Show all

அதிமுக பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்கிறார் சசிகலா

அதிமுக பொதுச் செயலாளராக இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா முறைப்படி பொறுப்பேற்கிறார். முன்னதாக நேற்று மாலை செயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினார்.

     அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக முதல்வராக இருந்த செயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. செயலலிதாவின் தோழி சசிகலா பொதுச் செயலாளராக முன்னிறுத்தப்பட்டார். நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், தேர்தல் மூலம் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை, சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் இன்று காலை 11-ல் இருந்து 2 மணிக்குள் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளராக முறைப்படி பொறுப்பேற்கிறார். முன்னதாக அவர் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அதன்பின், பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுவிட்டு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை அலுவலகம் செய்து வருகிறது.

     இந்நிலையில், நேற்று மாலை அதிமுக பொதுச் செயலாளரான பின் சசிகலா போயஸ்தோட்ட இல்லத்தை விட்டு வெளியில் வந்தார். அவர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் செயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னையன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மாலை 4 மணிக்கே எம்ஜிஆர் சமாதி அருகில் காத்திருந்தனர். தொடர்ந்து, மாலை 5.15 மணிக்கு எம்ஜிஆர், அண்ணா நினைவு இல்லங்களுக்கு இடையில் அண்ணா சதுக்கம் காவல் நிலையம் பகுதியில் அமைந்துள்ள பாதை வழியாக சசிகலாவின் வாகனம் வந்தது. அந்த வாகனம் நேராக செயலலிதா சமாதி அருகில் சென்றது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் சசிகலாவை வரவேற்று, செயலலிதா சமாதிக்கு அழைத்துச் சென்றனர்.

     மாலை 5.20 மணிக்கு செயலலிதா சமாதியில் சசிகலா மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பொதுக் குழு தீர்மானத்தை வைத்து வணங்கினார். பின், செயலலிதா அடக்கம் செய்யப் பட்ட இடத்தைச் சுற்றி வந்தார். அதன்பின், 5.32 மணிக்கு எம்ஜிஆர் நினைவிடம் வந்து, மரியாதை செலுத்தினார். அதன்பின், அங்கிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் புடைசூழ நடந்தே அண்ணா நினைவிடம் வந்த அவர், மரியாதை செலுத்திவிட்டு, 5.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.