இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு நடுவண் அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை என விடையளித்தார். 23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு நடுவண் அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை என விடையளித்தார். இதில் இலங்கைத் தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்பதான வரலாற்றை திறந்து பார்ப்போம். இலங்கைவாழ் தமிழர்களில் இரண்டு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் இலங்கையில் சிங்களவர் குடியேற்றத்திற்கும் முந்தைய, தொல்குடி தமிழர்கள். மற்றொரு பிரிவினர் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் காடுதிருத்தும் வகைக்காக, தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட இந்திய அல்லது தமிழகத் தமிழர்கள். ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் காடுதிருத்தும் வகைக்காக, தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத் தமிழர்கள் குறித்து கடந்த கட்டுரை.1ல் பார்த்தோம். இலங்கையில் சிங்களவர் குடியேற்றத்திற்கும் முந்தைய, தொல்குடி தமிழர்கள் குறித்து அறிய வரலாற்றைப் புரட்டுவோம். பிரித்தானிய ஆட்சிக் காலத்திலேயே, இலங்கையில் வாழும் சிறுபான்மை தேசிய இனமக்களான இலங்கைத் தமிழர்களிடையே, தங்களது உரிமை மற்றும் அரசியல் விடுதலைக்காக தனி நாடு அல்லது தன்னாட்சி கோரும் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கைத் தமிழ் தேசிய விழிப்புணர்வு தொடங்கியது. பிரித்தானிய அரசால், இலங்கைக்கு சுதந்திரம் வழங்கக்கூடிய காலகட்டம் நெருங்கிய ஆண்டுகளில், பெரும்பான்மை சிங்களவர் மற்றும் சிறுபான்மை தமிழ் சமூகங்களுக்கிடையில் அரசியல் பதற்றம் உருவாகியது. வரும் காலத்தில் அரசியல் அடிப்படையாக பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதிக்கம் ஏற்படும் என்பதைக் கருத்தில்கொண்டு அவ்வாறு ஏற்படாமல் தடுக்க நாடாளுமன்றத்தில் ஐம்பதுக்கு-ஐம்பது என்ற விழுக்காட்டில் பிரதிநிதித்துவத்தை வழங்கவேண்டும் என தமிழருக்கான அமைப்பாகத் தொடங்கப்பட்டிருந்த தமிழ்க் காங்கிரஸ் கோரியது. இந்த கொள்கையால் நாடாளுமன்றத்தில் சிங்கள பெரும்பான்மையினருக்கு பாதி இடங்களும் மீதி பாதி இடங்கள் சிறுபான்மை சமூகங்களான இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், சோனகர் மற்றும் பிறருக்கு ஒதுக்கப்பட கேட்கப்பட்டது, ஆனால் இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் சிங்களர்களுக்கான அரசாங்கங்களாக இருந்தன, தமிழர்களுக்காக தொடங்கப் பட்ட அமைப்புகள் எதனாலும், தமிழர்களுக்காக சிறு துரும்பைக் கூட எடுத்துப் போட முடியாத நிலை தொடர்ந்து கொண்டேயிருந்தது. இதன் விளைவாக, தமிழ்தொடர்ஆண்டு-5071களில் (ஆங்கிலம்1970) முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் போராளிக் குழுக்கள் தோன்றின. தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்த வழிகாட்டியான அன்ரன் பாலசிங்கம், தமிழ் இளைஞர்கள் போராளிகளாக ஆனதற்குக் காரணங்களாக வேலையின்மை, உயர்கல்விக்கான வாய்ப்புகள் இல்லாமை, அந்நிய மொழித் திணிப்பு ஆகியவை என்று கூறுகிறார். மேலும் அவர் இந்த பிரச்சினைகளுக்கு பேரினவாத சிங்கள அரசாங்கமே பொறுப்பு என்று குற்றம்சாட்டினார். தமிழ் இளைஞர்களுக்கு இருந்த ஒரே வழி “தேச விடுதலைக்கான புரட்சிகர ஆயுதப் போராட்டமே” என்றானது என்று குறிப்பிட்டார். பல போராளிக் குழுக்கள் தோன்றினாலும் அதில் ஐந்து போராளி குழுக்கள் மட்டுமே வலுவான அரசியல் சக்கியாக இருந்தன அவை:- தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்) இதை விடுத்து வேறு குழுக்கள் தத்துவார்த்த ரீதியாக குறைபட்டுள்ளதால், அவற்றைத் தமிழ் தேசியப் பிரிவுகள் அல்ல. இந்த ஐந்து முதன்மைக் குழுக்களில், விடுதலைப் புலிகள் அமைப்பு தேசியக் கொள்கையில் மிக உறுதியான