Show all

இராசராச சோழன் காலம் தாண்டியும் தமிழகத்தில் சாதிகள் தொழில் சார்ந்தே இருந்தன! யாரும் சாதிமாறலாம். தொழில்மாற சாதிமாறும்

இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் தலித் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அவரது ஆட்சிகாலம் தான் இருண்ட காலம் என்று பேசியுள்ளார் இயக்குநர் இரஞ்சித். எந்த அடிப்படையில் அவர் இப்படி பேசினார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள திருப்பனந்தாள் கடைவீதியில், மணி என்பவரின்; நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 

இராசராச சோழன் காலம் தான் பொற்காலம் என்பார்கள்.  ஆனால் இராசராச சோழன் ஆண்ட காலம் தான் இருண்ட காலம். எத்தனையோ பேர் சொல்றாங்க இராசராச சோழன் எங்க சாதி என்று.  இங்குள்ள பறையர்கள் சிலர்கூட சொல்கிறார்கள் இராசராச சோழன் எங்க சாதி என்று.  சத்தியமாக சொல்கிறேன் இராசராசசோழன் என்னுடைய சாதியாக இருக்கவே முடியாது. இருக்கவேண்டிய அவசியமுமில்லை. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலங்கள் முழுவதும் பறிக்கப்பட்டது இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில்தான். சாதியம் தலை தூக்கியதும் அப்போதுதான். அதனால் தான் இருண்டகாலம் என்கிறோம். என்று பேசியுள்ளார் இரஞ்சித்.

வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் இராசராச சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டன. இதன் மூலமாக உற்பத்தி பெருகியது. உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது. 

பறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும், வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார், ‘தீண்டதகாதார் குறித்த குறிப்புகள் சில சோழர் கல்வெட்டுகளில் உள்ளன. ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் பறையர்கள் தீண்டத் தகாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்? பறையர்கள் அந்த காலத்தில் தீண்டதகாதவர்களாக இல்லை. அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டதகாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம். அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்திருக்கலாம். விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டத்தகாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்’ என்று தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன. பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார். அவரது இலக்கியவியல் முதுவர் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது. அதில், சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள் என்கிறார். 

பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை. பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள்” என்றும் ராசுக்குமார் குறிப்பிடுகிறார்.

“இராசராச சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை. பங்குதான் தரப்பட்டது. அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது. இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது. இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல். மற்றொன்று 'குடிநீங்கா பிரமதேயம்”. ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.

சரி. இதில் “குடி” என்பது யார் என்பதை பார்க்க வேண்டும். 'குடி” என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல. யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாறு மாற்றினார்களோ, அவர்களே 'குடி”. அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள். இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள். உழுகுடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள். குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்பட்டதாக சொல்வதெல்லாம் கற்பிதமே” என்று இராசராச சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை விவரிக்கிறார் மே.து.ராசுக்குமார்.

சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள். மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை. அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஏன்பதுதாம் வரலாற்று உண்மை.

பா.இரஞ்சித்திக்கு புரிய வைப்பது மிகமிக கடினம். அவர் தன்னை ஒரு வகையாக கட்டுமானம் செய்து கொண்டு பேசி வருபவர் என்பதை பல இடங்களில் அவர் நிலைநாட்டியிருக்கிறார். அவராக, தன்னை கட்டுமானம் செய்து கொள்ளாமல் வரலாற்றை தெளிவாக படிக்க முயன்றால் மாறலாம். 

தமிழ்ச்சமூகத்திற்கு: பாஜகவிற்கு எதிராகவும், பார்ப்பனிய சக்திகளுக்கு எதிராகவும் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் ஏராளமாக இருக்கின்றன. இதையெல்லாம் புறக்கணித்து நடை போடுவதைத் தவிர வேறு வழியில்லை.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,180.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.