Show all

நல்ல நல்ல திட்டங்களோடு ஆந்திர மாநில அரசு! நாடு சுற்றக் கிளம்பி விட்ட மோடி; இது நடுவண் அரசு.

வீட்டில் குடும்பப் பொறுப்பான பையனை வேலைக்கு சென்றிருக்கிறான், தொழிலுக்கு போயிருக்கிறான், என்றும், தண்டச் சோறு தின்று விட்டு வெட்டியாக இருக்கிற பையனை ஊர் சுற்றப் போயிருக்கிறது என்றும் சாடுவார்கள். அப்படி நாட்டிலும்: ஆந்திர மாநிலக்கட்சி ஆட்சியில் பொறுப்பாக திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வரும் நிலையில், நடுவண் அரசில் பொறுப்பேற்றுள்ள மோடி எந்த நல்ல திட்டமும் முன்னெடுக்காமல் நாடு சுற்ற கிளம்பி விட்டார்;.

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆம் மோடி ஆட்சி பொறுப்பேற்றவுடன், மாலைத்தீவுகள், இலங்கை என்று ஒலகஞ் சுற்றக் கிளம்பி விட்டார். 

ஆனால் அதே காலக் கட்டத்தில் மாநிலக் கட்சியாக ஆந்திராவில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக திட்டங்களை அறிவித்து அசத்தி வருகிறார். தொன்னூறு நாட்கள் இடைவெளியில் குடும்ப அட்டைக்கான பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி வரும் என்று அறிவித்துள்ளார். 

இதேபோல் அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் ரத்து செய்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஆந்திராவில் குடும்ப அட்டைப் பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி வரும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கிராம தன்னார்வலர்கள் மூலம் கொண்டு சேர்க்கும் குடும்ப அட்டைப் பொருட்கள் வீடுகளில் கொண்டு சேர்க்கப்படும். அந்த பொருட்கள் அனைவரும் சாப்பிடும் வகையில் தரமானதாகவும் இருக்கும்.

இதற்காக கிராம, நகர மற்றும் மலைவாழ் கிராம பகுதிகளில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் 5 முதல் 15 கிலோ வரை சிப்பங்களாக குடும்ப அட்டைப் பொருட்களை வீடுகளில் சேர்ப்பார்கள். இதேபோல் கிராம தன்னார்வலர்கள் மூலம் அரசின் அனைத்து திட்டங்களும் மக்களிடம் சேர்க்கப்படும்.

மேலும் உழவர்களுக்கு 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது. எப்போது இருந்து என்பதை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்பு தெரிவிக்கப்படும்.

அரசு ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஆலோசித்து முடிவு எடுப்பதற்கு அறங்கூற்றுவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையத்தின் முன்னிலையில் அனைத்து ஒப்பந்தங்களும் பரிசீலிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்படும். பின்னர் அந்த ஒப்பந்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை பெற்று அதன் பிறகே அறங்கூற்றுவர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும். அவர்கள் பரிந்துரையை ஏற்றே ஒப்பந்தங்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும்.

இந்த இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவையில் செயல்படப்போகும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் வந்தால் உடனடியாக நீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களின் கட்சி பதவியும் பறிக்கப்படும். இப்படி திட்டங்கள் நீண்டு கொண்டே போகிறது. 

நடக்கிற நிலைமைகள் எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால், எல்லா பொறுப்புகளையும் மாநில அரசு வசம் கொடுத்து விட்டு, பணம் அச்சடித்தல், இராணுவம் இரண்டை மட்டும் நடுவண் அரசு பார்த்தால், இந்தியா உலக வல்லரசாக மாறி விடும் என்று தெரிகிறது. சரக்கு-சேவை வரி என்ற பெயரில் வரிவாங்கும் உரிமை, நீட் என்ற பெயரில் கல்வி உரிமை, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மண்ணின் உரிமை அனைத்தையும் பறித்து வைத்துக் கொண்டு ஒலகஞ் சுற்றிக் கொண்டிருக்கும் பாஜக குறித்து தமிழக மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களும் புரிந்து கொள்ளும் போது  இந்தியா வல்லரசாக மாறியே தீரும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,180.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.