Show all

கடந்த 4ஆண்டுகளில் 28,523! வளைகுடா நாடுகளுக்கு பிழைக்கச் சென்று பிணமாக திரும்பியவர்கள், பிணமாகக் கூட திரும்பாதவர்கள் எண்ணிக்கை

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நான்காண்டுகளில் மட்டும் சௌதி அரேபியா உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் நடுவண் அரசு தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கடந்த புதன் கிழமையன்று மக்களவையில், குளிர்கால கூட்டத்தொதொடரின் கேள்வி நேரத்தின்போது, வளைகுடா நாடுகளில் அதிகளவில் உயிரிழந்து வரும் இந்தியர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய நடுவண் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், கடந்த நான்கு ஆண்டுகள்வரை பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

குறிப்பாக, கடந்த நான்காண்டுகளில் மிக அதிகபட்சமாக சௌதி அரேபியாவில் மட்டும் 12,828 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் வெளியிட்ட தகவல் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அதற்கடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7,877 பேரும், குவைத்தில் 2,932 பேரும், ஓமனில் 2,564 பேரும், கத்தாரில் 1,301 பேரும், குறைந்தபட்சமாக பஹ்ரைனில் 1,021 பேரும் உயிரிழந்துள்ளதாக வி.கே.சிங் வெளியிட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் தற்கொலை, சாலை விபத்துக்கள் போன்றவற்றால் உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில் அங்குள்ள இந்திய தூதரகங்கள் வழியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, மேற்கண்ட நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளான அதிக நேரம் பணிபுரிவது, மருத்துவ வசதி பற்றாக்குறை, அதிகமான வெயிலால் ஏற்படும் பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இந்திய அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் அதிகளவிலான இந்தியர்கள் பணிபுரிவதால் அவர்களது பல்வேறு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் நடுவண் அரசின் இணையதள குறைத்தீர்ப்பு சேவையான ஆயுனுயுனு யில் தங்களது பிரச்சனைகளை எழுப்பி, தீர்வு பெறலாம் என்று நடுவண் அரசின் தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பெரியளவில் படிப்பறிவு தேவையில்லை, ஆங்கில அறிவு அவசியமில்லை, கை நிறைய சம்பளம், ஆண்டுக்கு ஒரு மாதம் விடுமுறை, தங்குமிடம்-உணவு இலவசம் போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி தங்களது சொந்த ஊரில் வேலையில்லாதவர்கள் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போக்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஒரு பணியாளருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றாலோ, தரக்குறைவாக நடத்தப்பட்டாலோ அல்லது வேறெதாவது பிரச்சனை இருந்தாலோ அவருக்கு உதவி புரியும் வகையில் துபாயில் சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், அவற்றை அணுகி நீதியை நிலைநாட்டுவதற்கு செலவிட வேண்டிய பணம், நேரம் ஆகியவற்றை கருதி தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பொறுத்துக்கொண்டு இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். 

பணியிடத்தில் நடத்தப்படும் விதமும், காலநிலையும் இங்கு பணிபுரியும் பலரை சொந்த ஊரை நோக்கி இழுத்தாலும், தங்களது குடும்பத்தின் எதிர்காலத்தை எண்ணி தொடர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு கட்டத்தில் நோய்வாய்ப்பட்டோ அல்லது தற்கொலை செய்துகொண்டோ இறக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக சௌதி அரேபியாவில் பணிபுரிந்த ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு அங்கேயே மாரடைப்பால் இறந்துவிட்டார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவரது உடலை தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கு பல்வேறு நடுவண், மாநில அரசுத்துறைகளை அணுகியும் எவ்வித பலனும் அளிக்காததால் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் கையூட்டு கொடுத்து அவரின் உடலை அவர் இறந்து 43 நாட்களுக்கு பின்பு கொண்டுவந்தோம் என்று தனது மோசமான அனுபவத்தை ஒருவர் விளக்குகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,002.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.