Show all

இன்று உலகத் தாய்மொழித் திருநாள்! பெருகட்டும் தமிழ்அடையாளம் பேணுவோரின் எண்ணிக்கை

பிள்ளைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியைக் கொடுத்தல், பிள்ளைகளுக்குத் தமிழில் மட்டுமே பெயர் சூட்டுதல், தங்கள் நிறுவனங்களுக்கும் தமிழில் மட்டுமே பெயர் சூட்டுதல், தொழில் வணிகத்தில் தமிழில் மோலண்மையை முன்னெடுத்தல், தெய்வங்களைத் தமிழ் அடிப்படையில் வழிபடுதல், தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்று முன்னேற்றக்கலைகளைக் கொண்டாடுதல் என்று தமிழ்அடையாளம் பேண முனைவோர்களை ஆற்றுப்படுத்தவும், தமிழ்அடையாளம் பேணுவோரின் எண்ணிக்கை பேரளவாக வளரவும், ஊக்குவிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

உலகத் தாய்மொழித் திருநாளில் பெருங்கவிஞர் வைரமுத்து அவர்களின் கீச்சுப் பதிவு.

இன்று
உலகத் தாய்மொழித் திருநாள்

வாழ்த்து அச்சம் இரண்டையும்
பகிர்ந்து கொள்கிறேன்

தாய் என்ற அடைமொழிகொண்ட
சொற்களெல்லாம் உயர்ந்தவை;
உலகத் தன்மையானவை மற்றும்
உயிரோடும் உடலோடும் கலந்தவை

தாய்நாடு தாய்ப்பால்
தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள்

ஆனால்,
உலகமயம் தொழில்நுட்பம்
என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும்
தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன

உலக தேசிய இனங்கள்
விழிப்போடிருக்கவேண்டிய
வேளை இது

அரசு ஆசிரியர் பெற்றோர்
மாணவர் ஊடகம் என்ற ஐம்பெரும்
கூட்டணிகளால் மட்டுமே
இந்தப் பன்னாட்டுப்
படையெடுப்பைத் தடுக்கமுடியும்

சரித்திரத்தின் பூகோளத்தின்
ஆதிவேர் காக்க
ஓர் இனம்
தாய்மொழி பேணவேண்டும் 

எங்கள் தாய்மொழி
எங்கள் அடையாளம் 
மற்றும் அதிகாரம்.

09,மாசி,தமிழ்த்தொடராண்டு-5125:

உலகின் ஒட்டுமொத்த மனிதர்களையும் இரண்டாகப் பிரிக்கலாம். அந்த இரண்டில் 1.இயல் அடையாளத்தில் இயங்குகிறவர்கள் 2.அயல் சார்பில்; இயங்குகிறவர்கள்.

இயல் அடையாளத்தில் இயங்குகிறவர்களை அதிகபட்சம் ஒன்பது என்கிற ஒற்றைப்படை எண்ணிக்கைக்குள் அடக்கிவிட முடியும்.

அயல் சார்பில் இயங்குகிறவர்களை மிகக் குறைந்த பட்சம் ஒன்பது என்கிற ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கி பற்பலவாக விரித்துக் கொண்டே போகலாம்.

உலகளாவிய இயல்கள் பெரும்பாலும் மதங்களாகவும் அடுத்து அரசியல் கோட்பாடாகவும், மூன்றாவதாக மொழியினமாகவும் அமைகின்றன.

அரசியல் கோட்பாடு என்கிறபோது கார்ப்பரேட் முதலாளிகளும், மார்க்சியம் அல்லது லெனினியத்தைக் கொண்டாடும் கம்யூனிஸ்டுகளும் ஆவர். இவர்கள் யாரும் பெரியஅளவில் எந்த மொழியையும் கொண்டாடுவது இல்லை. இவர்களின் மதங்கள் மண்ணுக்கு ஏற்றவாறு வேறுவேறு ஆகும்.

ஆங்கிலேயர்கள் தங்களை மொழியின் கீழ் ஓர்மைப்படுத்திக் கொள்வது இல்லை. ஏனெனில் ஆங்கிலம் என்பதே ஒரு கலவை மொழி என்பது பற்றியது காரணம். அவர்களின் இயல்அடையாளமாக கிறித்துவ மதமே நிற்கிறது. அவர்களின் அரசியல் கோட்பாடு யாரும் முதலாளி ஆகலாம் என்கிற முதலாளித்துவம்.

உருது மற்றும் அராபிய மொழியினரும் தங்களை மொழியின் கீழ் ஓர்மைப்படுத்திக் கொள்வது இல்லை. ஏனெனில் அவர்களிடமும் தனிமொழியாக எதுவும் இல்லை என்கிற காரணம் பற்றியது ஆகும். அவர்களின் இயல்அடையாளமாக முகமதிய மதமே நிற்கிறது. அவர்களின் அரசியல் கோட்பாடு மண்ணின் மக்களைக் கொண்டாடும் முதலாளித்துவம் ஆகும்.

இன்னும் புத்தம், சமனம் மற்றும் சீக்கிய மதங்களும் பேரளவாக மொழியைக் கொண்டாடுவது இல்லை. அவர்களின் அரசியல் கோட்பாடு மண்ணின் மக்களைக் கொண்டாடும் முதலாளித்துவம் ஆகும்.

ஹிந்து மதம் சமஸ்கிருத மொழியைக் கொண்டாடுகிறது. ஹிந்திமொழியை நிர்பந்திக்கிறது. இவர்களின் அரசியல் கோட்பாடு பிராமணியப் பேரினவாத முதலாளித்துவம், பிராமணியத்தை எதிர்க்காத உலகளாவிய கார்ப்பரேட்டுகள் ஆகும்.

