கார்  ஒருபக்கமாக இழுத்துக் கொண்டு போவது போல் தெரிந்தது. மணியைப் பார்த்தேன். அதிகாலை 3.30 மணி. சோடியம் விளக்குகளின் ஆரஞ்சு வர்ணத்தில் தெருவெங்கும் அமைதி. வண்டியை ஒரு விளக்கின் அருகே ஓரங்கட்டினேன். கதவைத் திறந்து இறங்கினேன் . காரைச் சுற்றிவந்து பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. அறைகுறை வெளிச்சம் வேறு. மீண்டும் ஏறி காரை எடுத்தேன். சிறிது தூரம் போவதற்குள் தப்தப் என்று பின்னாலிருந்து சத்தம். வண்டி இடது புறமாக இழுத்துக் கொண்டே சென்றது. வண்டியை நிறுத்தி இறங்கினேன் இடது பின்புற சக்கரம் சக்கையாகி இருந்தது. அடடா 6மணிக்குள் வீட்டிற்கு போய் விடலாம் என்று நினைத்தேனே?

சுற்றிவரப் பார்த்தேன். அது மன்னார்புரம் நால்ரோடு. திருச்சி  ஊருக்குள் இருந்து வரும் சாலையும் கே.கே. நகருக்குச் செல்லும் சாலையும் சந்திக்கும் இடம்.  ஒரு ஈ காக்கை இல்லை அகாலாமான நேரம். இப்பொழுது கிளம்பினால்தான் புதுக்கோட்டைவழியாக ஊருக்கு  6மணிக்குப் போக முடியும். என்ன செய்ய? வேறுவழியில்லை நேரம் கடத்தாமல் ஸ்டெப்பினியை மாற்றிவிடலாம் என்று களத்தில் இறங்கினேன்.

இதுவரை ஒருமுறை தான் ஸ்டெப்பினி மாற்றியிருக்கிறேன் அதனால் என்ன? சிறிது நேரமாகும் அவ்வளவுதானே.. இடதுபுற இருக்கையை எடுத்து கீழே வைத்தேன். ஜாக்கியை எடுத்துக் கொண்டேன். ஜாக்கியை பின்புற ஸ்பிரிங் பட்டையின் கீழ் கஷ்டப்பட்டு கீழே படுத்துக் கொண்டு வைத்தேன். ஜாக்கி லிவரை மாட்டி இயக்கத் தொடங்கினேன். வண்டி மெதுவாக மேலே உயர்ந்தது. ஸ்பானரை எடுத்து தட்டுத் தடுமாறி சக்கரத்தின் நடுவே இருந்த போல்டைக் கழட்டினேன். ஷோ கப்பைப் பிரித்துக் கீழே வைத்தேன். பின் நான்கு நட்டுகளையும் கழட்டிவிட்டு சக்கரத்தை கீழே இறக்கினேன்.

ஸ்டெப்னியைக் கழட்டி எடுப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து போய் விட்டது. அதை உருட்டிக் கொண்டு வந்து தூக்கி நான்கு போல்டுகளில் வைத்தேன். சரக்கென்று ஒரு போல்ட் மட்டும் உள்ளே போய் விட்டது. என்னடா இது தலைவலி என்று சக்கரத்தைக் கீழே வைத்து விட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். வேர்த்து வழிந்தது. சட்டையெல்லாம் நனைந்து விட்டது அனுபவம் இல்லாத வேலை  சிறிது கஷ்டம் தான். அந்த போல்ட்டை இழுத்து வைத்து முயற்சி செய்தேன் மீண்டும் உள்ளே போய்விட்டது. ஒரு போல்ட் இல்லாமல் எப்படி சக்கரத்தை மாட்டுவது?

வழிந்த வியர்வையை வழித்தெறிந்து விட்டு, சுற்றி வர பார்த்தேன் . மணி வேறு நாலே கால் ஆகி விட்டது. ஒரு குட்டி  நாய் ஓடி வந்தது . அதன் பின் ஒருவர் நடந்து வந்தார் பளிச்சென்று சவரம் செய்யப் பட்ட முகம் நெற்றியில் கீற்றாக விபூதி. அரைக்கால் சட்டை டிசட்டை கான்வாஸ் காலணி. 60வயதிருக்கலாம் அனைவரையும் கவரக்கூடிய தோற்றம்.

