Show all

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி உண்ணாநிலைப் போராட்டம்

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி சல்லிக்கட்டு உரிமை மீட்பு அமைப்பு சார்பில் டெல்லியில், உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது.

      சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தலைநகர் டெல்லியில் நேற்று சல்லிக்கட்டு உரிமை மீட்பு கழக அமைப்பினர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினர்.

      நடுவண் அரசு அவசர சட்டம் பிறப்பிக்கும் வரையில் தொடர்ந்து உண்ணாநிலை கடைபிடிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உண்ணாநிலைப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது:

      சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் பல்வேறு அமைப்புகளில் இருந்து உண்ணாநிலை மேற்கொள்வதற்காக வந்திருக்கிறோம். சல்லிக்கட்டு உரிமை மீட்பு கழகம் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.

      கடந்த இரண்டு ஆண்டுகளாக சல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்வதாக கூறி வரும் நடுவண் அரசு அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சல்லிக்கட்டில் மிருகவதை எதுவும் இல்லாத போதிலும் கூட,

பீட்டா போன்ற-

தமிழகப் பண்பாட்டிற்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் தொடர்பே யில்லாத பன்னாட்டு நிறுவனங்கள்-

நாட்டுக் காளைகளின் உற்பத்தியை தடுக்கும் உள்நோக்கத்தோடு,

காளைகளை வதைப்பதாக பொய்யான தகவல் கூறி தடை பெற்றுக்கொண்டார்கள்.

      ஏதாவது தவறு நடந்தால் கண்டிப்பாக தண்டிக்கலாம். ஆனால் சல்லிக்கட்டை முற்றிலும் தடை செய்வது நீதி அல்ல. சல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக நடுவண் அரசு அவசர சட்டம் இயற்றும் வரை நாங்கள் தொடர்ந்து உண்ணாநிலையில் இருப்போம்.

      டெல்லியில் இருந்து பண்பாட்டு அமைப்புகள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.