Show all

ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் தில்லியை நோக்கி நகர்ந்தது உண்மையே

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் தில்லியை நோக்கி நகர்ந்தது உண்மையே என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிஷ் திவாரி கூறினார். எனினும், அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என அப்போதைய ராணுவ தளபதியும், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான வி.கே.சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தில்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி  இரவில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ராணுவத்தின் இரு பிரிவுகள் தில்லியை நோக்கி நகர்ந்தது என செய்தி வெளியிட்டது. அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு இச்செய்தியை மறுத்தது. ராணுவ தளபதியாக இருந்த வி.கே.சிங்கும் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிஷ் திவாரி, ராணும் தில்லியை நோக்கி முன்னேறியது தொடர்பாக நாளிதழிலில் வெளியான செய்தி உண்மை என்றார்.

அப்போது ராணுவ நிலைக்குழுவின் பணியாற்றினேன். அப்போது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டமானது. செய்தி உண்மைதான் என்றார். மேலும், அச்சம்பவம் குறித்த விவாதத்துக்குள் செல்ல விரும்பவில்லை. என் நினைவு தெரிந்தவரை ராணுவம் நகர்ந்தது உண்மையே என்றார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில், 2012 அக்டோபர் முதல் 2014 மே வரை மணிஷ் திவாரி தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

இதுகுறித்து பதிலளித்துள்ள முன்னாள் ராணுவ தளபதியும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான வி.கே.சிங், தற்போது வேலை ஏதும் இல்லாத மணிஷ் திவாரி இவ்வாறு கூறி வருகிறார் என்றார்.

ராணுவம் முன்னேறியது குறித்து தான் எழுதியுள்ள புத்தகத்தை மணிஷ் திவாரி படித்து, உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சியும் மணிஷ் திவாரியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் பி.சி. சாக்கோ மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என மறுத்துள்ளனர்.

அபிஷேக் சிங்வி கூறுகையில், 2012-ம் ஆண்டு டெல்லியை நோக்கி ராணுவம் சென்றது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகின்றேன்.

மணிஷ் திவாரி, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவில் உறுப்பினரும் கிடையாது, இவ்விவகாரத்தில் முடிவெடுக்கும் குழுவில் உறுப்பினரும் கிடையாது. மனிஷ் திவாரியின் கருத்து தேவையற்றது, முற்றிலும் தவறானது என்றார்.

இதனிடையே இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.