Show all

ஜெய்ஷ்-இ-முஹமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு! நடுவண் ஆயுத காவல் படையினர் மீது தாக்குதல்; 18பேர்கள் பலி

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் சிறிநகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லேத்பூரா பகுதியில் நடுவண் ஆயுத காவல்படை வீரர்கள் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரண்டு வாகனங்களிலிருந்த வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த வாகனங்களில் 54 படைப்பிரிவைச்சேர்ந்த வீரர்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகள் நடத்திய இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலில், நடுவண் ஆயுத காவல் படையைச் சேர்ந்த 18 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முஹமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது கீச்சுப் பக்கத்தில் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், இந்தத் தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துகொள்கிறேன். இறந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதேபோல முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, இந்தக் கொடூரத் தாக்குதலைக் கண்டிப்பதற்கு சொற்கள் போதாது. இந்தப் பைத்தியக்காரத்தனம் முடிவதற்குள் எத்தனை உயிர்கள் பலியாகப்போகின்றதோ? என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,063.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.