நடிகர் விஜய், நிதிநிறுவனர் அன்புச் செழியன், திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். 24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். இந்த நிறுவனம் அண்மையில் தயாரித்து வெளியிட்ட படம், பிகில். நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது இந்தப் படம், பிகில் படத் தயாரிப்புக்கு நிதியளித்தது, மதுரையைச் சேர்ந்த நிதிநிறுவனர் அன்புச்செழியன். இதனடிப்படையில், நடிகர் விஜய் மற்றும் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கினர். இந்த அதிரடி வருமானவரிச் சோதனை தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புச்செழியனின் மதுரை மற்றும் சென்னை அலுவலகங்கள், வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் இறங்கினர். மாஸ்டர் படத்தின் படபிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யையும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து அழைப்பாணை அளித்தனர். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய், கார் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். விஜய்யின் பனையூர் வீட்டில் 18 மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். வருமான வரித்துறை ஆணையரும், நடுவண் நேரடி வரிகள் வாரியத்தின் அதிகாரப்பாட்டு செய்தித்தொடர்பாளருமான சுரபி அலுவாலியா பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில், தமிழ் திரைப்படத் துறையில் முதன்மையான நபர்களின் இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்துவருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், நிதிநிறுவனர் மற்றும் படவணிகர்களக்கச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இவர்களுக்கு இடையேயான பொதுவான தொடர்பு, பிகில் படத்தின் வெற்றி அதைத் தொடர்ந்து வருமானம். சென்னை மற்றும் மதுரையில் இவர்களுக்குச் சொந்தமான 38 இடங்களில் சோதனை நடந்தது. தயாரிப்பாளருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்துவருகிறது. அவர்கள், படத் தயாரிப்பு மற்றும் வணிகம், திரையரங்குகள் ஆகியவற்றை நடத்திவருகின்றனர். நிறைய படங்களையும் தயாரித்துள்ளனர். அவர்களது அலுவலகங்களில் சோதனை செய்துவருகிறோம். அவர்களது வரவு-செலவு கணக்குகளை ஆராய்ந்துவருகிறோம். அதேபோல், குறிப்பிட்ட நடிகரைப் பொறுத்தவரையில், அசையா சொத்துகளில் அவர் செய்துள்ள முதலீடு மற்றும் படத்தில் நடித்ததற்காக அந்தத் தயாரிப்பாளரிடமிருந்து அவர் பெற்ற ஊதியம் ஆகியவை குறித்து விசாரித்துவருகிறோம். சில இடங்களில் சோதனையும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விஜய்யிடம் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்:- நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கு கொண்டிருந்த விஜய், வருமான வரித்துறையினரால் வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். ஆளும்கட்சிக்கு எதிராக இளைய சமுதாயத்தினரின் கோபத்தை வெளிப்படுத்துகிற வகையில் ‘மெர்சல்’, பிகில் திரைப்படங்களில் சில வசனங்களைப் பேசியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவார்கள். விஜய்யைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லையே தவிர, அரசியல் உணர்வோடு படங்களில் கருத்துகளை வெளியிட்டுவருகிறார். குறிப்பாக, நடுவண் பாஜக அரசின் சரக்குசேவைவரி, பணமதிப்பு நீக்கம் ஆகியவை குறித்து அவரது படங்களில் விமர்சனம் செய்யப்பட்டது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த வசனங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று விஜய்யின் பெயருக்கு முன்னால், ஜோசப் விஜய் என்று அழைத்து மதச் சாயம் பூசியதை அனைவரும் அறிவார்கள். இந்தநிலையில், வருமான வரித்துறையினர் விஜய் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்துவது ஏதோ ஒரு வகையில் அவரை அச்சுறுத்துகிற நடவடிக்கையாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. வருமான வரித்துறையின் கிடுக்குப் பிடியில் ரஜினிகாந்த் சிக்கி கொண்டிருப்பது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இச்சூழலில் தான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று எவரும் கூறிவிட முடியாது. இந்தநிலையில், தமிழக இளைஞர்கள் பட்டாளத்தின் கவர்ச்சிமிக்க நடிகரான விஜய், நடுவண் வருமான வரித்துறையின் சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதை ஏதோ வருமான வரித்துறையின் சோதனையாக மட்டும் கருத முடியாது. ஏனெனில் நடுவண் பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, நடுவண் புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகள் கடந்த சில ஆண்டுகளாக எத்தகைய சோதனைகளை எத்தனை முறை தமிழகத்தில் நடத்தியது என்பதையும், அதனுடைய தொடர் நடவடிக்கைகள் எந்த நிலையில் இருப்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் விஜய் மீது வருமான வரித்துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகளின் உள்நோக்கத்தை அறிந்துகொள்ளலாம். எனவே, விஜய் மீது வருமான வரித்துறை தொடுத்திருக்கும் சோதனைகள் மூலம் அவரது உரிமைக் குரலை ஒடுக்கி, அச்சுறுத்தி விடலாம் என மத்திய பாஜக அரசு கருதுமேயானால் அது வெறும் பகல் கனவாகத்தான் முடியும். இத்தகைய அச்சுறுத்தல்களுக்கெல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட உலகத்தினரால் இளைய தளபதி என்று அன்பு பெருக்கோடு அழைக்கப்படுகிற விஜய்யின் வீடுகளிலும் தயாரிப்பாளர், நிதிநிறுவனர் அன்புச் செழியன் சம்பந்தப்பட்ட மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனைநடத்தியிருக்கிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



