Show all

அதிமுக.வின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்கக்கூடாது என்று கோரிய மனு

அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரா திலகன் ஆகியோர், அதிமுக.வின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நடராஜனை நியமிக்கக்கூடாது. மேலும் அதற்கென அதிமுகவின் விதிகளிலும் எந்தவித திருத்தமும் கொண்டு வரக்கூடாது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

     இந்த நிலையில், அதிமுக அவைத் தலைவரான இ.மதுசூதனன், அதிமுக.வுக்கும், சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரா திலகனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே, வி.கே.சசிகலா நடராஜனுக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை நிராகரிக்க வேண்டும் என, நிராகரிப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

     இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதியரசர் கே.கல்யாணசுந்தரம் முன்பு நடைபெற்று வந்தது. அப்போது அதிமுக தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியும், சசிகலா புஷ்பா தரப்பில் மூத்த வழக்குரைஞர் கே.எம்.விஜயனும் வாதிட்டனர்.

     இருதரப்பு வாதங்களை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதியரசர் ஒத்தி வைத்து இருந்தார். இந்த வழக்கில், திங்கள்கிழமை மாலையில் நீதியரசர் கே.கல்யாணசுந்தரம் உத்தரவு பிறப்பித்தார்.

     அதில், இந்த வழக்கில் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தாக்கல் செய்த நிராகரிப்பு மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில், சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் தாக்கல் செய்த பிரதான மனு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.