Show all

முழுப்பாடல் தெரிவிப்பது என்ன? ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த வரி தெரியாத தமிழர் இருக்க மாட்டார்கள்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தொடங்கும் 192வது புறநானூற்றுப் பாடலின் இந்த முதல் அடியைத் தெரியாத தமிழர் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அந்த முதல்அடி எப்படி தமிழர்க்கு பெருமிதம் தரத்தக்கதோ அது போலவே பெருமிதம் கொள்ள தகுதியானதுதான் முழுப்பாடலும்.

07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புறநானூற்றுத் தொகுப்பில் 192வது பாடலாக வருவதுதான் கணியன் பூங்குன்றனாரின் இந்தப் பாடல். இவரின் கணியன் பட்டத்திற்கு உரிய கணியம் என்பது தமிழில் மிகப் பெரிய தலைப்பு. வெறுமனே நாள் கிழமை கணித்து பலன் கூறும் சோதிடம் அல்ல. 

உங்கள் இயல்பு குறித்த அறிவுத்துறை. உங்கள் இயல்புக்கான வாழ்க்கையை உங்களுக்கு கற்றுத் தருகிற அறிவுத்துறை. தலைவிதி என்பதை நீங்களே தீர்மானிக்கலாம் என்கிற அறிவுத்துறை. தலைவிதி என்று விட்டு விடுவதா? இது என்னுடைய இயல்பு இதை நான் அடைந்தே தீருவேன் இது என்னால் முடியும் என்று முயற்சியை முன்னெடுப்பதா? இரண்டும் உங்கள் முடிவுதான் என்கிற அறிவுத்துறை.

அந்த பெரிய தலைப்பிற்குரிய கணியத்தின் அடிப்படையையே இந்தப் பாடலில் கணியன் பூங்குன்றனார் விளக்கியுள்ளார். இந்தப் பாடலைப் பொருத்தி ஒவ்வொரு தமிழனும் தன்னுடைய முழு வாழ்க்கையையும் திட்டமிட்டுக் கொண்டு (அதாவது உலக இயல்களில், யாராலோ எழுதப் பட்டதாகக் கருதப்படுகிற உங்கள் தலைவிதியை, நீங்களே எழுதிக் கொள்ள முடியும் என்கிற “தமிழியல்” தமை முன்னெடுத்து) அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்பதாகும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

இந்தப் பாடலுக்கான பொருள்:
யாதொரு ஊரும் ஊரே என்று எனக்கான இடத்தையும், 
எல்லா மக்களும் எம் உறவினரே என்று எனக்கான தொடர்புகளையும் நானே வகுத்துக் கொள்ள முடியும்.
அவ்வாறு நானே எனக்கான வாழும் இடத்தையும், எனக்கான வாழ்க்கைத் தொடர்புகளையும் வகுத்துக் கொண்ட பிறகு, 
நமக்கு கிடைக்கிற நன்மைகளும், அது போலவே நமக்கு வந்து சேருகிற தீமைகளும், நம்மால் முன்னெடுக்கப் படுவதேயாகும். 

அடுத்தவர் காரணம் போல் தோன்றினாலும், அவர் முன்னெடுப்பதல்ல; அவர் முன்னெடுப்பதற்கு நாமே காரணம் ஆகிறோம். யார் என்றே அறியாத, நமக்கு தொடர்பேயில்லாத ஒருவரால் நமக்கு இன்பமோ துன்பமோ வருமா? அவரின் தொடர்பை அங்கீகரிப்பது நாம்தான் என்கிற நிலையில், நம்மை நாம் எவ்வளவு சிறப்பாகவும் வடிவமைத்துக் கொள்ள முடியும். எதுவும் அடுத்தவரால் வருவதில்லை
ஆக இந்த நன்மை தீமைகளின் பாற்பட்ட துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

அடுத்ததாக இயற்கையின் அனைவருக்குமான இயல்பானதான சாதல் புதுமை யானது இல்லை. வாழ்க்கையில் நாம் விதித்துக் கொண்ட நமது கோட்பாடுகளால்: நமது கோட்பாட்டை இப்படி வகுத்துக் கொண்டதால்- இன்பமோ, நமது கோட்பாட்டை இப்படி வகுத்துக் கொண்டதால் துன்பமோ என்று கோட்பாட்டை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், திருத்திக் கொள்வதற்கானதுமேயன்றி, மகிழ்வதற்கும், வருந்துவதற்குமானதல்ல இன்பமும் துன்பமும்.
அடுத்ததாக இயற்கையின் போக்கில் வாழுகிறவர்களின் வாழ்க்கையானது: பெரிய ஆற்றில் நீரின் போக்கிற்கு ஏற்ப ஓடும் தெப்பம்போன்று தட்டு தடுமாறி ஓடுமேயன்றி, அவர்கள் விரும்பம் சார்ந்து அமையாது. இதை நமக்கு முன்னால் இயற்கையின் போக்கில் வாழ்ந்து தெளிந்தவர்களின் அனுவங்களால் நாம் அறிவோம்.
ஆக இந்த இருமுறை வாழ்க்கையில் (முயற்சியில், இயற்கை போக்கில்) பிறந்து வாழ்வோரில், சிலர் தாழ்ந்து போவதும், சிலர் உயர்வதும்: முயற்சி, வகுத்துக் கொண்ட விதி, இயற்கையின் போக்கு, அறிந்து கொண்ட வகை, அறியாமை ஆகியவற்றின் பாற்பட்டது. என்பதால்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை. ஆகவே யாரும் தொடர்ந்து கற்றுக் கொண்டும், திருத்திக் கொண்டும்   வாழ்வதற்கானதே வாழ்க்கை. யாராலும், யாருக்கும் திட்டமிடப் பட்டதல்ல வாழ்க்கை. என்பதே இந்தப் பாடலின் பொருள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,191.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.