Show all

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களைச் சுமந்துச் சென்று 4,000 கிமீ தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமைகொண்ட அக்னி-4 ஏவுகணை திங்கட்கிழமை ஒடிசா கடலோரப் பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

     இதுகுறித்து ராணுவத் தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறும்போது,

கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன்கொண்ட அக்னி-4 ஏவுகணை, ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே உள்ள அப்துல்கலாம் தீவில் ஒருங்கிணைந்த ஏவுகணை பரிசோதனைத் தளத்தின் 4-வது மொபைல் லாஞ்சரில் இருந்து திங்கட்கிழமை பகல் 11.55 மணிக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

     அக்னி-4 ஏவுகணை திட்டமிட்டபடி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. பரிசோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, 6-வது முறையாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

     தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. 4,000 கிமீ தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் இந்த 2 அடுக்கு ஏவுகணை, 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது.

     5-ம் தலைமுறை கணினி வழிகாட்டி மற்றும் கட்டமைப்புகளைக் கொண்ட அக்னி-4 ஏவுகணை அதிகபட்ச நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், நவீன மற்றும் கச்சிதமான மின்னணுவியல் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கியது.

     ஏற்கெனவே, படையில் சேர்க்கப்பட்டுள்ள அக்னி-1, 2, 3 மற்றும் பிரித்வி ஆகிய ஏவுகணைகளுடன் அக்னி-4 ஏவுகணையும் இணைந்து, இந்திய ராணுவத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது

என்று ராணுவத் தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

     இதே சோதனைத் தளத்தில், கடந்த டிசம்பர் 26-ம் தேதி அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.