என்ன சார்! பஞ்சரா?...என்றார்

ஆமா சார்! ஸ்டெப்னியை மாட்ட முடியலே.

ஒரு போல்ட் தகராறு பண்ணுது. பக்கத்திலே மெக்கானிக் யாராவது இருப்பாங்களா?

பக்கத்தில் என்ன? இந்த வரிசை பூரா மெக்கானிக் ஷாப்தான் ஆனா பாருங்கோ! அகாலமான நேரம். ஏப்ரல் முதல் தேதி வேற. நேத்திக்கு எல்லோரும் புதுக்கணக்கு போட்டுட்டு லேட்டாதான் போயிருப்பா! இப்ப ஒரு குளுவானையும் பார்க்க பத்து மணியாவது ஆவும். பேசாம படுத்துத் தூங்குங்கோ! காலம்பற பாத்துக்கலாம்.

காலேலயா? நான் அவசரமாகப் போகனும் சார்! என்றேன் பரிதாபமாக.

ஊதவியா! ஏன் சார்! நேக்கே நெறய வேலை கிடக்குது. உங்களோட சேர்ந்து என்னையும் அல்லாட சொல்றிங்களா? இம்பாசிபிள்! ஆத்துக்காரி காத்திண்டிருப்பா..... காப்பி கூட சாப்பிடல.. இன்னும் ஒருகிலோ மீட்டர் நடக்கனும் வேற. ஆளப்பாருங்கோ... என்று செல்லியவாறே அந்தப் பெரியவர் நாயைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார்.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நேரத்திற்குப் போய் சேராவிட்டால் தவிப்புடன் காத்திருக்கும் அம்மாவின் முகம் நினைவில் வந்தது. ஊரில் தொலைபேசி வசதியும் இல்லை.

காரைப் பூட்டிக் கொண்டு தெருவோரமாக நடக்கத் தெடங்கினேன். சிறிது தூரம் சென்றவுடன் ஒரு பெட்ரோல் பங்க் வந்தது. அங்கிருந்தவரிடம் விசாரித்தேன். அடுத்தாற் போலிருந்த கட்டிடத்தைக் காட்டினார்கள். அங்கு சென்று பார்த்தேன். அது ஒரு டயர்கம்பெனி. காவல்காரர் மட்டும் இருந்தார். அவரிடம் விசாரித்தேன்.

சார் மெக்கானிக் எல்லாம் பத்து மணிக்கு தான் வருவாங்க. நா வாட்ச் மேன் என்ன செய்யட்டும்? ஏன்றார் அவர்.

வெளியே வந்து சுற்றிலும் பார்த்தேன். எதிர் வரிசையில் ஒரு தேநீர் கடை திறப்பதற்கான அறிகுறி தெரிந்தது. வேகமாக தெருவைக் கடந்து அங்கே சென்றேன். தூக்கக் கலக்கத்துடன் ஒருவன் வாசலைக் கூட்டிக் கொண்டிருந்தான். இன்னொருவர் அடுப்பை மூட்டிக் கெண்டிருந்தார். சுத்தமாகக் குளித்து வெள்ளை  வேட்டி சட்டை அணிந்து விபூதி சந்தனம் குங்குமம் அணிந்து மலர்ச்சியாக இருந்தார். பார்த்தவுடன் மனதைக் கவரும் முகம். அவரிடம் விவரம் சென்னேன். யோசனையாகப் பார்த்தார். அடடா அப்படியா? இப்ப ஆள் கிடைப்பது சிரமமாச்சே! கூம் ஏண்டா டேய்! உனக்கு யாராவது தெரியுமாலே?  என்று கூட்டுகிறவனைப் பார்த்துக் கேட்டார். அவன் தெற்குப் பக்கமாக கையைக் காட்டினான். உடனே இவர்ஆமாலே! மைக்கேல் இருப்பான்லே!.... சார் ஒன்னு பண்ணுங்கோ! ரெண்டு கடை தள்ளிப் போங்க. அங்கே மைக்கேல் டயர் ஒர்க்ஸ் அப்படின்னு போர்டு போட்டிருக்கும். அங்ஙனே வரிசையா லாரி நிக்கும். அதுலே ஒருத்தன் படுத்துக் கிடப்பான். அவந்தான் மைக்கேலு. எழுப்புங்க! வருவான் என்றார்.

