Show all

இயல்அறிவு. அறிவியல். எது சரி? இடமாறு தோற்றப் பிழை வரிசையில்.

இடமாறு தோற்றப் பிழை என்றால் என்ன? அளவுகோல் கொண்டு சரியாக அளக்காத போது ஏற்படும் பிழை.’ இன்றைக்கு இப்படி குறுவினாவாகக் கேட்கப்படுகிற கேள்வி, ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆறாம் ஏழாம் வகுப்புகளில், இயல்அறிவு (சயின்ஸ்) பாடப்பிரிவில் இடமாறு தோற்றப் பிழை என்றால் என்ன? படம் வரைந்து விளக்குக என்று பெரிய கேள்வியாக இருந்தது.

இன்றைக்கு எண்ணிம முறைக் கருவிகள், இடமாறு தோற்றப்பிழை இல்லாமல் துல்லியமாக அளவைக் காட்டுகிறது. இடமாறு தோற்றப் பிழை என்பது அளவுகோலில் அளக்கும் போது, அளவுக் கோட்டை நேர் செங்குத்தாகப் பார்க்காமல், இடமிருந்தோ, வலமிருந்தோ, மேலிருந்தோ, கீழிருந்தோ பார்க்கும் போது கிடைக்கும் தவறான அளவாகும். 

இந்த இடமாறு தோற்றப் பிழை தவறை வாழ்க்கையில் பலஇடங்களில் நாம் அடிக்கடி முன்னெடுத்துச் செல்கிறோம். முதலாவதாக:- ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற சயின்சுக்கு நேரான தமிழ்ச் சொல்லை நிறுவுவதில் முன்னெடுக்கும் தவறாகும். காங்கிரசார் ஆட்சியின் போது தமிழ்வழிக் கல்வியில் சயின்ஸ் என்பதை விண்+ஞானம் =விஞ்ஞானம் என்று வழங்கினார்கள். தற்போது நாம் சயின்ஸ் என்பதை அறிவியல் என்பதாக வழக்கில் கொண்டிருக்கிறோம்.

தமிழ்மன்னன் கரிகாலன் உலகின் முதல் அணைக்கட்டை கட்டி நீர் மேலாண்மையை முன்னெடுத்தது நீர்மேலாண்மையியல். மாமன்னன் இராசராச சோழன் பெரிய கோயிலை கட்டுமானம் செய்தது கட்டிடவியல், அதில் சிற்பங்களைச் செதுக்கியது சிற்பவியல். சுவரில் கல்வெட்டுக்களை பதித்தது கல்வெட்டியல். உலகில் முதலாவதாக கிழமைகளுக்கு பெயர் சூட்ட தமிழன் கோள்களை ஆராய்ந்தது வானியல். இன்றைக்கு உலகம் முழவதும் பயன்படுத்துகிற எண்ணை தமிழன் உருவாக்கியது எண்ணியல். 

இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் பொதுத்தலைப்பாக சயின்ஸ் என்கிறார்கள். தமிழன் கட்டுமானம் செய்த நீர்மேலாண்மையியல், கட்டிடவியல், சிற்பவியல், கல்வெட்டியல், வானியல், எண்ணியல் என்பனவற்றில் எல்லாம் பொதுவாக இருக்கிற தலைப்பு “இயல்” என்பதாகும். ஆக சயின்சுக்கு நேரான தலைப்பு இயல் என்பதாகும். ஆக தமிழனிடம் இயல் முன்பே இருந்தது. தமிழனிடம் சயின்ஸ் முன்பே இருந்தது. சயின்ஸ் என்பதை இயற்றமிழ் என்று வழங்கினான் முந்தைத் தமிழன். 

இயற்றமிழ் என்று சொல்லுவதில் தமிழுக்கு மட்டுமான ‘சயின்ஸ்தமிழ்’ என்பதாக அமைகிறது என்று கருதினால்- இயல்நூல் என்றோ, இயல்பாடம் என்றோ இயல்அறிவு என்றோ சொல்லுவதே சரி. மாறாக ‘அறிவியல்’ என்று சொன்னால், சயின்ஸ் என்பது தமிழனுக்கு இதுவரை இருந்திராத அறிவுத்தலைப்பே சயின்ஸ் என்பதாகிவிடும். 

கட்டிடம் குறித்த இயல் கட்டிடஇயல் போல அறிவியல் என்பது ‘அறிவு குறித்த சயின்ஸ்’ என்பதற்கே பொருந்தும். அறிவைக் குறித்து படிப்பது ஒரு துறை அதுதான் அறிவியல். 

சயின்சையே அறிவியல் என்று சொல்லும் போது, ‘இயற்றமிழ்’ என்ற தலைப்பில் இதுவரை தமிழன் முன்னெடுத்து வந்த ‘சயின்ஸ்’ தமிழனுக்கு புதிது; அது ஐரோப்பியம் தந்தது என்றாகிவிடும். இது தமிழகக் கல்வித்துறை முன்னெடுக்கும் இடமாறுதோற்றப்பிழையாகும்.

இயல் என்பது இயமும் இயக்கமும் ஆகும். இயம் என்பது கோட்பாடு. இயக்கம் என்பது நடைமுறை. ஆக இயலுக்கு இயமும் இயக்கமும் உண்டு. இயல் உடையது இயற்கை. இயற்கைக்கு கோட்பாடும் நடைமுறையும் உண்டு. ஆக எந்த ஒன்றுக்கும் இயல் உண்டு. அதை இயல்பு என்கிறோம். ஆக இயல் என்பது கோட்பாட்டையும் நடைமுறையையும் விளக்குவது. தமிழ்முன்னோர் அதை இயற்றமிழ் என்றனர். உலகினருக்கும் இயல் என்கிற சயின்ஸ் இருப்பதால் நாம் இயல் என்று சொன்னாலே போதும். ஆனால் அதில் ஏதோ முழுமை இல்லாதது போல உணர்ந்தால் இயல்அறிவு என்று சொல்லலாம். இயல்அறிவு என்பதே சரி. அறிவியல் என்பது இயல்அறிவின் இடமாறுதோற்றப்பிழை ஆகும். 

இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. பொருட்களின் பரிமாணங்கள் குறித்து படிக்கிற தலைப்பை ஆங்கிலம் பிசிக்ஸ் என்கிறது. அதை நாம் பரிமாணவியல் அல்லது பரிஇயல் என்று சொல்ல வேண்டும். ஆனால் தமிழகக் கல்வித்துறை அதை இயல்-இயல் இயற்பியல் என்கிறது. இது சயின்சுக்கு நாம் சொல்ல வேண்டும் என்கிற இயல்அறிவு என்பதற்கு நேரானது. இதுவும் இடமாறு தோற்றப்பிழையாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.