அமைப்பு ஆகும். ஏனென்றால், அதன் கொள்கைகள், ஆக்கபூர்வமான தமிழ் தேசிய அடித்தளம், தேசிய சுயநிர்ணயத்தின் மீதுள்ள பற்று போன்றவற்றின் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ் சமூகத்தின் முக்கிய பிரிவினர்களால் ஆதரிக்கப்பட்டது. இது தமிழ் ஈழம் என்று அழைக்கப்படும் தன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தனியாக அறங்கூற்றுமன்றங்கள், காவல்துறை, மனித உரிமை அமைப்பு, மனிதாபிமான உதவி குழு. நலவாழ்வுத் துறை, கல்வித் துறை, வங்கி (தமிழீழ வைப்பகம்), வானொலி நிலையம் (புலிகளின் குரல்), தொலைக்காட்சி நிலையம் (தமிழீழ தேசியத் தொலைக்காட்சி), தமிழீழத்திற்கான தேசிய அடையாளங்கள் போன்ற ஒரு தனி நாட்டுக்கு உரிய கட்டமைப்புடன் தனி அரசை நிர்வகித்தது. நான்காம் ஈழப்போர் என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற இறுதிப் போரைக் குறிக்கும். போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்த அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே, 10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5108 அன்று (26.07.2006) ஒரு முரண்நிலை தோன்றி ஒரு விரோதப் போக்கு தொடங்கியது. கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு 17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5109 அன்று (02.01.2008) அறிவித்தது. இதன்படி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அதிகாரப்பாடாக விலகுவதாகவும், அதற்கான 14 நாள் கால அவகாசத்தை வழங்குவதாகவும் இலங்கை அரசாங்கம், உடன்படிக்கையின் அனுசரணையாளரான நோர்வேயின் தூதரகத்திற்கு எழுத்து மூலம் அடுத்த நாளே அறிவித்தது. நான்கு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டிருந்த யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு அரசப்படைகள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டன. போரின் இறுதியான காலகட்டத்தில், வடகிழக்குப் பிரதேசத்தில் உள்ள நந்திக் கடலேரியைச் சூழ்ந்த பகுதியில் சண்டை மிக உக்கிரமாக நடந்தது. மூன்று இலட்சம் வரையான தமிழ்ப் பொதுமக்கள் போர் நடந்த இடத்தினுள்ளே முடக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற போரினால் இலங்கைப் படை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பகுதிகளையும் கைப்பற்றியது. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கடைசிப் பகுதியும் வந்தடைந்த, 04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5111 அன்று (18.05.2009) போர் முடிவுக்கு வந்ததாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் மரணமடைந்துவிட்டதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இந்த இறுதிப் போரில் இந்தியாவிற்கு வந்தவர்களே அகதிகளாக உள்ளனர். இவர்களும் கூட தங்கியிருக்கும் காலத்திற்கும், இலங்கையோடு இந்தியா பேசி தாங்கள் இலங்கை சென்று வாழ்வதற்கான சமாதான நிலையை ஏற்படுத்தித் தருவதற்கும், இந்தியா உதவ வேண்டும் என்றே கருதுகின்றனர். அவர்கள் விரும்புவது தாயகத்தில் அவர்களுக்கு உரிமையே, அதற்கான இந்தியாவின் ஒத்துழைப்பே என்பதாகவே அறிய முடிகிறது. நடுவண் பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அவர்களுக்கு கெடுபிடியாக இல்லாதவரை அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பதே உண்மை. நடுவண் பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தேவையற்றதுதான்- ஆனால் ஈழத்தமிழர்களை முன்னிட்டு அல்ல. ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பது தங்களுக்கான இந்தியாவின் தார்மீக ஆதரவு மட்டுமே. தமிழக கட்சிகளும் சரி, இந்தியாவை முன்பு ஆண்ட காங்கிரசு அரசும் சரி, தற்போது ஆளும் பாஜக அரசும் சரி நிறைவேற்றித் தருவதற்கான சிந்தனையே இவர்களிடம் இருந்ததும் இல்லை; தற்போதும் இல்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



