Show all

எந்நேரமும் பணம் மையங்களில் இன்று ரூ.4500 கிடைத்தது

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதற்கு பதிலாக 500, 2000 ரூபாய் தாள்கள் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது.

     இந்நிலையில் வங்கியில் இருந்து ரூ.10 ஆயிரமும், எந்நேரமும் பணம் மையங்களில் ரூ.2 ஆயிரமும் மட்டுமே எடுக்க முடியும் என நடுவண் அரசு அறிவித்தது. பின்னர் வங்கி கணக்கில் இருந்து எடுக்கும் பணம் ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

     இதனால் நாடுமுழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவியது. வங்கிகள் மற்றும் எந்நேரமும் பணம் மையங்களின் முன்பு மக்கள் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். போதிய பணம் எடுக்க முடியாமல் பலர் திண்டாடினர். பணம் எடுக்க வரிசையில் காத்திருந்த பலர் உயிரிழனர்.

     90விழுக்காடு எந்நேரமும் பணம் மையங்கள் பூட்டியே கிடக்கும் நிலையில், திறந்திருந்த சில எந்நேரமும் பணம் மையங்களில் பணம் விரைவாக தீர்ந்து போகிறது.

     இந்நிலையில் பணத் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள சிரமங்களை 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளும்படியும், அதன் பின்னர் நிலமை சீராகும் என்றும் பிரதமர் மோடி தெரிவிக்கும் நிலையில், பிரதமர் கூறிய 50 நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் எந்நேரமும் பணம் மையங்கள் மூலம் வழங்கப்படும் பணம் ரூ.2500-ல் இருந்து ரூ.4500ஆக இன்று முதல் உயர்த்தப்பட்டது.

     திறந்திருந்த சிற்சில எந்நேரமும் பணம் மையங்களில்; இன்று காலை பொதுமக்கள் ரூ.4500 எடுத்தனர்.

நேற்றும், இன்றும் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் பல எந்நேரமும் பணம் மையங்கள் பூட்டியே கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாளை முதல் பெரும்பாலான எந்நேரமும் பணம் மையங்கள் செயல்படத் தொடங்கும் என்றும், அவற்றில் 500, 2000 ரூபாய் தாள்கள் தாராளமாக கிடைக்கும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.