இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு நடுவண் அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை என விடையளித்தார். 23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு நடுவண் அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. காந்தியாரின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான தேசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடுவண் உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கோரிக்கை மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்சா உறுதியளித்து உள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதுபோல் இன்று பேட்டி அளித்த நடிகர் இரஜினிகாந்த் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய். இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை என விடையளித்தார். இதில் இலங்கைத் தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்பதான வரலாற்றைத் திறந்து பார்ப்போம். இலங்கைவாழ் தமிழர்களில் இரண்டு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் இலங்கையில் சிங்களவர் குடியேற்றத்திற்கும் முந்தைய தொல்குடி தமிழர்கள். மற்றொரு பிரிவினர் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் காடுதிருத்தும் வகைக்காக, தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட இந்திய அல்லது தமிழகத் தமிழர்கள். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால்:- குடியேற்றவாதக் காலத்தில், ஐரோப்பியக் குடியேற்றவாத வல்லரசுகள் தாம் கைப்பற்றிக்கொண்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெருந்தோட்டங்களை உருவாக்கினர். இப்பெருந்தோட்டங்களில், பெரிய பரப்பளவில் வணிக முதன்மைத்துவம் கொண்ட தேயிலை, இறப்பர், கரும்பு, காப்பி, போன்றவை பயிரிடப்பட்டன. இத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். பெரும்பாலும், இத்தேவைக்கு உள்ளூரில் தொழிலாளர்களைத் திரட்டாமல், வேறு நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டதைக் காண முடிகிறது. தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பாலும், தோட்டத்துக்கு உள்ளேயே வாழ்ந்தனர். இது தொழிலாளர்களைத் தமது இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவியது. தமிழ்நாட்டில் இருந்தும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர் மலாயா, இலங்கை, மொரீசியசு, போன்ற நாடுகளுக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர். இத்தொழிலாளர்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்ததுடன், குறைந்த வசதிகளுடனேயே வாழவேண்டியும் இருந்தது. இவ்வகையான பிணைப்பில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் எதுவும் இன்றிக் குடும்பம் குடும்பமாகப் பல தலைமுறைகள் தோட்டங்களுக்குள்ளேயே கூலிகளாக வாழ வேண்டியிருந்தது. இவர்களது உழைப்பு, தோட்டங்கள் இலாபமீட்ட உதவியது மட்டுமன்றி அவர்கள் பணிபுரிந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியது. குடியேற்றவாத முறை வீழ்ச்சியடைந்து, குடியேற்றவாத ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகள் விடுதலை அடைந்தபோது, பல நாடுகளில் தோட்டத் தொழிலாளர்களின் நிலை மேலும் சிக்கலடைந்தது. இவர்கள் பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டியவர்கள் ஆனார்கள். இலங்கை போன்ற நாடுகளில் இவர்கள் நாடற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்தியத் தலைமை அமைச்சராக லால் பகதூர் சாஸ்திரி இருந்த காலம் வரை, இந்தியா தெரிவிக்க விரும்பிய இலங்கைத் தமிழர்கள் என்றால், அவர்கள் இந்த நாடற்ற இலங்கை தோட்டத் தொழிலாளத் தமிழர்களே. இந்தத் தமிழர்களுக்காக, சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்று இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 9,75,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கை தலைமைஅமைச்சராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்திய தலைமைஅமைச்சரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் நாளது 14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5066 அன்று (30.10.1964) கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 5,25,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 3,00,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 1,50,000 பேர் விடுபட்டுப் போயினர். மூன்றாண்டுகளுக்க பிறகு அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அம்மக்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூன்று கூறாகபிரித்தது. இந்த ஒப்பந்தம் மற்றும் மேலும் பத்தாண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்பட்ட சிறீமா - காந்தி ஒப்பந்தங்களின் அடிப்படையில் 5,06,000 பேர் இந்தியக் குடியுரிமைக்கும், 4,70,000 பேர் இலங்கைக் குடியுரிமைக்கும் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதில் மிகுந்த தாமதம் நிலவியது. ஆனாலும், தமிழ்தொடர்ஆண்டு-5083 ல் (ஆங்கிம்1982) 86,000 விண்ணப்பங்கள் இந்திய உயர்தானிகரகத்தில் முடிவு எதுவும் இன்றியும், இந்தியக் கடவுச் சீட்டு வழங்கியோரில் 90,000 பேர் இன்னும் இலங்கையில் தங்கியிருந்த நிலையிலும், நிறைவேற்றுக் காலம் கழிந்துவிட்டதால், இவ்வொப்பந்தங்கள் இனிச் செல்லுபடியாகாது என இந்தியா அறிவித்தது. ஆக மொத்தம் இரண்டு ஒப்பந்தங்கள் மூலமாகவும் இரண்டு நாடுகளும் தோட்டத் தொழிலாளத் தமிழர்களுக்காக தமிழ்ச் சொலவடையில் சொல்லுவது என்றால் ஒரு ஆணியும் பிடுங்கவில்லை. இலங்கை தோட்டத் தொழிலாளத் தமிழர்களே இந்தியக் குடியுரிமைக்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பதே வரலாறு நமக்கு தெரிவிக்கும் உண்மையாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



