Show all

ஹிந்தி நடிகர் ஆமிர்கான்: இரண்டு பார்வைகள்

நாட்டுக்கு எதிராக பேசுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று ஹிந்தி நடிகர் ஆமிர் கானை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரியில் பசு இறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். ஹரியாணா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரு குழந்தைகள் ஜாட் சமூக மக்களால் தீயிட்டு கொலை செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களால், நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், நடுவண் ஆளும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதுகளை திருப்பி அளித்தனர். இந்நிலையில், சகிப்பின்மை விவகாரம் தொடர்பாக ஹிந்தி நடிகர் ஆமிர்கான் கருத்து தெரிவித்தபோது, தனது மனைவி இந்தியாவை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்ததாக குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆமிர்கான் தனது கருத்து தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புணேயில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய மனோகர் பாரிக்கர், ஆமிர்கானின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக தாக்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நடிகர் ஒருவர் பேசியபோது, தனது மனைவி இந்த நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக கூறியதாக குறிப்பிட்டார். இது ஆணவம் நிறைந்த கருத்தாகும். ஒருவேளை நான் ஏழையாகவும், சிறிய வீட்டில் வசிப்பவராக இருந்தாலும் கூட எனது வீட்டைத்தான் விரும்புவேன். நாட்டுக்கு எதிராக பேசுவதற்கு அவர்களுக்கு எப்படி துணிச்சல் அல்லது தைரியம் வந்தது? அத்தகைய நபர்களுக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார் பாரிக்கர். இதனிடையே ஆமிர் கான் மீது பாரிக்கர் மறைமுகமாக தாக்கிப் பேசியிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நாட்டை காப்பது பாரிக்கரின் வேலையா? அல்லது ஆமிர்கான் போன்ற சகநாட்டுக்காரரை மிரட்டுவது வேலையா? என்று குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.