 234, பாராளுமன்ற உறுப்பினர் 39, என்கிற பிரதிநிதித்துவம் கூட பாதியாக குறைக்கப் படுவதற்கு வாய்ப்பு எழும். 

இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தமிழ் பேசுவோர் விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் இடுகிறது. 48 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் 6.88 விழுக்காடாகவும், 28 ஆண்டுகளுக்கு முன்பு 6.32 விழுக்காடகவும், 18 ஆண்டுகளுக்கு முன்பு 5.91 விழுக்காடாகவும் இருந்த தமிழர்கள் எண்ணிக்கை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மேலும் குறைந்து 5.70 விழுக்காடாக உள்ளது. ஆனால், ஹிந்தியை தாய் மொழியாக கொண்டோர் மட்டும் தொடர்ச்சியாக கடந்த 48 ஆண்டுகளாகவே அதிகரித்தபடிதாம் உள்ளது. இதற்கு ஹிந்தி பேசும் மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு நடைமுறைகள் இன்னும் அதிகம் சென்று சேரவில்லை என்பது ஒரு முதன்மைக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப் படுகிறது. 

அப்புறம் எந்த நியாயத்தில், நீட் தேர்வு வைத்து தமிழக மக்கள் மருத்துமனைகளை, மருத்துவக் கல்லூரிகளை மருத்துவ விழிப்புணர்வே இல்லாத அவர்களுக்கு பிடுங்கி கொடுக்கின்றீர்கள். உலகின் முதல் 20 மொழிகளில் தமிழ் பனிரெண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. தமிழர் இனம் எண்ணிக்கை அடிப்படையில் வீழ்ச்சி அடைந்து வருவதைத் தொடர்ந்து அனுமதிப்போமேயானால் உலகப் பட்டியலிலும் தமிழ் பின்னுக்குத் தள்ளபட்டு விடும். 
1.கிரேக்க மொழி- ஐரோப்பா- 175 கோடி
2.மாண்டரின் (சீனம்)- சீனா- 88.5 கோடி
3.ஸ்பானிய மொழி- ஸ்பெயின்- 33.2 கோடி
4.ஆங்கிலம்- ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா- 32.2 கோடி
5.வங்காள மொழி- இந்தியா, வங்காளதேசம்- 18.9 கோடி
6.ஹிந்தி- இந்தியா- 18.2 கோடி
7.போர்த்துக்கீச மொழி- போத்துக்கல்- 17 கோடி
8.ரஷ்ய மொழி- ரஷ்யா- 17 கோடி
9.ஜப்பானிய மொழி- ஜப்பான்- 12.8 கோடி
10.ஜெர்மன்- ஜெர்மனி- 12.5 கோடி
11.பிரெஞ்சு- பிரான்ஸ்- 12 கோடி
12.தமிழ் - இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா- 7.8 கோடி
13.வூ மொழி (சீனம்)- சீனா- 7.7 கோடி
14.ஜாவா மொழி- இந்தோனீசியா- 7.5 கோடி
15.கொரிய மொழி- தென் கொரியா, வட கொரியா- 7.5 கோடி
16.வியட்நாமிய மொழி- வியட்நாம்- 6.7 கோடி
17.தெலுங்கு- இந்தியா- 7.9 கோடி
18.யூவே மொழி (சீனம்)- சீனா- 6.6 கோடி
19.மராட்டி- இந்தியா- 6.4 கோடி
20.துருக்கி மொழி- துருக்கி- 5.9 கோடி 

இந்த நிலையில்தான், இலங்கையில் நான்காவது ஈழப்போரில், இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் ஒத்துழைப்போடு, ஒன்னரை இலட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப் பட்டனர். 

ஆக, இந்தியத் தலைமை அமைச்சர் மோடி அவர்கள், “மக்கள் தொகை அதிகரிப்பால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்திருப்பது தமிழர்களுக்கு அல்ல, வடஇந்திய மக்களுக்கே என்பதை: தமிழர்களுக்கு கடந்த மாதமே விடுக்கப்பட்ட நடுவண் அரசின் எச்சரிக்கை வெளிப்படுத்தவதாய் இருக்கிறது. தமிழக பாஜக தலைமை மோடியின் செய்தியை, தங்களுக்கு இட்ட ஆணையாக அப்படியே கருத்துப் பரப்புதல் செய்யத் தொடங்கி விடுவார்கள். தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,245.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.