வடஇந்தியர்களுக்கு- அரசியல் கோட்பாடு கார்ப்பரேட் முதலாளித்துவமாக இருக்கிறது. மதக்கோட்பாடு ஹிந்து மதமாக இருக்கிறது. மொழியைப் பொறுத்தவரை- சமஸ்கிருதம் கொண்டாட்ட மொழி மட்டுமே. சமஸ்கிருதத்தை யாரும் படிப்பதும் இல்லை. பேசுவதும் இல்லை. ஆக மொழிஅடிப்படை ஹிந்தி என்கிற ஒற்றை மொழியாக இருக்கிறது. அதனால் அவர்களில் 99 விழுக்காட்டினர் இயல் அடையாளத்தில் இருக்கிறார்கள்.

எந்த மத வட்டத்திலும், எந்த அரசியல் கோட்பாடு வட்டத்திலும் அடக்க முடியாத தமிழர்களின் ஒட்டுமொத்த இயல் அடையாளம் தமிழ் மட்டுமே. 

காரணம் 1.தமிழ், உலக மொழிகளில், தனித்த மொழியாகும். 2.தமிழ் மொழிக்குச் சொந்தமான காலக்கணக்கு உண்டு. 3.உலக மொழிகளில் தமிழ்மட்டுமே தன் மூலமொழியாக தன்தமிழையே கொண்டுள்ளது. 4.தமிழ் அடையாளமாகவே- யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கி பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை அதனினும் இலமே என்கிற ஒப்புரவே தமிழர்தம் அரசியல் கோட்பாடாக இருக்கிறது. 5.தமிழ் அடையாளமாகவே- தமிழர்களுக்கான மதம் என்று சொல்லத்தக்க, வாழ்க்கை நெறியாக ஐந்திரம் (அகன்ஐந்திணை) என்கிற பொருள் இலக்கணமும் இருக்கிறது. ஆக, இவற்றில் இயங்குவதே தமிழர்தம் இயல்அடையாளம் ஆகும்.

தமிழியல், இவ்வளவு நுட்பமான திணிவைக் கொண்டுள்ளதன் காரணமாகவும், ஒன்றிய ஆட்சிஅதிகாரத்தில் பிராமணியம் வீற்றிருக்கிற காரணமாகவும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று வெற்று நம்பிக்கையைத் தந்திட அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம் என்கிற பல்வேறு அயல்கள் சூழ்ந்து நெருக்குவதாலும், தமிழர் உதிரியாக பல்வேறு அயல்களில் இருக்கிறார்கள்.

பிள்ளைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியைக் கொடுத்தல், பிள்ளைகளுக்கு தமிழில் மட்டுமே பெயர் சூட்டுதல், தங்கள் நிறுவனங்களுக்கும் தமிழில் மட்டுமே பெயர் சூட்டுதல், தொழில் வணிகத்தில் தமிழில் மோலண்மையை முன்னெடுத்தல், தெய்வங்களைத் தமிழ் அடிப்படையில் வழிபடுதல், தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்று முன்னேற்றக்கலைகளைக் கொண்டாடுதல் என்று தமிழ்அடையாளம் பேண வேண்டிய தமிழர்களில் 99 விழுக்காட்டினர் நடப்பில் அயல்களில் உலாவருவதற்கான கட்டாயம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதரவாகவோ- முரண்பாடுகளாகவோ- பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம் என்கிற பல்வேறு அயல்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கிற- திராவிடம், ஐரோப்பிய இயல்அறிவுக்கான (சயின்ஸ்) தனித்தமிழ், தமிழ்தேசியம், நவீனத்துவம், ஆன்மீகம், பக்திமார்க்கம், சிவனியம், மாலியம், தமிழ்நிலத்திற்கு பொருந்திய பொதுவுடைமை என்கிற அயல் சார்புகளில் உலாவருவதற்கான கட்டாயம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகில் இருப்பவர்களில் பெரும்பான்மையோர் அறுபது விழுக்காட்டில் இருந்து எண்பது விழுக்காடு வரை இயல் அடையாளத்திலேயே பயணிக்கின்றனர்.

தமிழை, தமிழினத்தை, தமிழியலை, தமிழ் வரலாற்றை அதுவும் தமிழிலேயே இழித்தும் பழித்தும் பேசுகிறவர்கள் தமிழ்மண்ணிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் பேரளவினராக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பல்வேறு அயல் சார்பில் இயங்குகிறவர்களாக இருக்கிறார்கள். 

இது தமிழ் அடையாளத்தைப் பேணுகிறவர்களுக்கு தமிழில் இருந்து கொண்டிருப்பவர்களுக்கு பேரளவு நெருக்கடியாக அமைகிறது.

ஜெயமோகன் என்பவரின் தமிழின் ஐம்பரிமாணங்களின் மீதான பழிப்பும் இழிப்பும், மன்னர் மன்னர் என்கிற வராற்றாய்வாளரின் போற்றுதலும் கொண்டாடுதலும் தமிழ் ஊடகங்களால் சம உயரத்திற்குத் தூக்கிப்பிடிக்கப்படுகிறது.

இது தமிழ் அடையாளத்தைப் பேணலாமே என்று முயல்கிறவர்களுக்கும் மிகப்பெரும் அறைகூவலாக அமைந்து நிற்கிறது.

எந்த அதிகாரமும் இல்லாத தமிழ்மண்ணுக்கான அரசு- ஹிந்துத்துவா இயல்அடையாளத்தைக் கொண்டாடும் ஒன்றிய அரசின் மேலாண்மைக்கு கட்டுப்பட வேண்டிய நெருக்கடி பேணப்படுகிறது.

இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு, தமிழ்அடையாளத்தைப் பேண முனைவோரின் எண்ணிக்கை பெருகி வளர, எனது பேரளவான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,896.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.