Show all

தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் அவற்றைக் கொண்டாடுங்கள்

தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் கொண்டாடும் போது, அந்தக் கொண்டாட்டம் உங்கள் அதிகாரம் ஆகிறது. மாறாக அயல் அடையாளத்தில் கொண்டாடும் போது உங்கள் கேட்புகள் கடவுளை நேரடியாகச் சென்றடையாமல், அயலின் வரிசைப்பாட்டுக்கு உள்ளாகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

08,தை,தமிழ்த்தொடராண்டு-5124: தெய்வங்கள் மூன்று வகைப்படும். ஒன்றாவது. கடவுள் கூறு தெய்வங்கள். இரண்டாவது. இறைக்கூறு தெய்வங்கள். மூன்றாவது. குலதெய்வங்கள்.

கடவுள் கூறு தெய்வங்கள்: முருகனின் அனைத்து வடிவங்களும் அனைத்து கோயில்களும். சிவனின் அனைத்து வடிவங்களும் அனைத்து கோயில்களும். பிள்ளையாரின் அனைத்து வடிவங்களும் அனைத்து கோயில்களும். 

கடந்தும் உள்ளும் இருக்கிற கடவுள் கூறு சேயோன். கடந்தும் உள்ளும் இருக்கிற மலையும் மலை சார்ந்த திணையானது  குறிஞ்சி. அதனால் குறிஞ்சி நிலத் தெய்வம் சேயோன். 

குறிஞ்சி நிலத்திற்கான தெய்வத்தை சேயோன் அல்லது முருகன் என்று பட்டியல் இட்டுள்ளனர் தமிழ்முன்னோர். சேயோன் முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று அடையாளப்படுத்துகிற போது, தமிழ்- நமது, மகளாகவோ, மகனாகவோ தமிழ்முன்னோர் நிறுவியதை உய்த்துணர முடியும்.

ஆக மகனையோ மகளையோ குறிக்கிற பிள்ளையார் என்பது பிடித்து வைத்து தொழுகிற அடையாளம் ஆகும். பெரும்பாலும் மஞ்சள் தூளில் பிள்ளையார் பிடிக்கப்படும். பிற்காலத்தில் அது வடஇந்திய கணபதிக்கும் விநாயகருக்கும் பெயராகச் சூட்டப்பட்டு விட்டது. ஆக தமிழன் கட்டிய பிள்ளையார் கோயில் அனைத்தும் கடவுள் கூறே.

கடவுள் உருத்து வந்து ஊட்டும் ஆற்றல் என்கிற நிலையில் கடவுள் கூறு ஆன தெய்வம் உருத்திரம் என்றும் தமிழ்முன்னோரால் சுட்டப்பட்டது. 

ஆக சோயோன் என்பதும், பிள்ளையார் என்பதும், உருத்திரம் என்பதும் ஒன்றேதான். உருத்திரமே சிவம் என்கிற பெயரும் பெறுகிறது. தமிழ்அடிப்படையில் சோயோனும், பிள்ளையாரும், உருத்திரமும், சிவமும் ஒன்றேதான். 

பார்ப்பனியம் அந்த மூன்று தெய்வங்களையும் முருகன் என்கிற தம்பி, பிள்ளையார் என்கிற அண்ணன், சிவன் என்கிற அப்பா என்றாக்கிவிட்டது. 

அடுத்து- முல்லை, மருதம், நெய்தல், பாலை திணைகளுக்கு தமிழ் முன்னோர் நிறுவிய ஆற்றல் மூலமான இறைகள்: முல்லைக்கு நிலமும், மருதத்திற்கு நீரும் நெய்தலுக்கு காற்றும் பாலைக்கு தீயும் ஆகும்.

தமிழ் முன்னோர் இறைக்கூறு ஆக நிறுவிய தெய்வங்கள் முல்லைக்கு மாயோனும், மருதத்திற்கு வேந்தனும், நெய்தலுக்கு வருணனும், பாலைக்கு கொற்றவையும் ஆகும்.

இறைக்கூறு தெய்வங்கள்- முல்லைத் திணை: மாலியத்தின் அனைத்து வடிவங்களும் மாலியக் கோயில்களும்.