அப்பாடா என்று வேகமாக நான் அங்கே ஓடினேன். அங்கு ஐந்தாறு லாரிகள் நின்றிருந்தன. ஒவ்வொன்றாக ஏறிப்பார் த்தேன். ஒன்றில் ஒருவன் படுத்திருந்தான். தட்டி எழுப்பினேன். அவன் அசையவேயில்லை. தெடர்ந்து தட்டினேன். என் தெந்தரவு பொறுக்காமல் லேசாகப் புரண்டான். சீ! கஸ்மாலம்! கடெக்கும் வந்து தெந்தரவு பண்றே! என்றவாறு மீண்டும் தூங்கிப் போனான். எனக்கு என்ன செய்வதென்றே புரியாமல் மீண்டும் கடைக்கு வந்தேன்.

அதற்குள் அடுப்பை மூட்டி வடைச்சட்டியை ஏற்றியிருந்த அவர்என்ன சார்! இருந்தானா? என்று கேட்டார். எங்க?.... அந்தாள எழுப்பவே முடியல என்றேன் சோர்வாக. லேட்டாதான் படுத்திருப்பான் சரி வாங்க நான் வர்றேன். டேய்! அடுப்பைப் பாத்துக்கடா...என்று நடக்கத் தெடங்கினார். நான் அவரைத் தெடர்ந்தேன்.

அவர் போய் அவனை எழுப்பினார் . அவன் விழிக்கவேயில்லை. கீழேயிருந்து ஒரு டப்பாவில் தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் விசிறி அடித்தார் . சடடென்று அவன் எழுந்து கெண்டான்.

என்னப்பாது? ராத்திரியிலே ஒரே ரவுசாயிருக்கு... இப்பத்தா படுத்தேன் என்றான்.

டேய்! நான்தான்ல! எழுந்திர்றா மைக்கேலு!

யாரு? ராசண்ணணா? என்னண்ணே அர்த்த ராத்திரியிலே?

அர்த்த ராத்திரியா? மணி அஞ்சாகப் போகுது...

சாருக்கு வண்டியிலே ஏதோ பிரச்சைனையாம்.. போய் பாரு போ ரொம்ப நேரமா தவிக்கிறாருலே...

என்ன சார்  என்றான் என்னைப் பார்த்து. விவரம் சொன்னேன். தலையைச் சொறிந்து கொண்டான்.

பங்சர்  பாக்கலாம் ஸ்டெப்பினி மாத்தலாம். அவ்வளவு தான்சார்  நமக்குத் தெரிச்சது! இதெல்லாம் எனக்குத் தெரியாது சாரே. என்றான்.

நான் பரிதாபமாகப் கடைக்காரரைப்  பார்த்தேன். மீண்டும் படுக்கப் போனவனைப் பார்த்து அவரு ஏதோ அவசரமா போகனுமாம்லே!.. போய்தா என்னான்னு பாருலே! என்றார் . என்னாண்ணே என்று அவன் எழுந்தான். கீழே குதித்தான். கை வைத்த காலர்  பனியன். அழுக்கு கைலி. பரட்டைத் தலை கழுத்தில் கருப்புக் கயிற்றில் சிலுவை டாலர் . பீளையுடன் சிவந்த கண்கள்.

உணர்ச்சியே காட்டாத முகம். சோம்பல் முறித்தான். இடுப்பு பெல்டில் தேடி பீடி எடுத்துப் பற்ற வைத்துக் கெண்டான். கைலியை டப்பாக் கட்டுக் கட்டிக் கெண்டான். கோடு போட்ட நீல நிற அண்ராயர் தெரிந்தது. அரைத்து அரைத்து நடக்க தொடங்கினான் கடைக்காரர்  அவர் கடைக்குப் போய் விட்டார் . விதியை நொந்து கொண்டு நடந்தேன்.

டார்ச் இருக்கா? என்றான். விளக்கு வெளிச்சத்தில் ஆராய்ந்தான். அந்த ஒரு போல்ட்டை ஆட்டிப் பார்த்தான். சட்டென்று உள்ளே போய் விட்டது. மற்றதை ஆட்டிப் பார்த்தான் அவை ஆடாமல் இருந்தன. உதட்டைப் பிதுக்கினான்.

