Show all

மாறன் சகோதரர்களுக்கு முன்பிணையல் வழங்க கூடாது: அமலாக்கப் பிரிவினர்

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவிரி மாறன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் முன்பிணையல் அளிக்கும்படி மூவரும் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையே இன்று நடந்தது. முன்பிணையல் வழங்குவது தொடர்பான விசாரணை நடந்த போது, மாறன் சகோதரர்களுக்கு முன்பிணையல் வழங்க கூடாது என அமலாக்கப் பிரிவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு நீதிபதி சைனி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் இதே வழக்கில் தொடர்புடைய ஏர்செல்- மேக்சிஸ் நிறுவன அதிகாரிகள் 2 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மலேசியாவில் இருக்கும் அந்த அதிகாரிகள் இருவரும் 4 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதனால் பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். இது தனி வழக்காக நடத்தப்படும் எனவும், இது குறித்து ஆகஸ்ட் 27 ல் முடிவு செய்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.