இறைக்கூறு தெய்வங்கள்- பாலைத் திணை: அனைத்து பெண் தெய்வ வடிவங்களும் பெண்தெய்வக் கோயில்களும். 

இறைக்கூறு தெய்வங்கள்- மருதத் திணை: மருதத் திணைக்கு வேந்தனே தெய்வம். வேந்தன் வழிபாடு பழந்தமிழரால் மட்டுமே பெருவழக்காகக் கொண்டாடப்பட்டிருந்தது. வேந்தன் விழாவை இந்திர விழா என்று கொண்டாடியது தமிழ்நாட்டிற்கு மட்டுமே உள்ள சிறப்பாகும். இந்திரன் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லே.

தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இந்திரவிழாவைத் தொடங்கினார். சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசு விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்தது என அறியலாம்.

வேதகால ஆரியர்கள் இந்திரனை மொழிமாற்றம் செய்யாமல், தேவேந்திரன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டாடிய போதும் இராமயன மகாபாரத காலத்தில் தேவேந்திரனை பார்ப்பனியர்கள் மதிக்கவில்லை. அதனால் வேந்தன் வழிபாட்டிற்கோ அதன் திரிபான இந்திரன் வழிபாட்டிற்கே கோயில்கள் இல்லை. ஏன் இந்திரனுக்கு கோயில்கள் இல்லை என்பதற்கு நிறைய புனைக்கதைகள் எல்லாம் கட்டமைக்கப்பட்டுள்ளன.
 
ஆனால் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் வழியில் இருக்கிறது மருந்துவாழ் மலை. இந்த மலைக்குப் பின்புறமாக உள்ள மயிலாடி பெருமாள்புரத்தில் இருக்கும் குன்று, 'தேவேந்திரன் பொத்தை' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குன்றில்தான் இந்திரனின் குகைக்கோயில் உள்ளது.

ஆள் நடமாட்டமே இல்லாத, சுற்றிலும் மரங்களும் செடிகளும் அடர்ந்து காணப்படும் மலைப்பகுதியில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்திரன் கோயில்.

குறுகலான படிக்கட்டுகளில், பிடிமானக் கம்பியைப் பிடித்தவாறுதான் மேலேறிச் செல்ல முடியும். மேலே, இயற்கையாக அமைந்த குகையில்  புடைப்புச் சிற்பமாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார் இந்திரன். 

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இந்திரன் கோயில் இருக்கிறது. இந்திரனின் ஆணையால்தான் தேவசிற்பியான விஷ்வகர்மா பாங்காக் நகரையே படைத்தார் என்கிற நம்பிக்கை அங்கு இருக்கிறது.

இறைக்கூறு தெய்வங்கள்- நெய்தல் திணை: வருணனுக்கும் பழந்தமிழர் வழிபாடு இருந்ததே அன்றி, தற்காலத்தில் பேரளவாக கோயில்கள் இல்லை. வருணன் நெய்தல் திணைக்கடவுள் என்கிற நிலையில் மற்ற திணை தமிழ் மக்களும் வருணனைப் பேரளாவாக கொண்டாடவில்லை. வருணனுக்கு கோவை மாவட்டம் நீலாம்பூரில் ஒரு கோயில் உள்ளது.

ஆகவே இற்றை தமிழர் வழிபடுகிற இறைக்கூறு தெய்வங்களுக்கான கோயில்கள் முல்லை திணைக்கான மாலிய கோயில்களும், பாலைத் திணைக்கான கொற்றவை கோயில்களுமே ஆகும். 

தெய்வங்களின் மூன்றாவது வகையான குலதெய்வங்கள் அனைத்தும் தமிழ்அடிப்படையிலேயே இருப்பதால் உங்கள் குலதெய்வங்களை நடப்பில் உள்ளபடியே அங்கீகரித்து கொண்டாடுங்கள்.

தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் கொண்டாடும் போது, அந்தக் கொண்டாட்டம் உங்கள் அதிகாரம் ஆகிறது. மாறாக அயல் அடையாளத்தில் கொண்டாடும் போது உங்கள் கேட்புகள் கடவுளை நேரடியாகச் சென்றடையாமல், அயலின் வரிசைப்பாட்டுக்கு உள்ளாகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். என்று கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,501.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.