என்ன சாரே இப்படி இருக்காதே! எதுக்கும் பார்ப்போம். ஒரு கை பிடிங்க!  என்றான். இருவரும் சேர்ந்து சக்கரத்தைத் தூக்கினோம். அவன் மேலிருந்து சாராய நெடியும் பீடி கிரிஸ் நெடியும் கலவையாக அடித்தது. முகத்தைச் சுளித்துக் கொண்டேன். அந்த போல்ட் கொட கொட என்று ஆடியது. சக்கரத்தைக் கீழே வைத்து விட்டு மீண்டும் ஆராய்ந்தான். அந்த போல்டை கையால் பிடித்து இழுத்தான். மெதுவாக வெளியே வந்தது. சரியாக வெளியே வரவில்லை. பீடியைக் கீழே போட்டான். தம்கட்டி இழுத்தான். கடக் என்று சத்தம் கேட்டது. உடைந்து விட்டதோ என்று கிலியுடன் எட்டிப் பார்த்தேன். அந்த போல்ட் நன்றாகப் பொருந்தி உட்கார்ந்திருந்தது.

ஒண்ணுமில்ல சாரே! ஒரு காடி இருக்கு. அதில் சரியா உட்காரலே! அவ்வளவுதான். இப்ப சரியா உட்கார்ந்துகிச்சு என்றான் . அடுத்த ஐந்து நிமிடங்களில் விறு விறு என்று சக்கரத்தை மாட்டி ஜாக்கியை எடுத்து எல்லா வேலைகளையும் முடித்து விட்டான் . நான் பெருமூச்சு விட்டேன். அவன் சிரித்தான். அப்பொழுது கூட அவன் முகம் உணர்ச்சியே காட்டவில்லை.

அதற்குள் அந்தக் கடைக்காரர்  வந்து விட்டார் . என்ன சார்? முடிஞ்சிருச்சா? என்றார். ஆமாங்க! ரொம்ப நன்றிங்க! சரியான நேரத்திலே உதவி செஞ்சிருக்கீங்க... என்றேன்.

சரி வாங்க டீ போட்டாச்சு. குடிச்சிட்டு போகலாம் என்றார். நான் தேநீர்  குடிப்பதில்லை என்று சொல்ல நினைத்து அவர்  முகத்தைப் பார்த்து ஒன்றும் செல்லத் தோன்றாமல் அமைதியாகப் பின்னால் சென்றேன்.

என் கைகளில் சட்டையில் ஒரே தூசி. லேசாக அழுக்கு இருந்தாலும் முகம் சுளிக்கும் நான் அந்த கறைபடிந்த டம்ளரில் தேநீர் குடித்தேன். அருமையான சுவை. ரொம்ப நன்றி நன்றி ஐயா!

வந்து மைக்கேலுக்கு எவ்வளவு கொடுக்க? என்றேன். அவர்  பதில் சொல்லாமல் மைக்கேலைப் பாரத்தார் . மைக்கேலோ சும்மா பத்திருபது ரூபா கொடு சாரே! தம்மாத்துண்டு வேலைக்கு இன்னா காசு வாங்கறது? என்றான்.

நான் பைக்குள் கை விட்டேன். ஐம்பது ரூபாய் நோட்டு வெளியில் வந்தது.

அதையெல்லாம் கொடுத்து இவாளைக் கெடுக்காதிங்க- குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன். தேநீர்  கடை இருக்கையில் நாயுடன் வந்த அந்தப் பெரியவர்.

இந்த சின்ன வேலைக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தேள்னா நாளபின்ன நாங்கன்னா இவாளோட அவஸ்தைப் படனும் என்றார். ஆங்கிலத்தில்.

ஆமாம்! அவர்  சொல்வது நியாயம் தானே! இந்த வேலைக்குப்  போய் ஐம்பது ரூபாயா? நேட்டை உள்ளே வைத்தேன். திரும்பி அவர்களைப் பார்த்தேன்.

தூக்க வெருட்சியுடன் சிவந்த கண்களுடன் உணர்ச்சியே காட்டாத மைக்கேலின் முகம்.

தேளிவான கனிந்த அன்புடன் ராசண்ணாவின் முகம்.

அறிவொளி வீசும் பெரியவரின் முகம்

பையைத் துழாவினேன். ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்தேன். மைக்கேல் கையில் கொடுத்தேன். ராசண்ணாவைப் பார்த்து சிரித்து தலை தாழ்த்தி கை குவித்தேன். நடக்க தொடங்கினேன்.

கிழக்கு வெளுக்க ஆரம்பித்தது...

மனித முகங்களைப் போலவே!

-சோமு.பழ.கருப்பையா

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.